சர்வகட்சி அரசாங்கம் அமைக்கும் முயற்சிகள் ஒப்பேறுமா ?

168 0

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடரை இம்மாத முதல் வாரத்தில் சம்பிரதாயபூர்வமாக தொடக்கிவைத்து நிகழ்த்திய கொள்கை விளக்கவுரை பரவலான வரவேற்பைப் பெற்றிருந்தது.அந்த உரைமீது பாராளுமன்றத்தில் கடந்தவாரம் மூன்று நாள் விவாதமும் இடம்பெற்றது.பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் ஆரம்பத்தில் வெளிப்படுத்திய அனுகூலமான பிரதிபலிப்பு விக்கிரமசிங்க அழைப்பு விடுத்ததன் பிரகாரம் இன்றைய பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் உறுதிப்பாடின்மையில் இருந்து நாடு விடுபடுவதற்கு உதவுமுகமாக அவர்கள் எல்லோரும் சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு ஒத்துழைக்கக்கூடும்  என்ற எதிர்பார்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தது.

ஆனால், நாளடைவில் அவர்கள் தங்களது பழக்கதோசத்தின்படி  கட்சி அரசியலுக்கே திரும்பிவிட்டார்கள்.சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் கட்சிகள் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துகின்ற போதிலும், அவை முன்வைக்கின்ற நிபந்தனைகள் அத்தகைய அரசாங்கம் ஒன்று அமைவதற்கான சாத்தியம் பெரும்பாலும் இல்லை என்பதையே உணர்த்துகின்றன.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான சமகி ஜன பலவேகய அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொள்ளாமல் பல கட்சி அரசாங்கத்துக்கு பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண்பதற்கு ஒத்துழைக்கும் நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது.ஆனால் , அதன் தலைவர்கள் ஒவ்வொருவரும் முரண்பாடான கருத்துக்களை வெளியிட்டுக்கொண்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது.

சமகி ஜன பலவேகயவின் எரான் விக்கிரமரத்ன எம்.பி. பல  கட்சி அரசாங்கத்தை ஆதரிக்கவேண்டும் என்று கூறுகின்ற அதேவேளை,  பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களே மீண்டும் அத்தகைய அரசாங்கத்தில்  முக்கிய பதவிகளில் அமரும் வாய்ப்பு இருப்பதால் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை என்று கூறுகிறார்.

இதனிடையே அந்த கட்சியின் சிரேஷ்ட பிரதி தலைவரான லக்ஸ்மன் கிரியெல்ல சர்வகட்சி அரசாங்கத்துக்கான காலவரையறை குறித்தோ அல்லது அடுத்த பாராளுமன்றத் தேர்தல் எப்போது நடைபெறும் என்பது குறித்தோ ஒருபோதும் ஜனாதிபதி பேசுகிறார் இல்லை என்று குற்றஞ்சாட்டுகிறார்.இந்த இரு விடயங்கள் குறித்தும் ஜனாதிபதியிடமிருந்து தெளிவான பதில் வராதபட்சத்தில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் எந்தவொரு கட்சியும் கருத்தொருமிப்புக்கு வரமுடியும் என்று தான் நம்பவில்லை என்றும் அவர் ஊடகங்களுக்கு கூறியிருக்கிறார்.

ஜனாதிபதி விக்கிரமசிங்கவுக்கு ஒத்துழைப்பு கொடுத்து நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க அவருக்கு அவகாசம் கொடுக்கவேண்டும் என்ற அபிப்பிராயத்துடன் சமகி பல ஜனவேகயவில் பல எம்.பி.க்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் கடந்த சில நாட்களாக வெளிப்படையாக கருத்துக்களை சொல்லாமல் அமைதியாக இருக்கிறார்கள்.வேறு சிலர் சகல கட்சிகளினாலும் வகுக்கப்படக்கூடிய பொதுவேலைத் திட்டம் ஒன்றுக்கு ஆதரவளிக்கத் தயாராயிருப்பதாக கூறுகிறார்கள்.

இதனிடையே,  எதிர்க்கட்சி தலைவர் பிரேமதாச,பல கட்சி அரசாங்கம் ஒன்றில் அமைச்சுப் பதவிகளை ஏற்று இணையுமாறு தனது கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்களுக்கு மட்டுமீறிய நெருக்குதல்கள் கொடுக்கப்படுமாக இருந்தால் அரசியலில் இருந்து விலகிவிடப்போவதாக கூறியிருக்கிறார்.அவரது கட்சியில் இருப்பவர்கள்  பலரும் முன்னர் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவர்களே.விக்கிரமசிங்க தலைமையில் அந்த கட்சியில் தொடர்ந்தும் இருந்தால் தேர்தல்களில் வெற்றிபெற்று பாராளுமன்றம் வரமுடியாது என்பதை உணர்ந்தே அவர்கள் பிரேமதாசவுடன் வந்தார்கள்.

