2021 செப்டெம்பரில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் வருடாந்த கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்கு நியூயோர்க் சென்ற வேளை அன்றைய ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச ஐ.நா. செயலாளர் நாயகம் அன்ரோனியோ குற்றெரஸுடனான சந்திப்பின்போது புலம்பெயர்ந்த இலங்கை தமிழ்ச் சமூகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக அறிவித்தார்.அந்த நேரத்தில் அதை தென்னிலங்கையில் யாரும் எதிர்த்துப் பேசவில்லை.
நல்லிணக்கத்தில் உண்மையான நாட்டம் ராஜபக்சவுக்கு இருந்தால் முதலில் புலம்பெயர்ந்த தமிழர்களுடன் அல்ல உள்நாட்டில் தமிழர்களின் அரசியல் பிரதிநிதிகளுடனேயே பேச்சுவார்த்தையை அவர் தொடங்கவேண்டும் என்று தமிழர் தரப்பில் இருந்துதான் குரல்கள் ஒலித்தன.
அதேவேளை, ராஜபக்ச தலைமையிலான தூதுக்குழுவினர் நியூயோர்க்கில் இருந்து நாடு திரும்பிய கையோடு அன்றைய வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் உள்ள தடைசெய்யப்ட்ட அமைப்புக்களுடன் அரசாங்கம் பேசப்போவதில்லை என்று அறிவித்தார்.ஆனால், அதே பேராசிரியர் இவ்வருடம் ஜூன் நடுப்பகுதியில் ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 50 வது கூட்டத்தொடரில் பங்கேற்று உரையாற்றியபோது குறிப்பிட்ட சில அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் மீதான தடையை நீக்குவது குறித்து பரிசீலிக்கப்படுவதாக அறிவித்தார்.அந்த வேளையிலும் தென்னிலங்கையில் அதை எதிர்த்து யாரும் பேசவில்லை.
ஆனால், சில புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் மீதான தடை நீக்கப்படுவதாக கடந்தவாரம் பாதுகாப்பு அமைச்சு அதிவிசேட வர்த்தமானி மூலமாக அறிவித்த உடனடியாக சில கடும்போக்கு சிங்கள தேசியவாத இயக்கங்கள் போர்க்கொடி தூக்க ஆரம்பித்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
2009 மே மாதம் உள்நாட்டுப்போர் முடிவுக்குவந்த பின்னரான காலகட்டத்தில் இலங்கை அரசாங்கங்களினால் பல புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் பயங்கரவாத இயக்கங்கள் என்று தடைசெய்யப்படுவதும் பிறகு தடைநீக்கப்படுவதுமாக மாறிமாறி இருந்துவந்துள்ளது.போர் முடிவுக்கு வந்து ஐந்து வருடங்கள் கழித்து 2014 ஏப்ரில் முதலாம் திகதி மகிந்த ராஜபக்ச அரசாங்கம் 16 அமைப்புக்கள் மற்றும் 424 தனிநபர்கள் மீது தடைவிதித்தது.அவற்றில் 8 அமைப்புக்கள் மீதும் 267 தனிநபர்கள் மீதுமான தடையை மைத்திரி — ரணில் அரசாங்கம் 2015 நவம்பர் 20 நீக்கியது.பிறகு கோதாபய ராஜபக்ச அரசாங்கம் 2021 பெப்ருவரி 25 மீண்டும் 7 அமைப்புக்கள் மற்றும் 389 தனிநபர்கள் மீது தடை விதித்தது.
இப்போது 6 அமைப்புக்கள் மீதும் 316 தனிநபர்கள் மீதும் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டிருக்கிறது.இவற்றில் புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலான முக்கிய அமைப்புக்கள் என்று கூறக்கூடிய இங்கிலாந்தை தளமாகக்கொண்ட உலக தமிழர் அமைப்பு( Global Tamil Forum), பிரிட்டிஷ் தமிழ் அமைப்பு ( British Tamil Forum),கனடிய தமிழ் காங்கிரஸ் ( Canadian Tamil Congress) ஆகியவையும் அடங்குகின்றன.
