தோற்றுப்போனதை விரும்பாத கோதா தோல்வியை ஏற்று நாடு திரும்புவாரா?

199 0

காலிமுகப் போராட்டம் முனைப்புப் பெற்ற வேளையில் ராஜபக்ச குடும்பத்தினரை ஒவ்வொருவராக பதவி இழக்கச் செய்தபின்னரும் தோற்றுப்போன தலைவராக பதவி விலக மறுத்தவர் கோதபாய. அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லையெனக் கூறி அதுவரை தம்மைப் பதவி தொடர அனுமதிக்குமாறும் யாசித்தவர் இவர். இப்போது தமது தோல்வியை ஏற்றுக்கொண்டு இலங்கை திரும்ப உண்மையாகவே இவர் விரும்புகிறாரா?

இலங்கை அரசியலில் சாத்திரக்காரர்களையும் குடுகுடுப்பைக்காரர்களையும்விட சில அரசியல்வாதிகளே எதிர்கால ஆருடம் கூறுபவர்களாக மாறியுள்ளனர். கடந்த சில நாட்களாக வெளிவரும் சில செய்திகளுக்கு சில அநாமதேயங்கள் மூலமாக உள்ளன.

தற்போது தாய்லாந்தில் விடுதி ஒன்றுக்குள் முடங்கிக் கிடக்கும் கோதபாய பற்றி வெளிவரும் செய்திகளையே இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது.

கோதபாயவுக்கு எப்போதும் ஒரு ஜனாதிபதிக்குரிய சிறப்புரிமைகள் உண்டு, அவருக்குரிய பாதுகாப்புகளை ரணில் ஏற்படுத்த வேண்டும், அவருக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அரசின் கடமை, கோதா நாடு திரும்பும்போது அவரை வரவேற்க ஏற்பாடு மும்முரம் என்று ஒரு தொகுதி செய்திகள் ஊடகங்களில் செட்டை கட்டிப் பறக்கின்றன.

கோதபாய மீண்டும் அரசியலுக்கு வரவுள்ளார், பெரமுனவின் தேசியப்பட்டியலூடாக அவரை எம்.பியாக்க நடவடிக்கை, போராளிகளுக்கு பயந்து அவர் வெளிநாட்டில் ஒளிந்திருப்பதை ஏற்க முடியாது என்பவை இன்னொரு வகையான செய்திகள்.

இது தொடர்பாக ஜனாதிபதி ரணில் இதுவரை இரண்டு தடவைகள் மட்டும் வாய் திறந்துள்ளார். கோதபாய நாடு திரும்பும் சூழ்நிலை இப்போதில்லை என்று இரண்டு வாரங்களுக்கு முன்; சொன்னார். அவர் நாடு திரும்புவது பற்றி தமக்கு எதுவுமே தெரியாது என்று இப்போது கூறுகிறார்.

இதற்கு மறுத்தான் கொடுப்பதுபோல இரண்டு செ;யதிகள் வந்துள்ளன. கோதபாயவின் மிரிகான இல்லத்துக்கு கடும் பாதுகாப்பை பொலிஸ்மா அதிபர் ஏற்படுத்தியுள்ளார் என்பது ஒன்று. கோதபாயவுக்கு எட்டடுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென்ற கோரிக்கை அடுத்தது.

இவைகள் எல்லாவற்றையும் தாண்டி இன்னொரு அதிமுக்கியமான செய்தியும் உண்டு. கோதபாய கிறீன் கார்ட் கோரி அமெரிக்காவிடம் விண்ணப்பித்துள்ளார் என்பது அது. கோதாவின் மனைவி அயோமா அமெரிக்கா பிரஜாவுரிமை வைத்துள்ளார். இவர்களின் மகனும் மருமகளும் அமெரிக்க பிரஜாவுரிமையுடன் அங்கு வாழ்கிறார்கள். அதனால் தமக்கு கிறீன் கார்ட் பெற முடியுமென கோதா நம்புகிறார்.

ஏற்கனவே இரட்டைப் பிரஜாவுரிமை பெற்று அமெரிக்காவில் வாழ்ந்த இவர் தமது அண்ணன் மகிந்தவின் வேண்டுகோளின் பேரில் அமெரிக்க பிரஜாவுரிமையை ரத்துச் செய்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு 69 லட்சம் சிங்கள மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்றவர்.