அவர்களது முன்னாள் தலைவர் விக்கிரமசிங்க இப்போது நாட்டின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி.அரசாங்கத்தில் இணையுமாறு நிச்சயமாக அவர்கள் மீது செல்வாக்கு  பிரயோகிக்கப்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.ஆனால், அவ்வாறு செல்வாக்கு செலுத்தப்பட்டால் அரசியலில் இருந்து விலகிவிடப்போகிறேன் என்று நாட்டின் இரண்டாவது பெரிய கட்சியின்  தலைவரிடமிருந்து வார்த்தை வந்திருக்கவே கூடாது.அது அவரது அரசியல் இருப்பின் பலவீனத்தையே அம்பலப்படுத்துகிறது.தனது கட்சி எம்.பி.க்களை கட்டுக்குள் வைத்திருப்பதில் பிரேமதாச பெரும் சிக்கலை எதிர்நோக்குகிறார் என்பது புலனாகிறது.

அடுத்ததாக, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியைப் பொறுத்தவரை ஜனாதிபதியுடன் ஓரிரு தடவைகள் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தாலும் அரசாங்கத்தில் இணைவதற்கு  விரும்பவில்லை.நெருக்கடியை தீர்ப்பதற்கு ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கத் தயாராயிருப்பதாகவும் ஆனால் எந்தவொரு அமைச்சுப் பொறுப்பையும் ஏற்கப்போவதில்லை என்றும் சுதந்திர கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்திருக்கிறார்.

ராஜபக்சாக்களின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அதிருப்தியாளர்கள் குழுவாக பாராளுமன்றத்தில் சுயேச்சையாக இயங்கும் எம்.பி.க்களும் ஜனாதிபதியுடன் கடந்தவாரம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.அவர்களும் அமைச்சுப் பதவிகளையோ விசேட சலுகைகளையோ விரும்பவில்லை என்றும் நாட்டை கட்டியெழுப்புவதற்கு முன்னெடுக்கப்படக்கூடிய மெய்யான முயற்சிகளுக்கு ஆதரவளிக்கத் தயாராயிருப்பதாகவும்  அவருக்கு கூறியிருக்கிறார்கள்.

ஜனாதிபதியின் பாராளுமன்ற உரையை அடுத்து உடனடியாகவே சர்வகட்சி அரசாங்கத்தில்  பங்கேற்கப்போதில்லை என்று முதலில் அறிவித்த கட்சி ஜனதா விமுக்தி பெரமுன. சர்வகட்சி அரசாங்கத்தின் காலவரையறை பற்றியோ அடுத்த தேர்தல்கள் பற்றியோ ஜனாதிபதி எதையும் குறிப்பிடவில்லை என்பதை தங்களது  மறுப்புக்கான பிரதான காரணமாக கட்சியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்க கூறியிருந்தார்.

ஜனாதிபதியின் அழைப்பையேற்று கடந்தவாரம்  முதலில் பேச்சுவார்த்தைக்கு தயாராகவிருந்த ஜே.வி.பி. பின்னர் அதில் பங்கேற்பதில்லை என்று முடிவெடுத்தது.உத்தேச சர்வகட்சி அரசாங்கம் பொதுத்தேர்தல் ஒன்றுக்கு விரைவில் வழிவகுக்கக்கூடிய ஒரு இடைக்கால அரசாங்கமாக இல்லை என்றும் ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் அதிகாரத்தை நிலைநிறுத்தி கடனுதவிகளைப் பெறுவதற்காக சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையைப் பெறுவதே சர்வகட்சி அரசாங்கம் அமைக்கும் முயற்சிகளின் நோக்கம் என்றும் ஜே.வி.பி. கூறுகிறது.

