பலாலி – சென்னை விமான சேவைகள் ஜூலை மீண்டும் ஆரம்பமாகும் என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா ஜூன் 18 இல் பலாலியில் உறுதியளித்திருந்தார். சட்டச்சிக்கல், எரிபொருள் பிரச்சினை விமான நிறுவனத்தின் எதிர்பார்ப்பு காரணமாக நடைபெறாது என அவருடன் பலாலிக்கு சென்றிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பின்னர் கூறியிருந்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமரானதும் இதற்கு உத்தரவிட்டிருந்தார்.
ஏனைய நாடுகளுக்கும் இங்கிருந்து சேவைகளை ஆரம்பிக்க விமான நிறுவனங்களுடன் பேச்சு நடாத்துமாறும் அதிகாரிகளுக்கு அமைச்சர் சிறிபால ஆலோசனை கூறியதுடன் 100 பேர் பயணிக்கும் விமானங்களுக்கான ஓடு பாதையை விஸ்தரித்தாலே அவை தரையிறங்கலாம் என்பதையும் சுதந்திர வர்த்தக தீர்வையற்ற கட்டடத்தொகுதியின் அவசியத்தையும் சுட்டிக்காட்டியிருந்தார்.
ஒரு சர்வதேச விமான நிலையத்துக்கு உரிய கட்டமைப்பு வசதிகள் இங்கு பூர்த்தியாகவில்லை. US $ 209 மில்லியன் செலவில் சகல வசதிகளுடன் நிர்மாணித்து 2012 மார்ச் 18 இல் திறக்கப்பட்ட அம்பாந்தோட்டை மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையமே இயங்கமுடியாத நிலையில் உள்ளபோது பலாலி எவ்வாறு சர்வதேச விமான நிலையமாக இயங்கும்.
கடந்த ஜனவரி 18 தமிழ்க்கட்சிகளை இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே சந்தித்தபோது இலங்கைக்கு 400 மில்லியன் அமெரிக்க டொலர் கடனாக வழங்குகிறோம். அதில் பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதை விஸ்தரிப்பு,புதிய முனையம் அமைக்குமாறு இலங்கை அரசிடம் கோரினோம் ஆனால் இன்னமும் அவர்களிடம் இருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை எனக்கூறியிருந்தார்.
கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்திலும் எரிபொருள் பிரச்சினையால் கடந்த ஜூன் 29 முதல் சிறிலங்கன் விமானங்களுக்கான எரிபொருள் சென்னை, திருச்சி, திருவானந்தபுரம், கொச்சி விமான நிலையங்களில் நிரப்பவேண்டியுள்ளதாக விமானப்போக்குவரத்து அமைச்சின் செயலாளர் கே.டி.என்.ருவான்சந்திர தெரிவித்தார்.
கட்டுநாயக்கா-இந்திய சரக்கு விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. தற்போது இங்கு சில அபிவிருத்தி பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
2018 செப்டம்பர் 17 பாராளுமன்றத்தில் பேசிய விமானப்போக்குவர்த்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா பலாலி விமான நிலையத்தை விமானப்படையினர் புனரமைப்பதாகவும் இந்திய சிவில் விமான சேவைகள் அதிகார சபைக்கு வழங்கும் எத்தகைய தீர்மானமும் கிடையாது எனவும் சில ஊடகங்கள் குழப்புவதாகவும் 650 மீற்றர் ஓடுபாதை 325 இலக்க விமானம் இறங்குவதற்கு விஸ்தரிக்கப்படும் எனவும் விமான சேவைகள் அமைச்சு 750 மில்லியன்,சுற்றுலாத்துறை அமைச்சு 1,000 மில்லியன் ஒதுக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
கடந்த ஆட்சியில் இதனை புனரமைத்து சேவைகளை ஆரம்பிக்குமாறு இலங்கை இந்திய அரசுகளுக்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அழுத்தம் கொடுத்ததால் இரு தரப்பினரும் பேச்சுக்களை மேற்கொண்டு 2015 இல் உடன்படிக்கையும் கைச்சாத்தானதும் புனரமைப்பு பணிகளை சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க 2019 ஜூலை 6 ஆரம்பித்து வைத்தார்.
2019 ஒக்டோபர் 17 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ‘யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்’ என்று திறந்து வைத்து சேவைகள் ஆரம்பமானது. முதலாவது பயணத்தில் 12 பேரே சென்னையில் இருந்து வந்தனர். 2020 மார்ச் கொவிட் பரவலால் நிறுத்தப்பட்டன.
