கோட்டாவின் ஆட்சிக்காலத்தில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையவில்லை என்கின்றார் நாலக கொடஹேவா

188 0

கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையவில்லை என்றும், போருக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த மூன்று அரசாங்கங்களும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா தெரிவித்தார்.

2009-2015 காலப்பகுதியில் நாட்டின் கடன் 2200 பில்லியனிலிருந்து 7400 பில்லியனாக அதிகரித்தது என்றும் பின்னர் அதிக வட்டி விகிதத்தில் குறுகிய காலத்திற்கு கடன்களை எடுக்க ராஜபக்ச அரசாங்கம் ஆரம்பித்தது என்றும் குற்றம் சாட்டினார்.

மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் தொடர்ந்தும் கடன்களை பெற்று வருமானத்தை ஈட்டாத அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தியது என்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தியின் பின்னணியில் பெருமளவு வீண்விரயமும் ஊழலும் இடம்பெற்றதாகவும் சுட்டிக்காட்டினார்.

இதனை அடுத்து ஆட்சிக்கு வந்த மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கங்களும், முன்னைய அரசாங்கமும் கடந்த அரசாங்கத்தை விட வீண் செலவுகள் மற்றும் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாகவும் நாலக கொடஹேவா தெரிவித்தார்.

இதன்காரணமாக அந்தக் காலப்பகுதியில் கடன் சுமை 7400 பில்லியன் ரூபாயில் இருந்து 13,000 பில்லியன் ரூபாயாக அதிகரித்தது என்றும் நாலக கொடஹேவா கூறினார்.

தொடர்ந்து கோட்டாபய ராஜபக்ஷவை ஆட்சிக்கு கொண்டுவர கடுமையாக உழைத்த குழுவினர் பொருளாதார முகாமைத்துவ திட்டத்தை தயாரித்த போதும், அவர் ஆட்சிக்கு வந்த பின்னர் அதே நபர்களிடம் பொருளாதாரத்தை ஒப்படைத்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார்.