அரசியல் கைதிகளை விடுவிக்கும் மாயத் தோற்றமா?

141 0

அண்மைக்காலத்தில் சமூக வலைத்தளங்களில் மாவீரர்களின் படங்களையும் தேசிய தலைவருடைய புகைப்படங்களை வைத்திருந்ததாக சந்தேகிக்கப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருந்தநிலையில், அவர்களை பிணையில் விடுவித்து அரசியல் கைதிகளை விடுவிக்கும் மாயத் தோற்றத்தை ஏற்படுத்த முற்படுகின்றனரோ என்ற சந்தேகம் ஏற்படுகின்றது என குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் தெரிவித்தார்.

அரசியல் கைதிகளின் உறவினர்கள் இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊடக சந்திப்பிலேயே முருகையா கோமகன் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், பத்து வழக்குகளில் 22 பேரும், தண்டனை விதிக்கப்பட்டவர்கள் மேன்முறையீடு செய்தவர்கள் என 24 பேருமாக மொத்தம் 46 தமிழ் அரசியல் கைதிகள் காணப்படுகின்றனர். இதில் பெண்  அரசியல் கைதி ஒருவரும் உள்ளடங்குகின்றார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஷ்வரனை தொடர்பு கொண்ட போது 46 அரசியல் கைதிகளின் விபரங்களை வழங்கியிருந்தோம். அதனுடைய தொடர்ச்சியாக வடமாகணத்தினுடைய ஆளுநரையும் தொடர்பு கொண்டு அந்த விவரங்களை அனுப்பி வைத்திருந்தோம். வேறு யாரும் தொடர்பு கொள்ளும்பட்சத்தில் அந்தப் பெயர் பட்டியல் கையளிப்பதற்கு தயாராக இருக்கின்றோம்.

இந்த விடயத்தில் நீதி அமைச்சர் அரசியல் கைதிகளில் ஒரு பகுதியினரை தற்போதைக்கு விடுதலைசெய்யவுள்ளதாக ஊடகங்களூடாக அறிய கிடைத்துள்ளது. இந்த விடயத்தில் எமக்கு பாரிய சந்தேகம் காணப்படுகின்றது. இந்த வருடம் ஏப்ரல் மாதம் புதிய மகஸின் சிறைச்சாலைக்கு சென்ற   ஜனாதிபதியின் ஆலோசனை சபையின் தவிசாளர் நீதியரசர் அசோக டீ சில்வா , சொலிசிட்டர் ஜெனரல் சுகத கம்லத் ஆகியோர் பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களையும் வழக்குத் தாக்கல் செய்யப்படாதவர்களின் விடுதலை தொடர்பாக ஆராயவே தமக்கு உரித்துள்ளதென அரசியல் கைதிகளிடம் தெரிவித்துள்ளனர்.

தண்டனை அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் தங்களிடம் இல்லை என்று தமிழ் அரசியல் கைதிகளிற்கு தெரியப்படுத்தி இருக்கின்றார்கள்.இந்த கூற்று

எமக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அண்மைக்காலத்தில் சமூக வலைத்தளங்களில் மாவீரர்களின் படங்களை தேசிய தலைவருடைய புகைப்படங்களை வைத்திருந்ததாக சந்தேகிக்கப்பட்டவர்கள் கைது செய்திருந்தநிலையில் அவர்களை பிணையில் விடுவித்து அரசியல் கைதிகளை விடுவிக்கும் மாஜத் தோற்றத்தை ஏற்படுத்த முற்படுகின்றனரோ என்ற சந்தேகம் ஏற்படுகின்றது.

அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். 2019 க்கு பின்னர் 112 பேர் கைது செய்யப்பட்டவர்கள். அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.  சிறைச்சாலையில் தற்போது 25க்கும் 30க்கும் இடைப்பட்டவர்களே அண்மைய காலங்களில் கைது செய்யப்பட்டவர்களாக உள்ளனர்.

அரசியல் கைதிகளின் ஒரு பகுதியினரை விடுதலை செய்வதாக 2015 ஆம் ஆண்டு இதே நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.கடந்த வருடம் 16 தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்துவிட்டு, அரசியல் கைதிகளின் விடுதலைக்கு இது நல்ல ஆரம்பமென உலகம் பூராக மார்தட்டி சொன்னார்கள். அது நடைபெறவில்லை.

நாட்டின் பொருளாதாரம் பெரிய பாதிப்பை சந்தித்துள்ள நிலையில் அதனை சீர்படுத்த அரசாங்கத்தில் உள்ளவர்கள் முயற்சி எடுப்பதாக தெரியவில்லை.பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்று சொன்னால் நல்லிணக்கம் ஏற்பட வேண்டும்.

புலம்பெயர் தேசத்திலுள்ள 361 பேர் இலங்கை அரசாங்கத்தின் கறுப்பு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருக்கின்றனர். அதை செய்ய கூடியதாக இருந்தால் அது நடைமுறைக்கு வருமாக இருந்தால், கண்ணுக்கு முன்னால் இருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகளை ஏன் விடுவிக்க முடியாது. அவர்களை விடுதலை செய்யும் பட்சத்தில் அது தொடக்கப்புள்ளியாக இருக்கும்.

நல்லாட்சி அரசாங்கத்தில் பிரதமராக இருந்தவர் தற்போது ஜனாதிபதியாக இருக்கின்றார். அவருக்குரிய அதிகாரத்தின்படி தண்டனை பெற்றுள்ளவர்களை விடுவிக்க முடியும். உதாரணத்துக்கு நல்லாட்சி காலப்பகுதியில் ஜனாதிபதியாக இருந்த மைத்திரி தன்னை கொல்லவந்ததாக கூறப்படும் வழக்கு உட்பட இரண்டு வழக்குகள் இருந்த போதும் இரவோடு இரவாக நீதிபதி முன் அழைத்துச் சென்று அந்த வழக்குகளிலிருந்து விடுவித்து மறுநாள் விடுவிக்கப்பட்டார்.

ஜனாதிபதி நினைத்தால் நிச்சயமாக 46 தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய முடியும். இந்த விடயங்களை கருத்திற்க் கொண்டு பாதிக்கப்பட்ட பெற்றோர்களின்

கண்ணீரை துடைப்பதற்கு இருக்கின்ற வழிமுறைகளை பயன்படுத்தி தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றார்.

மேலும் இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அரசியல் கைதிகளின் உறவினர் ஒருவர், 26 ஆண்டுகளாக சிறையில் உள்ள தனது சகோதரரை அரசாங்கம் இம்முறையாவது விடுவிக்க வேண்டும். நாங்கள் குடும்பத்துடன் சேர்ந்து வாழ்வதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.