இலங்கைத்தீவு எதிர்நோக்கும் தற்போதைய நெருக்கடியில் தமது எதிர்கால இருப்பு சார்ந்து தமிழ்த்தரப்பு மட்டும் எதுவித அக்கறையுமின்றி ஒதுங்கி நிற்கின்றது. இவ்வாறு ஒதுங்கி நிற்பதற்கு கொழும்பை அனுசரித்து செல்லும் அரசியலை பின்பற்றுகின்றமை, இந்த நெருக்கடி மைதானத்தில் தனித்தரப்பாக பங்கு கொள்ளக் கூடிய கௌரவமான பங்கு தமிழ்த்தரப்பிற்கு உண்டு என்பதை புரிந்து கொள்ளாமை, தமிழ்த்தேசிய அரசியல் தேர்தலை மையமாகக் கொண்ட கட்சி அரசியலுக்குள் சிக்கிக்கொண்டமை என்பன அடிப்படைக் காரணங்களாக அமைந்திருக்கின்றன.
இதில் அனுசரிப்பு அரசியல் என்ற காரணியை சென்ற வாரம் பார்த்தோம். இந்நிலையில், தமிழ்த் தேசிய அரசியல் நீக்கம் நடைபெற்றுவருகிறது. அதற்கு, அமெரிக்கா தலைமையிலான மேற்குலகத்தின் அழுத்தமும் இதற்குக் காரணமாக இருந்திருக்கின்றது. தமிழ்த்;தரப்பு தமிழ்த்தேசிய அரசியலை நீக்கம் செய்து பெருந்தேசியவாதத்தின் லிபரல் பிரிவுடன் கலந்து விட வேண்டும் என்பதே மேற்குலகின்; எதிர்பார்ப்பாக இருந்தது. சுமந்திரன் இதற்காகவே களமிறக்கப்பட்டார். தற்போதும் கூட முழுமையாக ஊக்கத்துடன் அதனை மேற்கொண்டு வருகின்றார்.
அவரைத்தமிழ் மக்களின் பிரதிநிதி என்று கூறுவதை விட பெருந்தேசியவாத லிபரல் பிரிவின் பிரதிநிதி என்றே கூறலாம். தற்போது சுமந்திரனுடன் கூடவே சாணக்கியனும்; இந்த அரசியல் முன்னெடுப்பில் இறங்கியிருக்கின்றார்.
நீதியரசர் விக்கினேஸ்வரனும் தமிழத்தேசிய நீக்க அரசியலை முன்னெடுப்பார் என்று கருதியே சம்பந்தனால் களமிறக்கப்பட்டார். ஆரம்பத்தில் சம்பந்தனின் அரசியல் போக்கோடு விக்கினேஸ்வரன் இணைந்திருந்தாலும் யாழ்ப்பாணத்தில் அவர் வசிக்கத்தொடங்கியதும் தன்நிலையை மாற்றிக் கொண்டார். அவரது அரசியல் இறங்கு முகமாகியது என்பது வேறோர் கதை
இந்த அரசியல் போக்கு புலி நீக்கம், தமிழ்த்தேசிய அரசியல் நீக்கம், தமிழ்த்தேசிய சர்வதேச மயமாக்கலை கீழிறக்கல் எதிர்க்கட்சித்தலைவர் பதவி ஏற்பு, ஒற்றையாட்சி அரசியல் யாப்பு உருவாக்க முயற்சி என்று வளர்ந்து தீர்க்கமான நெருக்கடி கட்டம் ஏற்பட்ட சூழலில் ஒதுங்கி நிற்றல் என்ற நிலையை நோக்கி நகர்ந்திருக்கின்றது.
இந்த அனுசரிப்பு அரசியலுடன் கூடவே மேற்குலம் சார்ந்த அரசு சாரா அமைப்புக்கள் நல்லிணக்கம் என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் களமிறக்கப்பட்டன. அவை தாயகம் எங்கும் மூளைச்சலவை செய்யும் செயற்பாட்டில் இறங்கியிருந்தன. இவ்வாறு பல வேலைத்திட்டங்கள் தமிழர் தேசிய நீக்க அரசியல் நோக்கி நகர்த்தப்பட்டன.
