சர்வதேச கடன் நெருக்கடி பொறிக்குள் இலங்கை

223 0

இலங்கை  ஒரு   சர்வதேச கடன் நெருக்கடி பொறிக்குள் சிக்கி இருக்கின்றது.  மாறாக சீனாவின் கடன் பொறிக்குள் சிக்கவில்லை. சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் காணப்படுகின்ற பூகோள அரசியல் பொறிக்குள் இலங்கை கடன் விவகாரம் சிக்கியுள்ளது  என்று பொருளாதார அணிபுணர் கலாநிதி அகிலன் கதிர்காமர் தெரிவித்தார்.

  விசேட செவியிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். செவ்வியின் விபரம் வருமாறு

கேள்வி இலங்கை தற்போது பாரிய பொருளாதார  நெருக்கடியை எதிர் கொண்டிருக்கின்றது.  இந்நிலையில் சர்வதேச சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதே இருக்கின்ற ஒரே வழி என்று சுட்டிக்காட்டப்படுகிறது.  இலங்கைக்கு நாணய நிதியம் எவ்வாறான  வழங்கும்? 

பதில் இலங்கை 1965 ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச நாணய நிதியத்துடன் 16 உடன்படிக்கைகளை செய்து கொண்டிருக்கின்றது.  யுத்தம் முடிவடைந்தும்  2009 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு கடன் உடன்படிக்கையை செய்து கொண்டார்.

அதனடிப்படையிலேயே அதன் பின்னர் பல சர்வதேச கடன்களை இலங்கை பெற்றுக் கொண்டது.  2016 ஆம் ஆண்டு கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் ரணில் விக்கிரமசிங்க பிரதரைாக இருந்தபோது சர்வதேச நாணய நிதியத்திடம் ஒரு கடன் உதவி பெறப்பட்டு உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது.  அதன் பின்னரும் பல சர்வதேச கடன்கள் இலங்கைக்கு கிடைத்தன.

அதாவது கடந்த காலங்களில் சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை செய்து கொண்ட உடன்படிக்கைகளின்  பிரகாரமே பல சர்வதேச கடன்களை இலங்கை   பெற்றுக்கொண்டது. அவ்வாறு சர்வதேச கடன்களை பெற்று இன்று அந்த கடன்களை செலுத்த முடியாத நிலைமைக்கு இலங்கை தள்ளப்பட்டிருக்கின்றது.  அந்தவகையிலேயே தற்போதும் இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன்  கடன் உதவியை பெற்றுக் கொள்வதற்கான உடன்படிக்கையை செய்ய ஆர்வமாக இருக்கின்றது.

இலங்கையில்  தற்போது பொருளாதார நெருக்கடி மற்றும்  டொலர் பற்றாக்குறை காணப்படுகிறது.   லவாணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு இலங்கை சர்வதேச நாணயத்தை நாடுகிறது.  அதனூடாக வேறு நாடுகளிடம் சர்வதேச சந்தையில் கடன்களை பெறலாம் என்று இலங்கை கருதுகிறது.

ஆனால் அடிப்படைப் பிரச்சனை என்னவென்றால் கடந்தக காலங்களில் இலங்கையில் ஏற்றுமதி வருமானம் அதிகரிக்கவில்லை என்பதாகும்.  மறுபுறம் இலங்கையின் இறக்குமதி அதிகமாக காணப்படுகிறது. இதன் காரணமாகவே அன்னிய செலாவணி பற்றாக்குறை ஏற்படுகிறது. அது இன்று பொருளாதார நெருக்கடியை நாட்டில் ஏற்படுத்தியுள்ளது.

எனவே இங்கு சர்வதேச நாணய நிதியத்துடன்  ஒப்பந்தம் செய்து  புதிய சர்வதேச கடன்களை பெற்றாலும் கூட அது இலங்கையின் நெருக்கடிக்கு  நிரந்தர தீர்வாக இருக்காது.    மேலும் கடன்களை பெறும் ஒரு சூழலையே அது உருவாக்கப் போகிறது.  சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது நீண்ட கால தீர்வாக இலங்கைக்கு அமையாது என்பதே எனது மதிப்பீடாக இருக்கிறது.