அதுவரையான நான்கு மாதங்களில் நாலாயிரம் பேர் பயணம் செய்துள்ளனர். சேவை நிறுத்தப்பட்டு அங்குள்ள ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கமுடியாத நிலைமை காணப்பட்டது.
பலாலி சேவையால் கட்டுநாயக்கா சேவைகள் பாதிக்கப்படும் என சிவில் விமான சேவை அதிகாரசபை குற்றம் சுமத்தியதால் இரத்மலானை விமான நிலையம் தரம் உயர்த்தப்படும் என 2018 இல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தார். பாதுகாப்பு தரப்பினரும் பலாலி சேவையை விரும்பவில்லை பலாலி சேவையை தற்போதும் தெற்கில் எதிர்க்கின்றனர்.
ஜூலையில் திருக்கேதீஸ்வர திருவிழாவுக்கு 25 ஆயிரம் தமிழக பக்தர்கள் வருவார்கள் என இந்தியத் தூதுவர் கூறியதாகவும் இதனால் பல டொலர்கள் கிடைக்கும் என அங்கஜன் ராமநாதன் எம்.பி.குறிப்பிட்டிருந்தார். தற்போது இந்தியாவில் கொரோனா மீண்டும் பரவியுள்ளது.
பொருளாதார நெருக்கடியால் வடக்கில் இருந்து பலர் படகுகளில் தமிழகத்துக்கு தப்பிச்செல்கின்றனர். விமான சேவை ஆரம்பித்தால் பலர் தமிழகம் வந்து நாடு திரும்ப மறுத்து தங்கிவிடலாம் என இந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பலாலி சேவையால் உல்லாசப்பயணத்துறை வளரும் எனவும் அமைச்சர் சிறிபால கூறினார். நாட்டின் போராட்டங்கள், வன்முறைகளால் உல்லாசப் பயணத்துறையும் வீழ்ச்சி கண்டுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், நியூசிலாந்து நாடுகள் தமது பிரஜைகளுக்கு இலங்கை பயணம் குறித்து எச்சரித்துள்ளன.
உல்லாசப்பயணியான ஸ்கொட்லாந்து நாட்டு கெல்லிக் பிரேஸர் என்ற பெண்ணை கோட்டா கோ ஹோம் போராட்டத்துடன் தொடர்புபடுத்தி விசாவை இரத்து செய்து நாட்டைவிட்டு வெளியேற உத்தரவிட்டனர். இத்தகைய செயல்களால் உல்லாசப்பயணிகள் வருவார்களா.
வெளிநாடுகளில் வாழும் வடபகுதி தமிழர்கள் சென்னை ஊடாக பலாலிக்கு பயணிக்கலாம் எனக்கூறுவதும் நகைப்புக்குரியது. இவர்கள் சென்னைக்கு வந்து (Transit ) பலாலிக்கான விமானத்தில் பயணிக்கும்போது தமது பயணப் பொருட்களை முழுமையாக எடுத்துவரமுடியாது. பலாலி-சென்னை சேவையில் சிறிய விமானமே பயன்படுத்தப்படுவதால் குறைந்தளவு எடையுள்ள பயணப்பொதிகளையே எடுத்துவரலாம். சென்னை-பலாலி பயணிகளிடம் அதிகளவு கட்டணம், வரிகள் அறவிடுகின்றனர். கட்டுநாயக்கா பயணிகளுக்கான கட்டணம்,வரிகள் குறைவு. கட்டுநாயக்கா – சென்னை பயணிகள் 23 கிலோ பொதியை கட்டணமின்றி எடுத்துவரலாம்.
பலாலி விமான நிலைய அபிவிருத்தி, சேவைக்கு தாமே காரணம் என சில தமிழ் அரசியல்வாதிகள் கூறிவருகின்றனர். 1950 இல் கைத்தொழில்,கடற் றொழில் அமைச்சரான ஜீ.ஜீ.பொன்னம்பலம் காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலைக்கு விஜயம் செய்த பிரதமர் டி.எஸ்.சேனாநாயக்காவிடம் பலாலி விமான நிலையம், காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தியை வலியுறுத்தினார். ஊர்காவற்றுறை எம்.பியும் பிரபல கப்பல் முகவருமான அல்பிறட் தம்பி ஐயாவும் இதனை கோரியிருந்தார்.தொழிலதிபர் சேர்.சிற்றம்பலம் கார்டினர் தனது சொந்த ஊரான அச்சுவேலிக்கு அடிக்கடி விமான மூலம் வந்தபோதும் பலாலி விமான நிலைய அபிவிருத்தியை அரசின் கவனத்துக்கு முன்வைத்தார்.