அண்மைய எதிர்காலத்தில் தேர்தல் ஒன்றை எதிர்நோக்கக்கூடிய நிலையில் நாடு இல்லை என்பது ஜே.வி.பி.யினருக்கு தெரியாததல்ல.அண்மைய மக்கள் கிளர்ச்சியின் விளைவாக நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற அரசியல் பருவநிலை மாற்றம் விரைவில் நடத்தப்படக்கூடிய தேர்தல் ஒன்றில் தங்களுக்கு பெரும் வாய்ப்பாக அமையும் என்று அந்த கட்சியின் தலைவர்கள் நம்புகிறார்கள் போலும்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு மக்கள் மத்தியில் இருக்கக்கூடிய செல்வாக்கு தொடர்பில் சில தினங்களுக்கு முன்னர் அபிப்பிராய வாக்கெடுப்பு  நடத்தப்படடது. அதில் அநுரா குமார திசாநாயக்கவுக்கு 48 சதவீதமும் ஜனாதிபதி விக்கிரமசிங்கவுக்கு 36சதவீதமும் டலஸ் அழகப்பெருமவுக்கு 23 சதவீதமும் கிடைத்திருப்பதாக தெரியவந்திருக்கிறது. சஜித் பிரேமதாச ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடவில்லை என்ற போதிலும் அவரின் செல்வாக்கு குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு  29 சதவீதம் கிடைத்திருக்கிறது என்று த ஐலண்ட் பத்திரிகை கூறியிருக்கிறது.

கடந்த இரு தேர்தல்களிலும் பொதுஜன பெரமுனவுக்கு மக்கள் வழங்கிய ஆணை இப்போது வலுவிழந்துவிட்டதால் விரைவில் தேர்தலொன்றுக்கு போவதற்கு வகைசெய்யக்கூடியதாக இடைக்கால அரசாங்கம் ஒன்றே இப்போது  நாட்டுக்கு தேவை என்று ஜே.வி.பி. உறுதியாக வலியுறுத்துகிறது.

2019 ஜனாதிபதி தேர்தலில் 69 இலட்சம் மக்களின் வாக்குகளைப் பெற்று அதிகாரத்துக்கு வந்த ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச இரண்டரை வருடங்களுக்குள்ளாக மாபெரும் மக்கள் கிளர்ச்சிக்கு மத்தியில் கடந்த மாதம்  நாட்டில் இருந்து வெளியேறி பதவியைத் துறந்தார்.இப்போது அவர் தற்காலிகமாக தங்குவதற்கு நாடுவிட்டு நாடு சென்றுகொண்டிருக்கிறார். 2020 பாராளுமன்ற தேர்தலில் பொதுஜன பெரமுனவுக்கு  தலைமைதாங்கி அதற்கு அமோக வெற்றியைப் பெற்றுக்கொடுத்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் அதே மக்கள் கிளர்ச்சியின் விளைவாக மேமாதம் பிரதமர் பதவியில் இருந்து விலகினார். அமைச்சரவையும் பதவிவிலகியது. இன்று எந்தவொரு ராஜபக்சவும் அதிகாரப்பதவிகளில் இல்லை.

அதேவேளை கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி ஒரு ஆசனத்தைக்கூட பெறவில்லை. அதில் தோற்கடிக்கப்பட்ட விக்கிரமசிங்க நாடளாவிய ரீதியில் கட்சி பெற்ற  சுமார் இரண்டரை இலட்சம் வாக்குகளின் அடிப்படையில் கிடைக்கப்பெற்ற தேசியப்பட்டியல் ஆசனத்தை பயன்படுத்தி கடந்த வருடம் மீண்டும் பாராளுமன்றம் வந்து இப்போது நாட்டின் ஜனாதிபதியாக ஆட்சியதிகாரத்துக்கும்  வந்துவிட்டார்.

அதனால் பொதுஜன பெரமுனவுக்கு அந்த இரு தேர்தல்களிலும் மக்கள் வழங்கிய ஆணை செல்லுபடியற்றதாகிவிட்டது என்றும் மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சியின் தலைவர் ஜனாதிபதியாக வந்திருக்கிறார் என்றும் முன்வைக்கப்படுகின்ற  வாதத்தில் நியாயப்பாடு  இருக்கவே செய்கிறது.அது தார்மீக நெறிப்பட்ட நிலைப்பாடு.  ஆனால், அரசியலமைப்பு அடிப்படையில் நோக்கும்போது தற்போதைய பாராளுமன்றமோ அல்லது அதனால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதியோ சட்டவிரோதமாக செயற்படுவதாக எவரும் கூறிவிடமுடியாது.இதுவே ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் அதிகார இருப்பை வலுப்படுத்தியிருக்கிறது.