கேள்வி   சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதால்   இலங்கைக்கு தீர்வு கிடைக்காது என்று நீங்கள் கூறுகிறீர்கள்.  அப்படியானால் இந்த பொருளாதார நெருக்கடிக்கு என்னதான் தீர்வு ?  என்ன செய்ய வேண்டும் ?

பதில் அது முக்கியமானது.  நாங்கள் முதலில் ஏற்றுமதி இறக்குமதிகளுக்கு இடையில் காணப்படுகின்ற பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவேண்டும். முக்கியமாக இறக்கமது பொருட்கள் விடயத்தில் முன்னுரிமை  அடிப்படையில்  செயல்பட வேண்டும்.  உதாரணமாக எரிபொருள் மருத்துவப் பொருட்கள் உணவு பாதுகாப்புக்கான இறக்கமதிகள்  தொ உற்பத்தி செய்வதற்கு அவசிய பொருட்கள்,   உரம் ஆடை துறைக்கான மூலப்பொருள் அவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.    அதேபோன்று ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்க வேண்டும்.

கேள்வி சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதினால் என்ன நன்மை?

பதில்  சர்வதேச நாணய நிதியத்தை நாடி ஒரு உடன்படிக்கையை செய்வதன் ஊடாக வேறு சில விடயங்களை நாங்கள் எட்ட கூடியதாக இருக்கும். அதாவது இலங்கை இவ்வருடம்  ஏப்ரல் மாதம் வெளிநாட்டு கடன்களை செலுத்த முடியாது என்று உத்தியோபூர்வமாக பிரகடனம் செய்தது.  இலங்கை மொத்தமாக 51 பில்லியன் டொலர் சர்வதேச கடன்களை  செலுத்த வேண்டியுள்ளது. அதனை செலுத்த முடியாது என்று இலங்கை பிரகடனம் செய்தது.  இதனால் நட்பு நாடுகளிடம் கூட கடன்களை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் பல்வேறு நாடுகள் இலங்கையில் மேற்கொண்டு இருக்கின்ற அபிவிருத்தி திட்டங்கள் கூட அரைகுறை நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.  எனவே அவற்றை மீள ஆரம்பிப்பதற்கு சர்வதேச நாணயத்துடன்   உடன்படிக்கை செய்வது எமக்கு துணை புரியலாம்.  காரணம் வங்குரோத்து நிலையில் இருக்கின்ற எந்த நாட்டுக்கும் சர்வதேச நாடுகள் நிதி சார்ந்த உதவிகளை செய்யாது.

கேள்வி அப்படியானால் சர்வதேச கடன்களை செலுத்த முடியாது என்று மத்திய வங்கி எடுத்த முடிவு  ஆரோக்கியமானதல்ல  என்று கூறுகிறீர்களா?

பதில் கடன்களை மீள செலுத்த முடியாது என்று மத்திய வங்கி எடுத்த தீர்மானம் நல்ல தீர்மானம் அல்ல என்பது எனது கருத்தாகும்.  அந்த தீர்மானம் அறிவிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் 78 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை செலுத்த வேண்டியிருந்தது.  ஆனால் இலங்கைக்கு ஒவ்வொரு மாதமும் 130 கோடி டொலர் வந்து கொண்டிருக்கின்றது. அதனை மேலும் ஊக்குவித்தால் 150 கோடி டொலர்களை ஒவ்வொரு மாதமும் இலங்கைக்கும் கொண்டு வரலாம்.   இவ்வாறு இருக்கும் போது ஏன் கடன் செலுத்த முடியாது என்ற பிரகடனத்தை வெளியிட்டார்கள்   என்று எனக்கு புரியவில்லை.

