பொதுஜன பெரமுனவே சர்வகட்சி அரசிற்கு தடையாகவுள்ளது

191 0

பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைக்க முடியாவிடின் உடன் பொதுத்தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தவுள்ளோம்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன குறுகிய அரசியல் நோக்கத்திற்காக சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு தடையாக செயற்படுகிறது என இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

சர்வக்கட்சி அரசாங்கம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

9 ஆவது பாராளுமன்றின் பதவி காலம் நிறைவடையும் வரை பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பது அவசியமாகும் என்பதை சகல அரசியல் கட்சிகளும் வலியுறுத்தியுள்ளன.

சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு ஜனாதிபதி தலைமையில் பல்வேறுக்கட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருந்தாலும், சர்வக்கட்சி அரசாங்கம் தொடர்பில் ஜனாதிபதி வெளிப்படைத்தன்மையுடன் செயற்படவில்லை. பொதுஜன பெரமுனவின் தேவைக்கமையவே ஜனாதிபதி செயற்படுகிறார்.

பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்காவிடின் உடன் பொதுத்தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தவுள்ளோம். பேச்சுவார்த்தை இன்னும் இடம்பெறவுள்ளது என குறிப்பிட்டுக் கொண்டு இழுத்தடிப்புக்கள் மாத்திரம் இடம் பெறுகிறது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு பாரிய தடையினை ஏற்படுத்தி வருகிறது. சர்வக்கட்சி அரசாங்கம் அமைக்காவிடின் அரசியலமைப்பின் பிரகாரம் பொதுத்தேர்தல் இடம் பெறும் வரை பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கமே செயற்படும்.

பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் தோற்றம் பெற்றால் மக்கள் போராட்டம் மீண்டும் தீவிரமடையும் என்பதை ஜனாதிபதி விளங்கிக்கொள்ள வேண்டும்.முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தற்போதும் அரசியல் சூழ்ச்சிகளை முன்னெடுத்து நாட்டை நெருக்கடிக்குள்ளாக்குகிறார் என்றார்.