இந்த அமைப்புக்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றன என்று கூறி தடைசெய்யப்பட்ட இரு சந்தர்ப்பங்களிலும் ஒரு ராஜபக்சவே ஜனாதிபதியாகவும் பாதுகாப்பு அமைச்சராகவும் பதவியில் இருந்த அதேவேளை, அவற்றின் மீதான தடையை நீக்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்ட இரு சந்தர்ப்பங்களிலும் முதலில் பிரதமராகவும் இப்போது ஜனாதிபதியாகவும் ரணில் விக்கிரமசிங்க பதவியில் இருந்திருக்கிறார்.புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக கோதாபய அறிவித்தபோதிலும் அது தொடர்பில் எந்த முன்னெடுப்பையும் அவர் அக்கறையுடன் செய்யவில்லை. அதனால், அவர் தொடர்ந்தும் பதவியில் இருந்திருந்தால் தற்போதைய தடை நீக்க அறிவிப்பு வந்திருக்குமா என்ற கேள்வி எழுகிறது.
அதேவேளை, கடந்த ஜூன் நடுப்பகுதியில் கோதாபய ஜனாதிபதியாக பதவியில் இருந்தவேளையில்தான் பேராசிரியர் பீரிஸ் ஜெனீவாவில் தடைசெய்யப்பட்ட சில புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடையை நீக்குவது குறித்து பரிசீலிக்கப்படுவதாக அறிவித்தார். அதனால் தற்போதைய தடைநீக்கம் முன்னைய அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட ஒரு தீர்மானத்தின் தொடர்ச்சியா அல்லது புதிய ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தின் தீர்மானமா என்ற கேள்வியும் எழுகிறது.
இம்மாத ஆரம்பத்தில் பாராளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடரை தொடக்கிவைத்து கொள்கை விளக்கவுரை நிகழ்த்திய ஜனாதிபதி விக்கிரமசிங்க நீண்டகாலமாக தமிழ்மக்களினால் எதிர்நோக்கப்படும் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வொன்றைக் காணவேண்டிய அவசியத்தை வலியுறுத்திய அதேவேளை, ” வடக்கு அபிவிருத்திப் பணிகள் குறித்து புதிதாக நாம் சிந்திக்கவேண்டும்.நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டம் தொடர்பில் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுடன் நெருக்கமாக பணியாற்றுவதன் மூலம் அவர்களின் ஆதரவைப் பெறுவதற்கு நாம் எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கிறோம். அவர்கள் இலங்கைக்கு வர செய்யவேண்டும். தாய்நாட்டில் முதலீடுகளைச் செய்யவேண்டும் என்று விரும்புகின்றோம் ” என்று குறிப்பிட்டதன் பின்புலத்திலும் இதை நோக்கவேண்டும்.அவர் இப்போது புலம்பெயர் சமூகத்துடன் விவகாரங்களைக் கையாள தனியான பணியகம் ஒன்றை அமைக்கப்போவதாகவும் அறிவித்திருக்கிறார்.
இதனிடையே, செப்டெம்பர் 12 ஜெனீவாவில் ஆரம்பமாகவிருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 51 வது கூட்டத்தொடரை மனதிற்கொண்டுதான் புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் மீதான தடையை அரசாங்கம் நீக்கியிருக்கிறது என்ற விமர்சனமும் தமிழ் அரசியல்வாதிகளிடம் இருந்து மாத்திரமல்ல சிங்கள அமைப்புகளிடம் இருந்தும் வந்திருக்கிறது.
புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் மீதான தடைநீக்கம் தொடர்பில் இன்றைய பத்தியில் ஆராய முற்பட்டதற்கு முக்கிய காரணம் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு குறிப்பிட்ட சில கடும்போக்கு சிங்கள தேசியவாத அமைப்புக்களிடம் இருந்து வெளிக்காட்டப்பட்ட எதிர்ப்பேயாகும்.
நவீன இலங்கையின் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் திணறிக்கொண்டிருக்கும் மக்கள் கடந்த நான்கு மாதங்களுக்கும் அதிகமான காலமாக வீதிகளில் இறங்கி கிளர்ச்சிசெய்தபோது இந்த கடும்போக்கு சிங்கள தேசியவாத சக்திகள் எதுவும் பேசாமல் மௌனமாக ஒதுங்கி இருந்தன.தவறான ஆட்சிமுறை மற்றும் ஊழல்மோசடியின் விளைவாக நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டுவந்த ராஜபக்சாக்களை ஆட்சியதிகாரத்துக்கு கொண்டுவருவதில் முன்னரங்கத்தில் நின்ற இந்த தேசியவாத சக்திகள் மக்களின் சீற்றத்துக்கு ஆளாக வேண்டியிருக்கும் என்ற பயத்தில் ‘ வெளிச்சத்தைக் கண்டு ஔிந்துகொள்கின்ற கரப்பான் பூச்சிகள் ‘ போன்று பதுங்கியிருந்தார்கள்.