கேள்வி அதனால் தற்போது என்ன நிலை ஏற்பட்டுள்ளது?

பதில் அதன் காரணமாக தற்போது ஜப்பானிடம் கூட எம்மால் கடன் பெற முடியாது நிலை ஏற்பட்டிருக்கிறது.  எனவே   எவ்வாறு நாம் கடன்களை மீள செலுத்த போகின்றோம் என்பது தொடர்பான கடன் மசறுசீரமைப்பு  அவசியமாகின்றது. அவ்வாறு செய்தால்தான் சர்வதேச நாணய நிதியமும் எமக்கு உதவிகளை வழங்குவதற்கு முன்வரும்.  மறுபடியும் சர்வதேச நாணயத்துடன் இலங்கை ஒப்பந்தம் செய்து கொண்டால் தான் இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகள் கடன் வழங்கப் போகின்ற நாடுகள் இலங்கை மீது நம்பிக்கை கொள்ளும்.  அதனை எவ்வாறு கையாள போகிறோம் என்பது ஒரு பெரும் பிரச்சனையாக இருக்கிறது.  இந்நிலையில் தற்போதைய சூழலில்   இலங்கைக்கு கிடைக்கின்ற டொலர் மூலங்களை பார்க்கும் போது உதாரணமாக வெளிநாட்டு ஏற்றுமதி வருமானம், முதலீட்டு   வருமானம் மற்றும் வெளிநாட்டு கடன்கள் நன்கொடைகள்    என சகல விடயங்களும் ஒரு தளம்பல் நிலைமையிலேயே காணப்படுகின்றன.  அதுவும் இந்த தற்போதைய நெருக்கடிக்கு ஒரு முக்கியமான காரணமாகும்.

கேள்வி  அப்படி என்றால் இலங்கை  ஒரு சர்வதேச கடன் நெருக்கடி பொறிக்குள் சிக்கி இருக்கின்றது என்று கூறுகிறீர்களா?