பத்தொன்பதாவது அரசியல் திருத்தம் காரணமாக மகிந்த மூன்றாவது தடவையும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாதிருந்தார். மற்றைய சகோதரரான பசில் இரட்டைப் பிரஜாவுரிமையுடன் இருந்ததால் அவரும் போட்டியிட முடியவில்லை. குடும்ப இளவரசராக போற்றப்படும் நாமல் ராஜபக்சவை சில ஆண்டுகளின் பின்னர் வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு தயார்படுத்தும்வரை குடும்பத்தில் எவராவது ஒருவர் ஜனாதிபதியாக வரவேண்டுமென்ற சுயஇச்சை காரணமாகவே கோதாவை மகிந்த களம் இறக்கினார் என்பது பகிரங்க ரகசியம்.

ஒருவாறு அடுத்த ஓரிரு தேர்தல்கள்வரை ஜனாதிபதிக் கதிரையை வைத்திருந்தால், அதன் பின்னர் நாமல்தான் ஜனாதிபதி என்ற கனவில் சஞ்சரித்த மகிந்த, யதார்த்தத்தை புரிந்து கொள்ளவில்லை.

ஒருவகையில் பார்க்கின், இது பொரிமாத் தோண்டி கதைதான். ஆசை அண்ணனால் ஜனாதிபதிக் கதிரையில் ஏற்றப்பட்ட அன்புத் தம்பி கோதா, தாம் மட்டும் பதவி இழக்கவில்லை. ராஜபக்ச குடும்பத்தினர், அவர்களின் வாரிசுகள் அனைவரையும் அடித்துத் தள்ளிவிட்டு, எவருக்கும் சொல்லாமல் கொள்ளாமல் நாட்டை விட்டு ஓடி நாடோடியாக இதனை எழுதும் வேளையில் தாய்லாந்து ஹோட்டலுக்குள் மனைவியுடன் தங்கியுள்ளார்.

சொல்லாமற் கொள்ளாமல் ஓடினார் என்று சொல்வதற்கு துணையாக நிற்பது அண்மைய மகிந்தவின் கூற்று. கோதபாய ஏன் நாட்டைவிட்டு ஓடினார் என்பது தமக்குத் தெரியாது என்று ஊடகங்களுக்கு மகிந்த சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

இந்தப் பின்னணியில் கோதபாயவின் மீள்வருகை பற்றி வெளிவரும் செய்திகளையும் தகவல்களையும் வேறொரு கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். மகிந்த ஜனாதிபதியாக பதவி வகித்த பத்தாண்டுக் காலத்தில் பின்பற்றப்பட்ட ஒருவகைப் பாணியே மீண்டும் இலங்கை அரசியலில் செயற்பட ஆரம்பித்துள்ளது. கெகலிய ரம்புக்வெல, ஜோன்ஸ்ரன் பெர்ணான்டோ, மகிந்தானந்த அளுத்கமகே என மூவர் அப்போது அமைச்சர்களாக இருந்தனர். இவர்களை மகிந்தவின் – பொக்கற் நாய்க்குட்டிகள் என்றே அழைப்பர்.

இவர்கள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு ஊடகங்களுடன் தொடர்பு இருந்தது. இதனைப் பயன்படுத்தி குறிப்பிட்ட ஒரு விடயத்தை வெவ்வேறு வகையில் எவரது பெயரையும் குறிப்பிடாது அந்தந்த ஊடகங்களில் வெளியிடச் செய்து விடுவார் மகிந்த. செய்தி வழங்கியவரின் பெயர் எங்கும் தெரிவிக்கப்படுவதில்லை.

இந்தச் செய்திகளுக்கான பிரதிபலிப்பு என்ன என்பதை நாடி பிடித்துப் பார்க்கும் மகிந்தவின் உத்தி இது. அந்தச் செய்திக்கு எதிர்ப்புகள் கிளம்பின் அவரே ஊடகங்களோடு தொடர்பு கொண்டு அது தவறு என தெரியப்படுத்துவார். ஆனால் எதிர்ப்புக் கிளம்பாவிடின் அதனை செயற்படுத்திவிடுவார்.

மகிந்தவின் அன்றைய வழித்தடத்தில் இப்பொழுது பசில் ராஜபக்ச நடைபயில்கிறார். அதே கெகலிய ரம்புக்வெலவுடன் பந்துல குணவர்த்தன, பிரசன்ன ரணதுங்க ஆகிய அமைச்சர்கள் இன்று வாலாட்டி வேலைகளைச் செய்கின்றனர்.

கோதபாய எவ்வாறான நெருக்கடியில் நாட்டைவிட்டு ஓடிப்போனார் என்பது அனைவரும் அறிந்த சமாசாரம். தமது பதவியை தக்கவைக்க முதலில் மகிந்த, சமல் ஆகிய சகோதரர்களையும், நாமல் மற்றும் சசீந்திரா ஆகிய பெறாமக்களையும் அமைச்சர் பதவிகளை துறக்க வைத்தார்.

