சல்மான் ருஷ்டி – சர்ச்சைகளின் சிருஷ்டி..!

328 0

நியூயோர்க்கில் இடம்பெற்ற சல்மான் ருஷ்டி மீதான தாக்குதலானது கருத்து சுதந்திரத்துக்கு எதிரான வன்முறை என மேற்குலக நாடுகள் கூறி வருகின்றன. ஆனால் இறைதூதரை அவமதிக்கும் விதத்தில் அவர் எழுதிய சாத்தானின் வசனங்கள் என்ற படைப்புக்காக அவருக்குக் கிடைத்த தண்டனை இது என இஸ்லாம் மார்க்க விசுவாசிகள் கூறி வருகின்றனர்.

இஸ்லாமியர்களின் கோபத்தை குறை கூற முடியாது. சல்மான் இஸ்லாமியர்களின் நம்பிக்கையை விமர்சித்த ஒரு படைப்பாளியாக இனங்காணப்படுவதற்கு முன்பாக அவர் பிறப்பால் இஸ்லாமியராக இருந்தேதே இந்த சீற்றங்களுக்கு மூல காரணம்.

1981 இல் அவர் எழுதிய Mid Night Children என்ற படைப்புக்கு உயரிய புக்கர் விருது கிடைத்தவுடன் அவர் அசாதாரணமான ஒரு சிருஷ்டிகர்த்தா என்ற புகழுக்குரியவரானார்.

ஏனெனில் அதை அவர் Megical Realism என்று அழைக்கப்படும் மாயாஜா யதார்த்தவாதத்தை அடிப்படையாக்கொண்டு படைத்திருந்தார். இந்தியா சுதந்திரம் கிடைத்த நள்ளிரவும் பாகிஸ்தான் பிரிவினையும் தான் அந்த படைப்பின் கருவாக இருந்தது.

இந்தியாவின் அப்போதைய  பம்பாயில் அவர் இந்தியா சுதந்திரம் கிடைக்க இரண்டு மாதங்களுக்கு முன்பு பிறந்தார் சல்மான். 14 வயதில் அவர் கல்வி கற்பதற்காக இங்கிலாந்து சென்றார். கேம்பிரிட்ஜின் கிங்ஸ் கல்லூரியில் வரலாற்றுத்துறை சிறப்புப்பட்டம் பெற்றார்.

அதன் பிறகே அவர் தன்னை முழுமையாக இஸ்லாம் மத நம்பிக்கைகளிலிருந்து விடுவித்துக்கொண்டார். 1970 களிலிருந்து அவர் எழுதத்தொடங்கினாலும் அவர் பேசப்பட்டது 1981 இற்கு பிறகு தான். அது வரையிலும் அவர் மதம் சார்ந்த மூட நம்பிக்கைகளை எழுதியும் பேசியும் வந்த ஒருவர் தான்.

இந்த இறை நம்பிக்கைகள் எவ்வாறு மனிதர்களை திசைமாற்றுகின்றன என்பதே அவரின் மூலக்கருத்தாக இருந்தது. ஆனால் 1988 இல் இவர் வெளியிட்ட சாத்தானின் வசனங்கள் (Satanic Verses) என்ற படைப்பு இஸ்லாமிய உலகை கொந்தளிக்கச் செய்தது. தனது படைப்புகள் பேசப்பட வேண்டும் என்பதற்காகவும் சர்ச்சைகளின் வடிவமாக தான் இருக்க வேண்டும் என்று நினைத்தா சல்மான் இப்படியானதொரு படைப்பை எழுதினார் என்ற கேள்வி நெடுநாட்களாக பல படைப்பாளிகளிடம் இருந்து வருகின்றது.

அவர் பிறந்து வளர்ந்த இந்தியாவே இந்த புத்தகத்தை தடை செய்த முதல் நாடாகியது. அதன் பிறகு இஸ்லாமிய நாடுகள் இந்த புத்தகைத்துக்கு தடை விதித்தன.

