அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் 2 நீதிபதிகள் நாளை விசாரணை

173 0

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே மோதல் வெடித்த நிலையில் கடந்த மாதம் 11-ந்தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணையை சென்னை ஐகோர்ட்டு மீண்டும் நடத்த சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியது. இதன்படி, சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஜெயச்சந்திரன் வழக்கு விசாரணையை நடத்தினார்.

அப்போது அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று அதிரடியாக அவர் தீர்ப்பளித்தார். இது எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சட்ட ரீதியாக கிடைத்த வெற்றியாகவே இந்த தீர்ப்பு உள்ளது. தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் கடந்த 18-ந்தேதி சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நீதிபதிகள் துரைசாமி, சுந்தர்மோகன் ஆகியோர் முன்பு மூத்த வக்கீல் விஜய் நாராயண் இந்த கோரிக்கையை முன் வைத்தார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் மனுவாக தாக்கல் செய்தால் திங்கட்கிழமை வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பத்தை புறக்கணித்து கட்சியின் செயல்பாட்டை தடுக்கும் வகையில் தனி நீதிபதியின் தீர்ப்பு உள்ளது. எனவே இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் இணைந்து செயல்படாத நிலை இருக்கும்போது இணைந்தே பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்கிற தனி நீதிபதியின் தீர்ப்பு ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நாளை நடைபெறுகிறது. நீதிபதிகள் துரைசாமி, சுந்தர்மோகன் ஆகியோர் முன்னிலையில் நாளை காலை 11 மணி அளவில் அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்த விசாரணையின்போது எடப்பாடி பழனிசாமி தரப்பு வக்கீல்கள் தங்கள் தரப்பு வாதங்களை விரிவாக எடுத்து வைக்கிறார்கள். அப்போது நீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த உத்தரவுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று வாதிடுகிறார்கள்.

அ.தி.மு.க. பொதுக்குழு நடத்தப்பட்ட விதம் பற்றியும், அதில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகளும் அப்போது கோர்ட்டில் தெரிவிக்கப்படுகின்றன. இதற்கிடையே அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள கேவியட் மனுவில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு வழக்கில் தங்கள் தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகே எந்த உத்தரவையும் பிறப்பிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு ஐகோர்ட்டில் நாளை (திங்கட்கிழமை) விசாரணைக்கு வரும்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வக்கீல்களும் ஆஜராகி தங்களது வாதங்களை எடுத்து வைக்கின்றனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டபிறகு இந்த வழக்கில் விரிவான பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை நடைபெறும் விசாரணைக்கு பின்னர் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டு பின்னர் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அ.தி.மு.க. தலைமை பதவியை பிடிக்க எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே மோதல் முற்றியுள்ள நிலையில் நாளை அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கில் யாருக்கு வெற்றி கிடைக்கும்? என்பது பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் நாளை நடைபெறும் வழக்கு விசாரணையும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.