இப்போது ‘ அறகலய ‘ மக்கள் கிளர்ச்சி தணிந்துபோய்விட்ட சூழ்நிலையில் இந்த கடும்போக்கு சக்திகள் மீண்டும் வெளியில் வரத்தொடங்குகின்றன.சிங்கள பௌத்த பெரும்பான்மையினவாத அரசியலை அதன் உச்சத்துக்கு கொண்டுசென்ற ராஜபக்சாக்களின் வீழ்ச்சியினால் உண்மையில் இந்த சக்திகள் பெரும் கவலையடைந்திருக்கின்றன.ராஜபக்சாக்களை சிங்கள மக்கள் வெறுப்பதை இவர்களினால் சகித்துக்கொள்ளமுடியவில்லை.
சிறுபான்மைச் சமூகங்களின் நியாயமான அரசியல் அபிலாசைகளில் எந்தவொன்றையும் ஏற்றுக்கொள்ளாத இந்த சக்திகள் பெரும்பான்மையினவாத அணிதிரட்டலை மீண்டும் செய்வதில் அக்கறை காட்டும் என்பதில் சந்தேகமில்லை.அதற்கு வாய்ப்பாக கிடைக்கக்கூடிய ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் அவர்கள் பயன்படுத்துவார்கள்.
சில புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் மீதான தடை நீக்கத்துக்கு எதிராக தேசிய அமைப்புக்களின் சம்மேளனமும் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணியும் கடந்தவாரம் வெளியிட்ட கருத்துக்கள் இதை தெளிவாக உணர்த்துகின்றன.
தடை நீக்கத்துக்கான காரண காரிய அடிப்படை குறித்து ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் அரசாங்கம் விளக்கம் தரவேண்டும். தடை நீக்கத் தீர்மானம் எடுக்கப்பட்ட தருணம் மிகவும் கவலை தருகிறது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் கூட்டத்தொடரை அடிப்படையாகக் கொண்டு இதை நியாயப்படுத்த முடியாது. அரசியல் நோக்கிலான தீர்மானங்களினால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதை அனுமதிக்கமுடியாது.வெளியுறவு அமைச்சும் பாதுகாப்பு அமைச்சும் மக்களுக்கு விளக்கம் தரவேண்டும் என்று தேசிய அமைப்புக்களின் சம்மேளனத்தின் சார்பில் கலாநிதி குணதாச அமரசேகர செய்தியாளர் மகாநாடொன்றில் வலியுறுத்தினார்.
அதேவேளை தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் முஹமட் முசம்மில் தடை நீக்கப்பட்ட அமைப்புக்களும் தனிநபர்களும் தங்களது பிரிவினைவாத நிகழ்ச்சிதிட்டத்தை கைவிடுவார்கள் என்ற உத்தரவாதத்தை அவர்களிடம் இருந்து அரசாங்கம் பெற்றிருக்கிறதா என்று கேள்வியெழுப்பியதுடன் தடைநீக்கத் தீர்மானத்தினால் தங்களுக்கு துரோகமிழைக்கப்பட்டிருப்பதாக உணருபவர்களின் அக்கறைகளை பாதுகாப்பு அமைச்சு பொறுப்பை தன்வசம் வைத்திருக்கும் ஜனாதிபதி விக்கிரமசிங்க கவனத்தில் எடுக்கவேண்டும் என்று கூறியிருக்கிறார்.
தமிழ் கட்சிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான உடன்பாட்டின் ஒரு அங்கமா தடைநீக்கம் என்று முசம்மில் செய்தியாளர் மகாநாட்டில் கேட்டார். அவரின் கேள்விகள் விமல் வீரவன்சவினுடையதே தவிர வேறு ஒன்றுமில்லை.விக்கிரமசிங்கவின் அரசியலை என்றுமே விரும்பாத வீரவன்ச அவருடன் இப்போது ஒருவித இணக்கப்போக்கை கடைப்பிடிப்பதில் விசித்திரமான அக்கறை காட்டுவதால் முசம்மிலை தனது பதிலாளாகப் பயன்படுத்தியிருக்கிறார் அவ்வளவுதான்.
