இலங்கை மின்சாரசபை இவ்வாண்டின் இறுதியில் 550 பில்லியன் ரூபா நஷ்டத்தை எதிர்கொள்ளும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் இவ்வாண்டுக்கான வரி வருமானம் ஒரு பில்லியன் ரூபாவாகவே காணப்படும். வருமானம் ஒரு பில்லியனாக இருக்கும் அதே வேளை , மின்சாரசபை மாத்திரம் 550 பில்லியன் ரூபா நஷ்டத்தை எதிர்கொள்கிறது எனில் எவ்வாறு நாட்டை முன்னேற்றுவது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபிர் ஹசீம் கேள்வியெழுப்பினார்.
நல்லாட்சியின் போது வழக்கு தாக்கல் செய்யப்பட்டு , அந்த வழக்குகளிலிருந்து விடுதலை பெற்றுள்ளவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும் என்று அமைச்சரவையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் இவ்வாறான யோசனைகள் முன்வைக்கப்படுவதை தாம் கடுமையாக எதிர்ப்பதாகவும் கபிர் ஹசீம் குறிப்பிட்டார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் 17 ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
போலியான இடதுசாரிகளின் தவறான கொள்கைகளின் காரணமாகவே நாடு இன்று இந்த நிலைமையை அடைந்துள்ளது. பொருளாதார மறுசீரமைப்பு என்பது அவர்கள் கூறுவதைப் போன்று தவறானதொரு விடயமல்ல.
கிழக்கு ஐரோப்பா, சீனா, சோவியத் இராச்சியம் என்பவற்றின் இடதுசாரி கட்சிகள் அந்த நாடுகளின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டுள்ளன.
மேற்குலக லிபரல் வாதத்தினையோ அல்லது தோல்வியடைந்த இடதுசாரி கொள்கைகளையோ ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது.
சமூக வர்த்தக பொருளாதாரத்தினை ஏற்படுத்துவதற்காக நாம் முன்னிற்போம். பொருளாதார மறுசீரமைப்பினை எதிர்ப்பவர்கள் அதற்கான மாற்று திட்டத்தை முன்வைக்க வேண்டும்.
தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் காணப்படும் கடன் சுமைகளினாலேயே நாடு வங்குரோத்தடைந்துள்ளது. இவ்வாண்டு இறுதியில் அரச நிறுவனங்களின் கடன் சுமைய ஒரு டிரில்லியன் ரூபா வரை உயர்வடையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு இலங்கை மின்சாரசபை 50 பில்லியன் ரூபா நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளது. இவ்வாண்டு மின்சாரசபையின் நஷ்டம் 550 பில்லியன் ரூபா வரை உயர்வடையக் கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு வழங்கும் சமூர்த்தி கொடுப்பனவிற்காக 50 பில்லியன் ரூபா மாத்திரமே ஒதுக்கப்படுகிறது. மின்சாரசபை நஷ்டத்தை எதிர்கொள்ளவில்லை எனில் , அந்த பணத்தைக் கொண்டு 11 சந்தர்ப்பங்களில் சமூர்த்தி கொடுப்பனவை வழங்க முடியும்.
இவ்வாண்டின் இறுதியில் வரி வருமானம் ஒரு பில்லியன் ரூபாவாக காணப்படும். வருமானம் ஒரு பில்லியனாக இருக்கும் அதே வேளை , மின்சார சபை மாத்திரம் 550 பில்லியன் ரூபா நஷ்டத்தை எதிர்கொள்கிறது எனில் எவ்வாறு நாட்டை முன்னேற்றுவது? கடந்த 2020 ஆம் ஆண்டு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் 345 பில்லியன் ரூபா நஷ்டமடைந்துள்ளது.
நாட்டில் 15 இலட்சம் அரச ஊழியர்கள் காணப்படுகின்றனர். கடந்த ஆண்டு இவர்களுக்கு 845 பில்லியன் ரூபா சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
வருமானம் ஒரு பில்லியனாகக் காணப்படும் போது அரச ஊழியர்களுக்கு எவ்வாறு சம்பளம் வழங்குவது ? பொருளாதார மறுசீரமைப்பிற்கு முதலில் செய்ய வேண்டிய ஊழல் மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகும். மறுசீரமைப்புக்கள் அரசியல் பொறிமுறைகளிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். பொதுஜன பெரமுன இந்த மறுசீரமைப்புக்களுக்கு நேரடியாக ஒத்துழைப்ப வழங்குமா?
நல்லாட்சி அரசாங்கத்தின் போது வழக்கு தாக்கல் செய்யப்பட்டு , அந்த வழக்குகளிலிருந்து தொழிநுட்ப காரணிகளால் விடுதலை பெற்றுள்ளவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும் என்று அமைச்சரவையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உண்மையில் இவ்வாறு சில வழக்குகளிலிருந்து விடுதலை பெற்றுள்ளவர்களில் சிலரை தூக்கிலிட வேண்டும். அவர்களுக்கு நஷ்டஈடு வேண்டுமெனில் அதனை அவர்கள் நீதிமன்றத்தின் ஊடாகப் பெற்றுக் கொள்ள முடியும். அது அமைச்சரவையின் ஊடாக வழங்கப்படக் கூடாது. தற்போதுள்ள பொருளாதார நெருக்கடிகளில் இது தேவையற்றதொரு விடயமாகும்.
சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டும் எனக் கூறுபவர்களை கடலில் எரிய வேண்டும் என்று வாசுதேவ நாணயக்கார தெரிவித்திருக்கின்றார்.
கடந்த 2008 ஆம் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியிலிலேயே சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து அதிகளவான கடன் பெறப்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில் வாசுதேவ அமைச்சரவை அமைச்சராக பதவி வகித்தார்.
அவ்வாறெனில் அவர் அந்த சந்தர்ப்பத்தில் தனது பதவியை இராஜிநாமா செய்திருக்க வேண்டும். அவர் தற்போது ஆடை அணிந்து கொண்டு தான் இவ்வாறான கருத்துக்களை தெரிவிக்கின்றாரா? உண்மையில் தற்போது அவரையே கடலில் எரிய வேண்டும்.
தற்போது மத்திய வங்கியின் ஒரு சில தீர்மானங்களினால் ஓரளவிற்கு அந்நிய செலாவணி கையிருப்பு பேணப்பட்டு வருகிறது.
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனுதவியைப் பெற்றுக் கொள்ளும் வரை இந்த நிலைமையை பேண வேண்டும். அதன் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அடிபணியாது , எம்மால் முறையான பொருளாதார மேம்பாட்டு வேலைத்திட்டங்களை முன்வைக்க முடியும் என்றார்.