பதில் நிச்சயமாக இலங்கை    சர்வதேச கடன் நெருக்கடி பொறிக்குள் சிக்கி இருக்கின்றது.  சர்வதேச   நாணய நிதியத்துடன் நாம்  ஒப்பந்தம் செய்தாலும் கூட   மூன்று வருடங்களில் மூன்று பில்லியன் டொலர்கள்  கிடைக்கும்.  அதாவது ஒரு வருடத்திற்கு 100 கோடி டொலர் கடனே கிடைக்கும்.  ஆனால் இலங்கை ஒவ்வொரு மாதமும் ஏற்றுமதி வருமானம் வெளிநாட்டு முதலீடுகள்   வெளிநாடுகளில் பணிபுரிகின்றவர்கள் அனுப்புகின்ற அந்நிய செலாவணி உள்ளிட்டவற்றிலிருந்து   150 கோடி டொலர்களை பெற்றுக் கொள்கிறது.  ஆனால் அதனை எவ்வாறு நாம் பயன்படுத்த வேண்டும் என்பது இங்கு முக்கியமாகும்.  1970 களின் பின்னர் இலங்கை திறந்த பொருளாதாரக் கொள்கையின் கீழ் வர்த்தகத்தை தாராளமயமாக்கியது நிதி துறையும் தாராளமயமாகியது.  அதன் காரணமாக எமக்கு கிடைக்கின்ற டொலர்களை விட நாம் செலவழிக்கின்ற டொலர்களின் பெறுமதி அதிகமாக இருக்கின்றது.  நிதித்துறை தாராளமயமாகியதன் காரணமாக வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகின்ற டொலர்கள்  மிக விரைவாக மீண்டும் செல்கின்றன.  எனவே அரசாங்கம் பலவிதமான கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டி உள்ளது  இறக்குமதியை கட்டுப்படுத்துவதுடன் அன்னிய செலாவணி வெளியில் அதிக அளவு செல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்துவது அவசியமாகும்.  இரண்டு வாரங்களுக்கு முன்னர் நான் மலேசியாவில் ஒரு மாநாட்டில் கலந்து கொண்டேன்.  அங்கு  சர்வதேச அபிவிருத்தி சங்கத்தின் மாநாடு நடைபெற்றது.  நான் உட்பட  மூன்றாம் உலக பொருளாதாரத்தை கொண்டு இருக்கின்ற நாடுகளின்   40 பொருளாதார நிபுணர்கள் பங்கேற்றனர்.  அதில் கலந்து கொண்ட பொருளாதார நிபுணர்கள் தமது நாடுகளிலும் இவ்வாறு பொருளாதார பிரச்சினை இருப்பதாக அந்த மாநாட்டில் தெரிவித்தனர்.  பங்களாதேஷிடமிருந்து ஒரு சில மாதங்களுக்கு முன்னர்  இலங்கை கடன் பெற்றுக் கொண்டமை உங்களுக்கு தெரியும்.  ஆனால் தற்போது பங்களாதேஷும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.  பங்களாதேஷும் தற்போது சர்வதேச நாணயத்தை நாடமுயற்சிக்கிறது.  உலகப் பொருளாதாரத்தில் இருக்கின்ற தளம்பல்  நிலை காரணமாக பல நாடுகளில் இவ்வாறான நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.  கடந்த நான்கு தசாப்த காலமாக இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட திறந்த பொருளாதாரக் கொள்கை உலக நாடுகளிலும் முன்னெடுக்கப்பட்டது.  அதன் அடிப்படையில் பல நாடுகளில் நெருக்கடி நிலை ஏற்பட்டிருக்கிறது.  ஆனால் எமது ஜனாதிபதி, எமது நிதி அமைச்சு மற்றும் எமது மத்திய வங்கி என சகல தரப்பினரும் அதே திசையில் தான் தற்போதும் பயணிக்கின்றனர்.  ஆனால் அந்த  கடந்த கால பயணமே தற்போது இந்த நெருக்கடிக்கும் காரணமாகும்.

கேள்வி  சீனாவின் கடன் பொறியில் இலங்கை  சிக்கியதனாலேயே தற்போது இந்த நெருக்கடி ஏற்பட்டு இருப்பதாக இலங்கை மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.  வெளிநாட்டு கடன்களை பொறுத்தவரையில்  சீனாவிடம் பத்து வீதமான அளவு கடனை இலங்கை பெற்றுள்ளது.  உண்மையில் இலங்கை சீனாவின் கடன் பொறியில்  சிக்கியிருக்கிறதா?