இவர்களின் கருத்துக்களுக்கு சில சிங்கள,ஆங்கில ஊடகங்கள் அதிக முக்கியத்துவத்தைக் கொடுத்தன.மக்கள் கிளர்ச்சியின் விளைவாக மாறிவிட்ட அரசியல் பருவநிலையை பிரதிபலிக்கக்கூடிய ஆரோக்கியமான அணுகுமுறையை இந்த ஊடகங்கள் கடைப்பிடிப்பதாக இல்லை.நாய்க்கு அதன் உடலில் எந்தப் பகுதியில் தாக்கினாலும் அது பின்னங்காலைத்தான் தூக்கிக்கொண்டு ஓடும். அது போன்றே இந்த கடும்போக்கு சிங்கள தேசிய வாதிகளும் அவர்களுக்கு உதவும் ஊடகங்களும் சிறுபான்மைச் சமூகங்கள் தொடர்பில் அரசாங்கத்தினால் எடுக்கப்படக்கூடிய எந்தப் தீர்மானத்தையும் இனவாத கண்கொண்டே நோக்கும்.
கொழும்பு ஆங்கிலப் பத்திரிகையொன்று கடந்தவாரம் அதன் ஆசிரிய தலையங்கத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவம்(ராஜபக்சாக்கள் ) புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் மீதான தடை நீக்கம் குறித்து ஏன் மௌனம் சாதிக்கிறது என்று கேள்வியெழுப்பியது.பொதுஜன பெரமுனவின் தேர்தல் வெற்றியைச் சாத்தியமாக்கிய தேசியவாத சக்திகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் பிரதமர் தினேஷ் குணவர்தன இந்த தடை நீக்க விவகாரம் குறித்து என்ன கருத்தைக் கொண்டிருக்கிறார் என்பதை அறிய ஆவலாக இருப்பதாகவும் அந்த பத்திரிகை சீண்டியிருக்கிறது.
அதுபோக, தடைநீக்கப்பட்ட புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் உறுப்பினர்கள் இனிமேல் சுதந்திரமாக இலங்கைக்கு வரக்கூடியதாக இருக்கும் அதேவேளை போர்க்கால பாதுகாப்பு செயலாளரான முன்னாள் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறி அஞ்ஞாதவாசம் செய்கிறார்.தமிழ் தேசிய கூட்டமைப்புடன் அரசாங்கம் செய்துகொண்டிருக்கும் அரசியல் இணக்கப்பாட்டின் ஒரு அங்கமாக தடுப்புக்காவலில் இருக்கும் முன்னாள் விடுதலை புலிகள் இயக்க உறுப்பினர்கள் விடுதலை செய்யப்படவிருப்பதாக ஊகங்கள் அடிபடுகின்றன. அதை அரசாங்கம் நிறைவேற்றினால் ,முன்னாள் புலிகள் சுதந்திரமாக நடமாடப்போகிறார்கள் என்றும் அந்த ஆசிரிய தலையங்கத்தில் கூறப்பட்டிருக்கிறது.
மக்கள் எதிர்நோக்கும் உண்மையான பிரச்சினைகளில் இருந்து அவர்களின் கவனத்தைத் திசைதிருப்பவும் தவறான ஆட்சிமுறை மற்றும் ஊழலையும் மூடிமறைக்கவுமே இனவாத அரசியல் பயன்படுத்தப்பட்டுவந்திருக்கிறது என்பது இதுகாலவரையான அனுபவமாக இருக்கிறது. ராஜபக்சாக்களின் வீழ்ச்சியை பெரும்பான்மையினவாத அரசியலின் தோல்வியாகவே பார்க்கவேண்டும். ஆனால் அவர்கள் மீண்டெழும் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.
அறகலய மக்கள் கிளர்ச்சியின் விளைவாக மத்தியில் தோற்றுவிக்கப்பட்டிருக்கக்கூடிய தவறான ஆட்சிமுறைக்கு எதிரான அரசியல் பிரக்ஞை மீண்டும் பெரும்பான்மையினவாத அணிதிரட்டலினால் ஏற்படக்கூடிய ஆபத்தையும் உணர்ந்துகொள்ளக்கூடியதாக வளரவேண்டும். ராஜபக்சாக்களின் வீழ்ச்சியினால் துவண்டுபோயிருக்கும் கடும்போக்கு சிங்கள சக்திகள் மீண்டும் நச்சுத்தனமான அரசியலை செய்வதற்கு மேற்கொள்ளக்கூடிய முயற்சிகளைத் தடுத்துநிறுத்த ஒரு போராட்டம் அவசியப்படும்.
வீரகத்தி தனபாலசிங்கம்