அங்கவீனமுற்றவர்களுக்காக அரசாங்கத்தின் நிதி அனுசரணையை அதிகரிக்க நடவடிக்கை

176 0

சுயதொழில்களில் ஈடுபட்டுவரும் அங்கவீனமுற்றவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுவரும் நிதி அனுசரணைகளை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.

பல்வேறு குறைபாடுகளுக்கு ஆளாகி இருக்கும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான அங்கவீனமுற்றவர்கள் நாடு பூராகவும் பல்வேறு சுயதொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு அங்கவீனமுற்றவர்கள் வருடத்துக்கு சுமார் 500 பேர்வரை சுயதொழிலுக்காக விண்ணப்பிக்கின்றனர்.

இவ்வாறானவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிதி உதவிகளை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தி இருக்கின்றது. இதேவேளை, அங்கவீனமுற்றவர்களுக்காக செயற்பட்டுவரும் செயலாளர் நாயக காரியாலயம் ஊடாக  சுயதொழில் ஒன்றை ஆரம்பிப்பதற்காக  அங்கவீனமுற்ற நபர்களுக்கு 25ஆயிரம் ரூபா நீதி வழங்கப்படுகின்றது.

அத்துடன் அங்கவீனமுற்ற பிரஜைகளாக சுயதொழில்களில் ஈடுபட்டுவருபவர்களுக்காக பெற்றுக்கொடுக்க முடியுமான நிவாரணங்களை தொடர்ந்தும் வழங்குவது தொடர்பில் குறித்த பிரிவுக்கு கவனம் செலுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் பிரதி சபாநாயகர் ஊடக பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.