பின்னர், அடுத்த சகோதரர் பசிலை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வைத்தார். ஐக்கிய தேசிய கட்சியை கவிழ்த்து தாமும் தேர்தலில் தோல்வியுற்று பூச்சியத்தின் மன்னனாகவிருந்த ரணிலை இழுத்து வந்து பிரதமராக்கினார். இன்னும் என்னென்னவோ எல்லாம் பூட்டிய கதவுக்குள் செய்து பார்த்தார்.

69 லட்சம் மக்களின் வாக்குகளினால் ஜனாதிபதியானவன் நான். அவர்கள் இன்னும் என்னுடனேயே இருக்கிறார்கள். தோற்றுப்போன ஒருவராக பதவி துறக்க தாம் விரும்பவில்லை என்று சொல்லிப் பார்த்தார்.

மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மாட்டேன், எனது பதவிக்காலம் முடியும்வரை ஜனாதிபதியாக இருக்க விடுங்கள் என்று இறுதியில் மன்றாடியும் பார்த்தார். யூலை 9ம் திகதி இவை அனைத்துக்கும் போராட்டக்காரர்கள் முடிவு கட்டினர்.

2019 நவம்பர் பத்தொன்பதாம் திகதி இலங்கையின் எட்டாவது ஜனாதிபதியாக பதவி ஏற்ற நந்தசேன கோதபாய என்ற முன்னாள் ராணுவ அதிகாரி, 2022 யூலை 14ம் திகதி சிங்கப்பூரில் இருந்தவாறு தமது பதவியை ராஜினாமா செய்து, இலங்கையின் அரசியல் வரலாற்றில் துரத்தியடிக்கப்பட்டு பதவியிழந்த முதலாவது ஜனாதிபதி என்ற பெருமையைப் பெற்றார். இரண்டு வருடம் ஏழு மாதம் இருபத்தைந்து நாட்களுடன் இவரது பதவிக்காலம் முடிவுற்றது.

காலிமுகப் போராட்டத்தின் மூலக்கோரிக்கை கோதா கோ ஹோம் என்பதுவே. அதாவது ஜனாதிபதிப் பதவியை விட்டு வெளியேறு என்பதுதான். அதற்கிணங்க இவர் மறுத்ததால்தான் இவர் மீதான அம்பு மற்றைய ராஜபக்சக்கள் மீது பாய்ந்து அவர்களை பதவியிழக்கச் செய்தது.

மூன்று மாதங்களின் பின்னர் தனிமரமாக நின்ற கோதாவும் பதவி துறந்தார். இவரை நாட்டைவிட்டு ஓடுமாறும், தலை மறைவு வாழ்க்கை மேற்கொள்ளுமாறும், நாடோடியாகத் திரியுமாறும் ஒருவரும் கேட்கவில்லை. ராஜபக்சக்கள் மட்டுமன்றி இவரால் பிரதமர் கதிரை பெற்ற ரணில்கூட அப்படிக் கேட்கவில்லை.

ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் தாக்கியபோது பின்கதவால் பாய்ந்து சென்று கடற்படைக் கப்பலில் ஏறி தப்பியோடி மாலைதீவு, சிங்கப்பூர், தாய்லாந்து என்று திரிவதன் காரணமென்ன? மகிந்த கூறியது போன்று இன்றுவரை இது மூடுமந்திரமாகவே உள்ளது.

இந்த நிலையில் அவர் தொடர்பாக வெளிவரும் செய்திகள் விசித்திரமானவை. அவர் இலங்கைப் பிரஜை. எப்போதும் நாடு திரும்ப முடியும், வெளியேறவும் முடியும். இதற்கு எவரிடமும் அனுமதி பெறத் தேவையில்லை. இவைகளை அலசிப் பார்க்கையில் சில கேள்விகள் எழுகின்றன.

கோதபாய உண்மையாகவே இலங்கை திரும்ப விரும்புகிறாரா? அதற்கான பாதுகாப்பை கேட்கிறாரா? அமெரிக்க கிறீன் கார்ட் பெற்று அங்கு செல்வதை அவர் விரும்பவில்லையா? அரசியலில் குள்ளநரி என வர்ணிக்கப்படும் ரணில், கோதாவின் மீள்வரவை மனதார ஏற்றுக் கொள்வாரா? இவற்றுக்கான பதில்கள் ஆயிரம் அமெரிக்க டாலர்களுக்குச் சமமானவை.

பனங்காட்டான்