 

ஆனால் அவர் பிறந்த நாடான இந்தியாவின், அண்மைக்கால இந்துத்துவா பற்றியும் அவர் பல விமர்சனங்களை முன் வைத்திருந்தார் என்பத முக்கிய விடயம். பிரதமர் மோடியின் இந்து தேசியவாத கொள்கைகள் மற்றும் அதை வைத்து ஏனைய மதத்தவர் மீதான அடக்குமுறைகள் பற்றி அவர் திறந்த கருத்துக்களை முன்வைக்க ஆரம்பித்தவுடன் அவர் ஒரு முழுமையான நாத்திகவாத படைப்பாளர் என்பதை ஏனையோர் உணர்ந்து கொண்டனர்.

ஆனால் அவரது கருத்துகள் குறித்து இந்துத்துவாவாதிகளிடமிருந்து விமர்சனங்கள் எழுந்திருக்கவில்லை. ஏனென்றால் அவர் அப்போது இருந்தது அமெரிக்காவில்.

88 இற்குப்பிறகு அவருக்கு எழுந்த தொடர்ச்சியான கொலை மிரட்டல்களால் பிரித்தானியாவே அவருக்கு பாதுகாப்பு அளித்தது.

1989 ஆம் ஆண்டு ஈரான் குடியரசின் உயரிய மதத்தலைவரான ஆயத்துல்லா கொமய்னி இஸ்லாமிய ஷரீயா சட்டத்தின் கீழ் தீர்ப்பு வழங்கக் கூடிய ஃபத்வா எனும் ஆணையை பிறப்பித்தார். அதன் படி சாத்தானின் வேதங்கள் புத்தகத்தின் ஆசிரியர் உட்பட அதன் வெளியீடுகளில் ஈடுபடுபவர்களை அவதூறாக கொல்லும்படியான உத்தரவாக அது அமைந்தது.

இதை வேத வாக்காக ஏற்றுக்கொண்ட ஷியா முஸ்லிம்கள் சல்மான் ருஷ்டி எங்கிருந்தாலும் கொல்லப்பட வேண்டியவரே என்ற வைராக்கியத்தை உருவாக்கிக்கொண்டனர். சல்மானின் தலைக்கு பல கோடிகள் விருதாக அறிவிக்கப்பட்டன. இந்த உத்தரவு அல்லது ஆணையின் தீவிரம் 1991 ஆம் ஆண்டு வெளிப்பட்டது. இந்த படைப்பை ஜப்பானிய மொழியில் மொழிபெயர்த்த ஹிட்டோஷி இகராசி அந்த ஆண்டு, அவர் பணியாற்றிய டோக்கியோ பல்கலைக்கழக வளாகத்தில் பல தடவைகள் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

அதே வருடம் இந்நாவலின் இத்தாலிய மொழிபெயர்ப்பாளர் எடோர் கெப்ரியோலோ இத்தாலி மிலனில் உள்ள தனது வீட்டுக்கருகில் கத்தியால் குத்தப்பட்டாலும் பிழைத்துக்கொண்டார்.

இது சல்மான் தனதும் தனது குடும்பத்தினதும் பாதுகாப்பு குறித்து கவலைப்படும் நிலைக்கு தள்ளியது. 2016 ஆம் ஆண்டு அவர் அமெரிக்க குடியுரிமை பெற்று அங்கே நிரந்தரமாக வசிக்கத் தொடங்கினார். ஆனால் அவரால் சுதந்திரமாக மக்கள் மத்தியில் நடமாட முடியவில்லை. இரண்டு மாதங்களுக்கொரு முறை தனது வீடுகளை மாற்றினார்.

