மன்னார் – புத்தளம் பாதை கடந்த பல வருடங்களாக மூடப்பட்டிருந்த நிலையில், அவற்றை மீளத்திறந்து மக்களின் போக்குவரத்து மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கான உதவிகளை செய்யுமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் முன்வைத்த கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைக்கப்பெற்றுள்ளது.
அண்மையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி அதன் தலைவர் ரிஷாட் பதியுதீன் தலைமையில், ஜனாதிபதியினை சந்தித்த போது மேற்படி பாதையின் அவசியம் தொடர்பில் எடுத்துரைத்திருந்த நிலையில், இதற்கான ஆரம்ப பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இன்று புதன்கிழமை (17) எலுவன்குளம் பகுதிக்கு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர்கள், வன்னாத்தவில்லு பிரதேச செயலாளர் மற்றும் வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் கொண்ட குழுவினர் வருகை தந்திருந்தனர்.
மேற்படி குழுவினர் கள நடவடிக்கைகளை இங்கு மேற்கொண்டனர். இதன்போது, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனும் இங்கு வருகை தந்திருந்ததுடன், குறித்த பாதை தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.
இன்றைய விஜயத்தின் போது, அதிகாரிகளினால் எலுவன்குளம் பாலத்தின் புனரமைப்பு தொடர்பிலான வரைபடம் தயார்படுத்த போதுமான அளவீட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டதுடன், மேற்படி பாலத்தில் இருந்து மறிச்சுக்கட்டி நோக்கி செல்லும் உட்பாதையில் சேதமடைந்துள்ள இரு பாலங்களை பார்வையிட அதிகாரிகள் குழுவினர் அங்கு விஜயத்தினை மேற்கொண்டனர்.
மேற்படி பாதையானது பல நூறு வருடங்கள் பழமை வாய்ந்தமை. முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் முயற்சியால் திறந்துவைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக விடப்பட்டிருந்த நிலையில், அதன்பிற்பாடு கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையிலான அரசின் போது நிரந்தரமாக இப்பாதை மூடப்பட்டிருந்த நிலையில், மீண்டும் இதனை திறப்பதற்கான முன்னெடுப்புக்களை ரிஷாட் எம்.பி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.