யாழ்.மேயர் அல்பிறட் துரையப்பாவும் பிரதமர் சிறிமாவோ,அமைச்சர்கள் விமானத்தில் வந்தபோதும் பலாலி கட்டடங்களை,சூழலை காண்பித்து அபிவிருத்தியை கோரினார். யாழ் மாவட்ட அரசியல் அதிகாரியும் நல்லூர் எம்.பியுமான சீ.அருளம்பலமும், அமைச்சர் செ.குமாரசூரியரும் இதனை வலியுறுத்தினர். சுதந்திரக்கட்சி ஆட்சியில் சில அபிவிருத்தி வேலைகள் இங்கு இடம்பெற்றன. தமிழரசுக் கட்சியினரின் கறுப்புக்கொடி போராட்ட காலம்.
இலங்கை வரலாற்றில் பலாலி விமான நிலையம் முக்கிய இடம்பெற்றது. 1940 இல் 2 வது உலக யுத்த காலம் பிரித்தானிய விமானப்படையினர் ( Royal Air Force) தளமாக பயன்படுத்தி அவர்கள் சென்றதும் மூடப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சியாளர் வேறு தேவைகளுக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.
யாழ்.புனித பத்திரிசியார் கல்லூரி அதிபர் அருட்.தந்தை ரீ.எம்.எவ்.லோங் அடிகளார் அன்றைய ஆளுநர் மற்றும் அதிகாரிகளுடன் யாழ்.மக்களின் விமானப் பயணத்துக்கு பயன்படுத்தலாம் மூடவேண்டாம் என கேட்டிருந்தார்.
1947 டிசம்பர் 10 சிவில் விமானப் போக்குவரவு திணைக்களம் இரத்மலானையில் இருந்து பலாலி ஊடாக (Air Ceylon) விமான சேவையை 16 பயணிகளுடன் சென்னைக்கு முதலில் ஆரம்பித்தது. பலாலியில் தரித்தபோது சென்னைக்கு பயணிப்பவர்கள் ஏறிக்கொண்டர். இச்சேவை தடையின்றி தொடர்ந்தது. யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு விமானத் தபால் சேவையும் நடைபெற்றது. காலை 10 மணிக்குள் யாழ்.தபாற் கந்தோரில் ஒப்படைக்கும் அ(ஏயரோகிறாம்) தபால் மாலையில் கொழும்பில் விநியோகிக்கப்பட்டது.இந்தியாவுக்கும் விமானத் தபால் சேவை நடைபெற்றது.
1978 செப்டம்பர் 7 அவ்ரோ பயணிகள் விமானக் குண்டு வெடிப்பு சம்பவத்தால் இச்சேவை நிறுத்தப்பட்டது.பலாலியில் இருந்து இரத்மலானை சென்ற இவ்விமானம் இரத்மலானையில் தரையிறங்கி பயணிகள் இறங்கிய பின்னர் விமானத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது.
இரத்மலானையில் இருந்து அவ்விமானம் மாலைதீவுக்கு செல்லவிருந்தது.
1950- 60 களில் பலாலிக்கும் தமிழகத்தும் இடையிலான விமான சேவையால் இந்தியாவில் உயர் கல்வி கற்ற மாணவர்கள் பயனடைந்தனர். தமிழக ஆலயங்களுக்கு பலர் சென்றவர்கள். அரச ஊழியர்கள் தமது மூன்று புகையிரத பயண ஆணைச்சீட்டுகளை பயன்படுத்தி இரத்மலானை-பலாலி விமானத்தில் குடும்பத்துடன் பயணம் செய்யலாம். சுங்கப்பிரிவும் இயங்கியது. மதகுரு ஒருவர் குடையின் கைப்பிடிக்குள் தங்கச்சங்கிலியை மறைத்து வைத்து பிடிபட்ட சம்பவம் அன்று பத்திரிகைகளில் செய்தி.
தமிழக பத்திரிகைகள்,சஞ்சிகைகள் விமான மூலமே யாழ்ப்பாணம்,கொழும்புக்கு அனுப்பப்பட்டன. தமிழக கலைஞர்கள்,பிரமுகர்கள் பலர் வடக்கிலும் கொழும்பிலும் இடம்பெற்ற நிகழ்வுகளுக்கு விமானத்தில் வந்தனர்.1965 ஒக்டோபர் 24 மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், நடிகை சரோஜாதேவி கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு விமானத்தில் பலாலிக்கு வந்ததும் குறிப்பிடத்தக்கது.
