ஆதங்கத்தை வெளியிட்ட வன்னி எம்.பி திலீபன்

180 0

வடமாகாண முன்னாள் ஆளுநர் சாள்ஸூக்கு எமது மக்களது பிரச்சனைகள் தொடர்பில் 150க்கும் மேல் கடிதம் எழுதினேன். அதற்கு இதுவரை எந்தவித பதிலும் கிடைக்கவில்லை, வேலையும் நடக்கவில்லை என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் தனது ஆதங்கத்தினை வெளிப்படுத்தினார்.

வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

தற்போதைய ஆளுநருக்கு கடிதம் அனுப்பினால் பதில் வருகிறது. வேலையும் நடக்கிறது. அதனால் நான் 50 இற்கு மேற்பட்ட நன்றிக் கடிதங்களை கூட அனுப்பியுள்ளேன்.

தற்போதைய ஆளுநர் சிறந்த முறையில் செயற்படுகிறார். ஆனால் முன்னாள் ஆளுனர் சாள்ஸூக்கு எமது மக்களது பிரச்சனைகள் தொடர்பில் 150 இற்கு மேல் கடிதம் எழுதினேன்.  இதுவரை எந்தவித பதிலும் அனுப்பியதில்லை. வேலையும் நடக்கவில்லை.

சிறிதரன் அவர்கள் கடந்த முறை பாராளுமன்றத்தில் உரையாற்றும்  போது வடமாகாண ஆளுனர் தமிழில் பெயரை வைத்துக் கொண்டு ஆங்கிலத்தில் உரையாற்றுவதாக ஒரு கருத்தை தெரிவித்திருந்தார்.

நான் அவரிடம் ஒரு விடயத்தை கேட்க விரும்புகின்றேன். தமிழ்  தேசியக் கூட்டமைப்பில் உள்ள தமிழில் பெயரைக் கொண்ட இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் தமிழில் உரையாற்றுவதில்லை.  முதலில் அவர் அதனை  திருத்த வேண்டும். பல அரசியல்வாதிகள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தற்போதைய ஆளுநருடன் முரண்பாடுகள் இருக்கிறது. ஆனால் என்னைப் பொறுத்த வரை  தற்போதைய வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராசா எமது மாவட்டம் தொடர்பாக சிறப்பாக செயற்படுகிறார் என தெரிவித்தார்.