பதில் அதற்கு ஒருவரியில் பதில் சொல்வதென்றால் இல்லை என்றே கூற வேண்டும்.  எமது ஒட்டுமொத்தமான வெளிநாட்டு கடன்களை எடுத்துப் பார்க்கும்போது சீனாவிடம் இலங்கை பத்து வீதமான கடன்களையே பெற்றுக் கொண்டிருக்கிறது.  ஜப்பானிடமும் நாங்கள் பத்து வீதமான கடன்களை பெற்றிருக்கின்றோம்.  சர்வதேச நிதி சந்தைகளில் வர்த்தக அடிப்படையில் பெற்றுக் கொண்ட கடன்கள் 53 வீதம் காணப்படுகின்றன.  ஏனைய கடன்கள் உலக வங்கி ஆசி அபிவிருத்த வங்கி போன்றவற்றிடம் பெற்றுக் கொண்டவையாகும்.  ஆனால் இங்கு என்ன நடந்தது என்றால் வழமையாக செய்வது போன்று ஜப்பான் அல்லது சீனா போன்ற நாடுகளிடம் இந்த கடன் விவகார தொடர்பாக ஒரு பேச்சு வார்த்தையை முன்னெடுத்திருக்கலாம்.  மாறாக நாம் திடீரென்று கடன் செலுத்தும் செயல்பாட்டை நிறுத்தியதன் காரணமாகவே இந்த நெருக்கடி ஏற்பட்டது . அதனால் அந்த நாடுகளும்   சகலவிதமான கடன்களையும் இலங்கைக்கு வழங்காமல் நிறுத்தி இருக்கின்றன.  ஏற்கனவே இலங்கையில் அவர்கள் ஒப்பந்தம் செய்திருக்கின்ற உட்கட்டுமான வேலைத்திட்டங்களை கூட அவர்கள் இடை நடுவில் நிறுத்தி இருக்கின்றார்கள்.  ஜப்பான் கட்டுநாயக்க விமான நிலையத்தில் முன்னெடுத்திருந்த உட்கட்டமான வேலைத்திட்டம் கூட தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.   இந்த விடயத்தை நாம் முதலில் கவனத்தில் எடுக்க வேண்டும்.  சீனாவைப் பொறுத்தவரையில் மற்றும் ஒரு முக்கியமான பிரச்சினையும்  இருக்கின்றது.    நாம் சர்வதேச ரீதியில் பெற்றுக் கொண்டிருக்கின்ற கடன்களை மீள செலுத்துவதற்கு ஒரு கடன் மறுசீரமைப்பு செய்து கொள்ளவேண்டிய தேவை காணப்படுகிறது.  அதாவது வட்டி விதம் குறைத்தல்,  கடனை மீள செலுத்துவதற்கான காலத்தை நீடித்தல்,  கடலினில் ஒரு தொகையை குறைத்தல் போன்ற விடையங்களை இந்த கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டின் ஊடாக கடன் வழங்கிய நாடுகளுடன் நாம் மேற்கொள்ள வேண்டி இருக்கிறது.  ஆனால் சீனாவைப் பொறுத்தவரையில் அவர்கள் இலங்கைக்கு வழங்கிய கடன் தொகையை மறுசீரமைப்பு செய்வதில் தயக்கம் காட்டுகின்றனர்.  அதாவது கடன் தொகையை குறைத்தல் போன்ற திட்டங்களுக்கு சீனா ஒரு போதும் விரும்புவதில்லை.  அதற்கு சீனா முக்கியமான ஒரு காரணத்தை முன் வைக்கிறது. அதாவது பல நாடுகளுக்கு சீனா எவ்வாறு கடன்களை வழங்கி இருக்கிறது. இந்நிலையில் ஒரு நாட்டுக்கு மட்டுமே இவ்வாறு செய்தால் ஏனைய நாடுகள் விடயத்திலும் இது சிக்கலை ஏற்படுத்தும் என்பது சீனா முன்வைக்கும் வாதமாகும்.  ஆனால் இந்த நாடுகளுடன் கடன் மறுசீரமைப்பை இலங்கை செய்யாவிடின் சர்வதேச நாணய  நிதியம் இலங்கையுடன்   ஒப்பந்தம் செய்யாது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.  இதற்கு  பின்னால் இருக்கும் உண்மையை நாம் பார்க்க வேண்டும்.  அதாவது இங்கு சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் காணப்படுகின்ற பூகோள அரசியல் விவகாரம்  இலங்கை கடன் மறுசீரமைப்பு செய்வதில் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.  சர்வதேச நாணய நிதியத்தின் பின்னணியில் அமெரிக்க நிதியமைச்சு இருக்கின்றது.  அவர்களே அங்கு கூடுதலான ஆதிக்கத்தை செலுத்துகின்றனர்.  இந்தப் பூகோள ரீதியான போட்டியிலும் இலங்கையினுடைய கடன் பிரச்சினை   சிக்கியிருக்கிறது.  அதனால்தான்  சீன கடன் பொறியில்  இலங்கை சிக்கிவிட்டது என்ற கருத்தை சர்வதேச ஊடகங்களும் சர்வதேச நிபுணர்களும் தெரிவித்து வருகின்றனர்.