வடக்கில் கடல் வழியாக (கள்ளக்குடியேற்றம்) கடத்தல் போன்ற சட்டவிரோத செயற்பாடுகளை தடுப்பதற்கு 1976 இல் பலாலியில் விமானப்படை முகாம் சுதந்திரக்கட்சி ஆட்சியில் நிறுவப்பட்டது. இங்கிருந்து ஹெலிகொப்டர்களில் வடபகுதி கடற்பகுதியை கண்காணித்தனர்.1982 இல் விமானப் படையினர் அதிகரிப்பு. யுத்த நடவடிக்கைகளுக்கு படையினருக்காக மட்டும் பலாலி விமான நிலையம் பயன்படுத்தப்பட்டது.பலாலியை சூழவுள்ள பகுதிகளில் மக்கள் இடம்பெயராது 1990 ஜூன் வரை வாழ்ந்தனர்.
1987 மே வடமராட்சி ‘லிபரேசன் ஒப்ரேசேன்’ முதல் 1995 ‘சூரியகதிர்’ வரையான குடாநாட்டின் படை நடவடிக்கைகளுக்கு பலாலி விமான நிலைய மே கேந்திர இடம். எறிகணை (ஆட்லறி ஷெல்)வீச்சுக்கள் பலாலியில் இருந்தே போரின்போது குடாநாட்டின் பகுதிகளுக்கு ஏவப்பட்டன.மேலதிக படையினர் இங்கு இருந்தே ஹெலிகளில் யுத்த களத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.காயமடைந்த படையினரும் விமான மூலம் கொழும்புக்கு அனுப்பப்பட்டனர்.முப்படை தளபதிகள் அடிக்கடி வந்தனர்.
1987 ஜூலை இலங்க இந்திய ஒப்பந்தத்தை தொடர்ந்து இந்திய இராணுவம் நிலைகொண்டது.இந்திய விமானங்கள் தரையிறங்கின. இந்திய படை அதிகாரிகள், இந்திய உயர் ஸ்தானிகர் ஜே.என்.டிக்சிற்,புலிகளின் தலைவர் வே.பிரபாகரன்,அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் பலாலி விமான நிலையத்தில் சமாதானப் பேச்சுக்களை நடாத்தினர். 1987 ஒக்டோபர் 5 இல் குமரப்பா புலேந்திரன் உட்பட 12 புலி உறுப்பினர்களை விமான மூலம் விசாரணைக்காக கொழும்புக்கு கொண்டு செல்ல இலங்கை படையினர் முயன்றதும் சயனைட் அருந்தி மரணமானதும் பலாலி விமான நிலையத்தில்.
1987 ஒக்டோபர் 30 புலிகளுக்கும் இந்திய இராணுவத்துக்கும் மோதல் ஆரம்பித்ததும் பலாலி விமான நிலையத்தில் இருந்தே இந்திய படையினரின் கவச வாகனங்கள், செயின் புளொக்,ஹெலிகொப்டர்கள் தாக்குதலுக்கு சென்றன.மேலதிக படையினரும் கொண்டு செல்லப்பட்டனர்.
இந்திய படை காலம் இரத்மலானை-பலாலி தனியார் விமான பயணிகள் சேவை நடைபெற்றது.1996 குடாநாட்டை இலங்கை இராணுவம் பிடித்ததும் ‘லயன் எயர், ‘மொன்றா’ இரு பயணிகள் விமான சேவைகள் ஆரம்பமாகின. 1998 செப்டம்பர் 29 ‘லயன் எயர்’ விமானம் பூநகரி பகுதியில் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டு 48 தமிழ்ப் பயணிகள் பலி என அரசு அறிவித்ததுடன் இச்சேவைகள் நிறுத்தப்பட்டன.
1995 ஏப்ரல் 28 விமானப்படை ” அவ்ரோ 748 ரக விமானம் பலாலியில் புறப்பட்ட சில மணிக்குள் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதில் 51 பேர் பலியானார்கள். 2002 புலிகள்- ரணில் அரசு சமாதானப்பேச்சு பயணிகள் விமான சேவை இரத்மலானை- பலாலி நடைபெற்றது. 2009 யுத்தம் முடிந்ததும் 2012 ஜனவரி இல் 25 ExpoAir விமான சேவை பலாலி- இரத்மலானை நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.