இவ்வேலைத்திட்டங்களால் தமிழ்த்தேசியத்தை முழுமையாக சிதைக்க முடியவில்லை. அவ்வாறு சிதைப்பதற்கு தமிழ்த்தேசியம் மேல்மண்ணில் வேர்விட்ட மரமல்ல. ஆழவேரூன்றியதொன்று. புலம்பெயர் செயற்பாட்டாளர்களும் தாயகத்திலுள்ள செயற்பாட்டாளர்களும் மிகவும் சிரமப்பட்டு தடுத்து நிறுத்தினர்.
தமிழ் சிவில் சமூக அமையம், தமிழ் மக்கள் பேரவை, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி போன்றன இந்த கீழிறக்கலை தடுப்பதில் பாரிய பங்களிப்புக்களை வழங்கின என்பது வரலாறு
கூட்டமைப்பு ஒதுங்கி நிற்பதற்கு இரண்டாவது காரணம் முன்னரே கூறியது போல இந்த நெருக்கடி மைதானத்தில் தனித்தரப்பாக பங்கு கொள்ளக் கூடிய கௌரவமான பங்கு தமிழ்த்தரப்பிற்கு உண்டு என்பதை புரிந்து கொள்ளாமை ஆகும். இன்னோர் வகையில் இவர்களது கொழும்பு அனுசரிப்பு அரசியல் புரிந்து கொள்ள முயல்வதற்கு இடமளிக்கவில்லை என்றும் கூறலாம்.
தமிழ் மக்களுக்கு கௌரவமான இடம் உண்டு என்பதற்கு பலகாரணிகள் இருக்கின்றன. அதில் பிரதான விடயம் இனப்பிரச்சினை தீர்வு. ஆதனைத் தீர்க்காமல் நாட்டின் அரசியல் ஸ்திரமான நிலையை ஒருபோதும் உருவாக்க முடியாது.
குறிப்பாக சர்வதேச நாணய நிதியம் இராணுவத்தின் எண்ணிக்கையைக் குறைக்குமாறு கேட்டுள்ளது. தற்போதுள்ள இராணுவத்தின் தொகை என்பது இலங்கையின் கொள்ளளவுக்கு மேலானதாகும். இராணுவத்தின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டுமாயின் ஏதோவொரு வகையில் இனப்பிரச்சினையைத் தீர்க்க வேண்டும்.
அடுத்து, தமிழ் மக்களில் புலம்பெயர் தரப்பினர் பொருளாதார நிலையில் வலுவாக உள்ளனர். அவர்களுடன் சுமூக உறவைப் பேணுவதன் மூலம் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க அவர்களடைய உதவிகளையும் பெற்றுக்ககொள்ளக்கூடியதாக இருக்கும்.
சர்வதேச சமூகமும் முதலில் புலம்பெயர் மக்களின் உதவிகளைப் பெற்றுக் கொள்ளுங்கள். அதற்கான புறச்சூழலை உருவாக்குங்களென வற்புறுத்தி வருகின்றது. இந்த வற்புறுத்தல்களினால் தான் சில புலம்பெயர் அமைப்புக்களினதும், தனி நபர்களினதும் தடைகளை ரணில் அரசாங்கம் நீக்கியது. தமிழ்ப்புலம்பெயர் சமூகம்; இனப்பிரச்சினையைத் தீர்க்காமல் முதலீடுகள் எதனையும் செய்ய முன்வராது. இனப்பிரச்சினை தீர்க்கப்படாமல் முதலீடுகளுக்கு பாதுகாப்பும் கிடைக்காது.
நல்லாட்சிக்காலத்திலும் சில புலம் பெயர் தரப்புக்களது தடைகள் நீக்கப்பட்டன. சுமந்திரனின் முயற்சியினால் பலம்பெயர் தரப்புக்களுக்கும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்களசமரவீரவுக்கும் இடையே பேச்சுவார்த்தைகளும் இடம் பெற்றன.
அரசின் புதிய யாப்பு முயற்சிகளுக்கும் தடை நீக்கப்பட்ட புலம்பெயர் தரப்புக்கள் ஒத்துழைப்புக்களை வழங்கின. இறுதியில் எதுவும் நடக்கவில்லை. ஏனைய புலம்பெயர் அமைப்புகளது எதிர்ப்புக்களை மீறி நல்லாட்சி அரசிற்கு ஒத்துழைப்பு கொடுத்த புலம்பெயர் அமைப்புக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. துரோகிப்பட்டங்களும் அவர்களுக்கு கிடைத்தன.
