காலி – முகத்திடலை அண்மித்து ‘கோட்டா கோ கம’ என்ற தொனிப்பொருளில் அமைக்கப்பட்டிருந்த ஆர்ப்பாட்ட தளத்தில் 49 இலட்சத்திற்கான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்தோடு காலி முகத்திடலை அண்மித்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள சேதத்திற்கான நஷ்டஈட்டை ஆர்ப்பாட்டக்காரர்களிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கான சட்ட ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் , அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இது தொடர்பில் அமைச்சினால் இன்று திங்கட்கிழமை வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
‘ காலி முகத்திடல் பகுதியில் ஏற்பட்டுள்ள சேதங்கள் தொடர்பில் மதிப்பீடு செய்து அறிக்கையை பெற்றுக் கொள்வதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த இடத்தை மீளப் புனரமைத்தல் மற்றும் ஏனைய அடிப்படை தேவைகளுக்காக ஒன்றரை இலட்சம் ரூபாவும் , புற் தரைகளை மீள உருவாக்குவதற்கு 47 1/2 இலட்சம் செலவிடப்பட வேண்டியுள்ளது.
நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான காலி முகத்திடலை அண்மித்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள சேதத்திற்கான நஷ்டஈட்டை ஆர்ப்பாட்டக்காரர்களிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கான சட்ட ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு , விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி சுமார் 3 மாதங்களாக ஆர்ப்பாட்டக்காரர்கள் காலி முகத்திடலில் அனுமதியின்றி தங்கியிருந்தனர். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதையடுத்து , அங்கிருந்து செல்லுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதற்கமைய அங்கிருந்து அவர்கள் வெளியேறியிருக்க வேண்டும். ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கியிருந்த காலி முகத்திடல் பொது சொத்தாகும்.
இங்கு அமைக்கப்பட்டிருந்த அனுமதியற்ற கூடாரங்களினால் பொது மக்களுக்கு அந்த பகுதிகளுக்கு சுதந்திரமாகச் செல்லக் கூடிய உரிமைக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டிருந்தது. இவை அனைத்தும் நகர அபிவிருத்தி சட்டத்தை மீறும் செயற்பாடாகும். அதற்கமைய இதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு அதிகாரமுள்ளது. ‘ என்று குறிப்பிடப்பட்டுள்ளது