பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களை மாத்திரம் உள்ளடக்கிய அமைச்சரவை மீண்டும் நியமிக்கப்படுமாயின் நாட்டில் மீண்டும் போராட்டங்கள் தலைதூக்குவதற்கு அது வழிவகுக்கும்.
அவ்வாறானதொரு அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஒருபோதும் அமைச்சுப்பதவிகளை ஏற்கப்போவதில்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளதாக சு.க. பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
சுமார் 30 அமைச்சர்களை உள்ளடக்கிய புதிய அமைச்சரவை அடுத்த வாரம் நியமிக்கப்படவுள்ளதாகவும் , இதன் போது இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களும் நியமிக்கப்படவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இவ்வாறு நியமிக்கப்படவுள்ள புதிய அமைச்சரவை மற்றும் சர்வகட்சி அரசாங்கத்தில் பங்கேற்பது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிலைப்பாட்டை வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதற்காக சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்குமாறும் , சர்வகட்சி அரசாங்கத்தில் மிகச் சிறிய அமைச்சரவையை நியமிக்குமாறும் , அந்த அமைச்சரவையில் ஊழல் – மோசடி குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான எவரும் உள்வாங்கப்படக் கூடாது என்றும் நாம் பல சந்தர்ப்பங்களில் வலியுறுத்தியுள்ளோம். இதனை நடைமுறைப்படுத்தவில்லை எனில் மீண்டும் மக்களின் நம்பிக்கையை இழக்க நேரிடும்.
எம்மால் வலியுறுத்தப்பட்ட இந்த விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படுமாயின் அடுத்து எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் சிந்திக்க முடியும்.
அவ்வாறில்லை எனில் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் நாம் கட்சி ரீதியில் இதுவரையில் எவ்வித தீர்மானங்களையும் எடுக்கவில்லை. மக்களால் நிராகரிக்கப்பட்ட உறுப்பினர்களே தற்போதைய அரசாங்கத்திலும் அங்கத்துவம் வகிக்கின்றனர்.
இவ்வாறான நடவடிக்கைகளை மீண்டும் முன்னெடுக்க வேண்டாம் என்று நாம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றோம்.
எவ்வாறிருப்பினும் இந்த விடயங்கள் தொடர்பில் மீண்டும் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது தொடர்பில் இதுவரையில் எந்த தீர்மானங்களையும் எடுக்கவில்லை.
மக்களால் நிராகரிக்கப்பட்ட பொதுஜன பெரமுன உறுப்பினர்களை உள்ளடக்கிய அரசாங்கமே மீண்டும் ஸ்தாபிக்கப்படுமாயின் , ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அந்த அரசாங்கத்தில் ஒருபோதும் அங்கத்துவம் வகிக்காது என்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாகவுள்ளோம் என்றார்.