இதனால் இந்தத்தடவை இத்தடை நீக்கத்தை எச்சரிக்கையுடனேயே பார்க்கின்றன. அதற்கான எதிர்வினை உலகத்தமிழர் பேரவையிடமிருந்து உடனடியாகவே கிடைத்தது. ஜெனிவாவை சமாழிப்பதற்காக தடை நீக்கம் நிகழ்துள்ளது என்று அது கூறியுள்ளது. தங்களது தடையை மட்டும் நீக்கி ஏனையவற்றின் தடையைத் தொடர்வதையும் அவை ஏற்கவில்லை. தவிர தடை நீக்கப்பட்ட அமைப்புக்களைத்தவிர வலுவாகச் செயற்படும் அமைப்புக்கள் வெளியே உள்ளன.
அடுத்து, தற்போது முன்னெப்போதையும் விட புவிசார் அரசியல் போட்டியும், பூகோள அரசியல் போட்டியும் இலங்கையில் வலுவாக நிலை கொள்ளத் தொடங்கியமையாகும். சீனா ஆய்வுக்கப்பலின் வருகை இந்த மோதலையே வெளிப்படுத்தியுள்ளது.
இந்தப்போட்டி மேலும் வளர்வதற்கே வாய்ப்புக்கள் உண்டு. இவ்வாறு வளருமானால் அவை இனப்பிரச்சினைகளையும் தமக்கு சாதகமாக கையாளப்பார்க்கும். போட்டியில் நிற்கும் சில தரப்புக்களுக்கு தமது இருப்பைப்பாதுகாக்கும் கருவியாக தமிழ் மக்களே உள்ளனர்.
இதேவேளை, இந்தியாவும் மேற்குலகமும் உள்நாட்டில் சந்திக்கும் நெருக்கடிகளாகும். தமிழ்நாட்டின் கரிசனைகளை முழுமையாக புறந்தள்ளி இந்திய மத்திய அரசினால் செயற்பட முடியாது. தமிழ் நாட்டில் இலங்கை இனப்பிரச்சினை ஒரு உணர்வு பூர்வமான பிரச்சினையாகும்.
அது எப்போதும் ‘நீறு பூத்த நெருப்பு போல’ உள்ளே கனன்று கொண்டிருக்கும். எனவே இனப்பிரச்சினையை ஏதோவொரு வகையில் தீர்க்க வேண்டிய தேவை இந்திய மத்திய அரசிற்கும் உள்ளது. தாயகத்தில் தமிழர்கள் நடாத்துகின்ற போராட்டங்கள் தமிழ் நாட்டிலும் பலத்த அதிர்வுகளை உருவாக்கும்.
மேற்குலகத்தில் புலம்பெயர் தமிழ் மக்கள் வலிமையாக உள்ளனர். கனடா, பிரித்தானியா, பிரான்ஸ், சுவிஸ்லாந்து பொன்ற நாடுகளில் ஒரு அரசியல் சமூகமாகவும் வளர்ச்சி கண்டுள்ளனர். அவர்கள் தாம் வாழும் அரசுகளுக்குக் கொடுக்கும் அழுத்தங்களும் நடாத்தும் போராட்டங்களும் இலங்கைக்கும் அழுத்தங்களைக் கொடுக்கும்.
கனடா மத்திய அரசாங்கம் இன அழிப்பை ஒரு தீர்மானமாக நிறைவேற்றியது என்பது இங்கு கவனிக்கத்தக்கது. இலங்கையில் போராட்டங்களை ஒடுக்குவது போல மேற்குலக நாடுகளில் போராட்டங்களை ஒடுக்க முடியாது. அங்குள்ள அரசியல் கலாச்சாரம் அதற்கு இடம் கொடாது. எனவே மேற்குலக நாடுகளுக்கும் தங்களது நாடுகளது அமைதி கருதி இனப்பிரச்சினையைத் தீர்க்க வேண்டிய தேவை உள்ளது.
இந்தக் காரணிகள் எல்லாம் சேர்ந்து தான் கோட்பாட்டு ரீதியாக நெருக்கடி மைதானத்தில் ஒரு தரப்பாக தமிழ் மக்களளை அடையாளப்படுத்துகின்றது. கூட்டமைப்பு இதனைப்புரிந்து கொள்ளாதது கவலைக்குரியது
ஒதுங்கி நிற்பதற்கான மூன்றாவது காரணியான தேர்தல் கட்சி அரசியலுக்குள் தமிழ்த்தேசிய அரசியல் மாட்டுப்பட்டிருப்பதை அடுத்தவாரம் பார்ப்போம்.
சி.அ.யோதிலிங்கம்