இத்தகைய சூழ்நிலையிலும் அவர் தனது கொள்கையில் சமரசம் செய்து கொள்ளவில்லை. தொடர்ந்தும் மதவாதிகளை விமர்சித்தே எழுதியும் பேசியும் வந்தார். இவரின் கருத்துக்களை உள்வாங்கி கொண்ட பல நிறுவனங்கள் அமைப்புகள் அவரை கருத்துத் சுதந்திரம் பற்றி பேச அழைத்தன. அதை ஒவ்வொரு தடவையும் வலியுறுத்தி வந்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை நியூயோர்க்கில் இடம்பெற்ற ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட சல்மான் ருஷ்டி மேடையில் வைத்தே ஒரு இளைஞரால் கத்தியால் கொடூரமாக குத்தப்பட்டார். தலை மற்றும் உடல் பகுதிகளில் அவருக்கு கடுங்காயங்கள் ஏற்பட்டன.

தற்போது அவர் தீவிர சிகிச்சைக்கு முகங்கொடுத்து வருகின்றார். அவரை குத்திய 24 வயது இளைஞரான ஹாடி மட்டார் நியூஜேர்சியை சேர்ந்தவர். அவர் லெபனான் பெற்றோருக்கு அமெரிக்காவில் பிறந்தவர். இவர் ஷியா முஸ்லிம்களின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட ஒருவராக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

ஒரு தடவை அமெரிக்காவில் செய்தியாளர்கள் சல்மான் ருஷ்டியை சந்தித்தபோது அதில் ஒருவர் பத்திரிகையாளர் இப்படி கேள்வி எழுப்பினார்;

நீங்கள் ஏன் மதங்களை மதிப்பதில்லை?

அதற்கு சல்மான் இவ்வாறு பதிலிளித்தார்,

”மதங்களுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும்” என்ற சொற்றொடர் நாளடைவில் ”மதங்களுக்கு மனிதன் பயப்பட வேண்டும்” என் மாறிவிட்டது. மனிதன் பயப்படும் ஒரு விடயம் குறித்து அவன் கேள்வி எழுப்ப மாட்டான். அதனால் மதங்களின் பெயரில் பல அநியாங்கள் நடக்க தொடங்கி விட்டன. மதங்கள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவை அல்ல. மதங்கள் மீது திணிக்கப்படும் புனிதம் அகற்றப்பட வேண்டும். மதங்கள் விமர்சிக்கப்பட வேண்டும். கேலி செய்யப்பட வேண்டும். அப்போதுதான் அவற்றில் இருக்கும் சில மூட நம்பிக்கைகள் ஒழியும்….!

இவ்வாறு அமைந்தது அவரது பதில். ஆனால் கருத்து சுதந்திரம் என்பது தனி மனிதர்களையும் , குழுக்களையும், அமைப்புகளையும், நம்பிக்கைகளையும், மதங்களையும் விமர்சிப்பதாக அமைவதல்ல என்ற கருத்து சுதந்திரம் தொடர்பான நெறிமுறைகளை பின்பற்றுவோரின் அறிவுரையாகவும் தர்மமாகவும் உள்ளது.

இதில் சல்மான் எங்கு தவறு விட்டிருக்கின்றார் என்பதை புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. மூட நம்பிக்கைகள் என்றால் என்ன என்பது குறித்து மேற்குலகத்தினருக்குத் தெரியாது. ஆனால் இந்தியா போன்ற கீழைத்தேச நாடுகளில் எல்லா இன, மத மனிதர்களின் வாழ்க்கையிலும் அவை ஆட்சி செலுத்துகின்றன.

அவ்வாறான ஒரு சூழ்நிலைகள் கொண்ட ஒரு நாட்டில் பிறந்து வளர்ந்து, ஒரு கட்டத்தில் அந்த ஒரு நாடே இரண்டாக பிரிவுற்ற வரலாற்று சம்பவங்கள் மற்றும் அதைத்தொடர்ந்து இன்று வரை இடம்பெற்றுக்கொண்டிருக்கும் மதவாத சம்பவங்கள் தான் சல்மானை இந்தளவுக்கு சமரசம் செய்து கொள்ள முடியாத மனிதராகவும் படைப்பாளியாகவும் மாற்றியதா?

சல்மானின் இந்த நிலைமைக்கு அவர் மட்டும் தானா காரணம்?

சிவலிங்கம் சிவகுமாரன்