அமெரிக்க உதவி திட்டத்தின் தலைமை அதிகாரி சுமந்தா பவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார். இறுதி திகதி உறுதிப்படுத்தப்படாத நிலையில் செப்டெம்பர் மாதம் முதல் வாரத்தில் இவரது விஜயம் அமையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சர்வதேச நாணய நிதிய பேச்சுவார்தைகள், ஜெனிவா மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் மற்றும் சீன கப்பலை அனுமதித்த விவகாரம் உள்ளிட்ட பல முக்கிய விடயங்களை அரசாங்கம் எதிர்க்கொண்டுள்ள நிலையில் சுமந்தா பவரின் விஜயம் அமைகின்றது.
ஏழு நாட்களுக்கு பின்னர் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விட்டு வெளியேறியுள்ளது சீன இராணுவத்தின் மூலோபாய படைப்பிரிவின் உளவு கப்பலான யுவான் வோங் – 5. இந்தியா மற்றும் அமெரிக்காவின் நேரடி எதிர்ப்பிற்கு மத்தியில் இலங்கை எவ்வாறு சீன கப்பலுக்கு அனுமதி வழங்கியது என்பது தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்ற நிலையில் குறித்த உளவு கப்பலின் ஹம்பாந்தோட்டை விஜயத்தின் பின்னர் இலங்கையின் எதிர்பார்ப்பான 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை சீனா வழங்கும் என்று பெய்ஜிங்கில் உள்ள இலங்கை தூதுவர் பாலித கோஹன குறிப்பிட்டிருந்தார்.
இதனடிப்படையிலேயே கப்பலை அனுமதிக்கவும், இதனால் ஏற்பட கூடிய இந்தியாவின் எதிர்ப்பை சமாளிக்க அவசரமாக டோனியர் – 228 கண்காணிப்பு விமானத்தை கையளிக்கும் நிகழ்வை ஜனாதிபதி தலைமையில் ஏற்பாடு செய்ய அரச உயர் மட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் ஒரு கல்லில் இரு மாங்காய்களை குறிவைத்த இலங்கையின் நகர்வுகள் தற்போது சஞ்சலத்தில் உள்ளதாகவே அவதானிக்க முடிகின்றது.
அதாவது சீனாவிடமிருந்து 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக பெற்று விடலாம் என்ற எதிர்பார்ப்பு தற்போதைக்கு ஏமாற்றத்தையே தந்துள்ளது. இவ்வாறான கடன்கள் வழங்கும் போது சில கொள்ககைகளை பின்பற்றுவதாக சீன தரப்பு தெரிவித்துள்ளது. அதே போன்று யுவான் வோங் – 5 கப்பல் இலங்கையின் அதிகாரப்பூர்வமான அனுமதியின் பின்னரே சீனாவிலிருந்து ஹம்பாந்தோட்டை நோக்கிய பயணத்தை ஆரம்பித்தது. ஆகஸ்ட் 11 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடவிருந்த நிலையில் அரசாங்கத்தின் எதிர்ப்பையடுத்து 5 நாட்கள் கடலிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் கடும் அதிருப்தியிலேயே பெய்ஜிங் உள்ளதாகவும் சீன தரப்பு குறிப்பிட்டுள்ளது.
மறுப்புறம் கடும் எதிர்ப்பையும் மீறி சீன உளவு கப்பலை அனுமதித்தமையால் இந்தியா – அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுமே கொழும்பின் நகர்வுகளை தீவிரமாக கண்காணிக்க தொடங்கியுள்ளன. இந்தியா ஏற்கனவே இலங்கை ஊடான தனது கடல் எல்லைகள் மீதான பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதுடன் சிறப்பு கண்காணிப்பு நடவடிக்கைகளையும் அதிகரித்துள்ளது. அதே போன்று இந்தியாவின் தேசிய பாதுபாப்பிற்கு இலங்கையூடான அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதால் கச்சைத்தீவை மீள பெற வேண்டும் என்ற அரசியல் மட்ட பிரசாரங்களும் அங்கு அதிகரித்துள்ளன. எனவே இலங்கை குறித்து டெல்லியின் அவதானிப்புகளும் நகர்வுகளும் புதிப்பிக்கப்பட்டுள்ளமையi உணர முடிகின்றது.
அதே போன்று இலங்கை எதிர்க்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு இறுதி தீர்வாகவே சர்வதேச நாணய நிதியம் காணப்படுகின்றது. சர்வதேச நாணய நிதிய பேச்சுவார்த்தைகளுக்கும் அடுத்த மாதம் 12 ஆரம்பிக்கப்படவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரிலும் அமெரிக்காவின் ஒத்துழைப்புகள் அரசாங்கத்திற்கு இன்றியமையததாகும்.
ஏனெனில் இந்த இரு விடயங்களிலுமே அமெரிக்காவின் ஒத்துழைப்புகள் கிடைக்கப்பெற்றால் இலங்கைக்கு சாதகமான சூழல் ஏற்படும். ஆனால் சீன கப்பலை அனுமதித்த விவகாரத்தில் அமெரிக்க இராஜதந்திர ரீதியிலான அழுத்தத்தங்களுக்கு தயாராகி வருவதாக கொழும்பின் முக்கிய மூலங்கள் ஊடான தகவல்கள் கசிந்துள்ளன. இதனடிப்படையில் சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சு வார்த்தைகளின் போது இலங்கைக்கு அமெரிக்காவின் ஒத்துழைப்புகள் மட்டுப்பட்டதாகவே இருக்கலாம்.
மறுப்புறம் அமெரிக்க உதவி திட்டத்தின் தலைமை அதிகாரியான சமந்தா பவரை கொழும்பிற்கு அனுப்புவதற்கும் வோஷpங்டன் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியை பொறுப்பேற்ற முதல் நாளில் சமந்தா பவரை தொடர்புக்கொண்டு சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புகளுக்கு உதவி கோரியிருந்தார். சர்வதேச நாணய நிதியம் உதவி திட்டங்களை பெறுவதற்கு வழிமுறை காணப்படுவதாகவும் அதனை பின்பற்றும் போது அதற்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்குவகவே சமந்தா பவர் இதன் போது பதிலளித்திருந்தார்.
எனவே சமந்தா பவரின் இலங்கை விஜயம் முக்கியமானதாகவே கருதப்படுகின்றது. மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் போன்ற விடயங்களில் சமந்தா பவர் கூடுதலாக அவதானம் செலுத்தக்கூடியவர். செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பிக்கப்படவுள்ள மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் அண்மித்த காலப்பகுதியிலேயே சமந்தா பவரின் இலங்கை விஜயம் அமையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த மாதம் 25 – 27 திகதிகளில் இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
லியோ நிரோஷ தர்ஷன்