ஜனாதிபதியாவதற்கு முன்னர் பிரதமராக இருந்த நாட்களில் பாராளுமன்றத்தில் ஒரு தடவை  உரையாற்றியபோது விக்கிரமசிங்க,” அதிகாரம் என்பது கைப்பற்றுவது ; யாரும் கொண்டுவந்து தருவார்கள் என்று காத்திருப்பதற்குரிய விடயம் அல்ல ” என்று  குறிப்பிட்டதை நினைவுபடுத்தவேண்டியிருக்கிறது.

இது இவ்வாறிருக்க, தமிழ், முஸ்லிம் கட்சிகளுடனும் வேறு கட்சிகளுடனும் ஜனாதிபதி தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்திக்கொண்டிருக்கிறார். நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்கான தேசிய செயற்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த ஒத்துழைப்பு தருவதாக இந்த கட்சிகள் எல்லாம் பொதுப்படையாக கூறுகின்றனவே தவிர,திட்டவட்டமான நிலைப்பாடுகளை அறிவிப்பதாக இல்லை.அதேவேளை,விக்கிரமசிங்கவுக்கு எதிர்பாராத தரப்பிடம் இருந்து தெளிவான ஒத்துழைப்பு கிடைத்திருக்கிறது. பொதுஜன முன்னணி தலைமையிலான கூட்டணியில் இருந்து சில மாதங்களுக்கு முன்னர் வெளியேறி பாராளுமன்றத்தில் சுயேச்சையாக இயங்கும்  10 கட்சிகள் கொண்ட அணியே அதுவாகும்.

முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார,உதய கம்மன்பில ஆகியோரினால் இந்த அணி வழிநடத்தப்படுகிறது.குறிப்பாக வீரவன்சவே அணியின் நிலைப்பாடுகளை வெளிப்படுத்துவதில் முன்னரங்கத்தில் காணப்படுகிறார். இவர்கள் எல்லோரும் என்றைக்குமே  ஐக்கிய தேசிய கட்சியினதோ அல்லது விக்கிரமசிங்கவினதோ அரசியலை ஆதரித்தவர்கள் அல்ல.அடியோடு வெறுத்தவர்கள். அவருக்கு எதிரான முகாமிலேயே தங்களை அடையாளப்படுத்திவந்தவர்கள்.

இன்று அவர்கள் அவசரகாலச் சட்ட பிரகடனத்துக்கு ஆதரவாக சபையில் வாக்களித்து ‘ அரசைப் பாதுகாக்கும் ‘ ஜனாதிபதியின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

அதே போன்றே தினேஷ் குணவர்தனவும் எப்போதுமே ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிரான முகாமைச் சேர்ந்தவராகவே தனது அரசியலை முன்னெடுத்தவர். ஜனாதிபதி விக்கிரமசிங்கவுடன் ஒன்றாக கொழும்பு றோயல் கல்லூரியில் படித்தவர் என்றாலும், குணவர்தன அவரது அரசியல் கொள்கைகளை கடுமையாக எதிர்த்துவந்தவர்.இன்று  அவரது தலைமையிலான அரசாங்கத்தில் பிரதமராக பதவி வகிப்பதில் எந்த அசௌகரியத்தையும்  குணவர்தன காண்பதாக தெரியவில்லை.மக்கள் கிளர்ச்சியின் விளைவாக சடுதியாக மாற்றமடைந்த அரசியல் கோலங்கள் விசித்திரமான ‘ அரசியல் படுக்கைத் துணைகளை ‘ அரங்கிற்கு  கொண்டுவந்திருக்கிறது.

இத்தகைய பின்புலத்தில், சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான ஜனாதிபதியின் முயற்சிகள் எந்தளவுக்கு  வெற்றியளிக்கக்கூடியதாக இருக்கும் என்ற கேள்வி எழுகிறது.

ஒவ்வொரு கட்சியுமே நாட்டை மீட்பற்காக ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாக கூறுகின்ற போதிலும், இத்தகைய சர்வகட்சி அரசாங்கம் ஒன்றில் அல்லது பலகட்சி அரசாங்கம் ஒன்றில் பங்கேற்பதனால் எதிர்காலத்  தேர்தல்களில் தங்கள் வாய்ப்புகளுக்கு  ஏற்படக்கூடிய விளைவுகளை பற்றி சிந்திப்பவையாகவே இருக்கின்றன. ஜனாதிபதி விக்கிரமசிங்கவும் கூட மக்கள் செல்வாக்கைப் பொறுத்தவரை பாதாளத்துக்கு சென்றிருக்கும் தனது கட்சியை மீளக்கட்டியெழுப்புவதற்கு தற்போது தனக்கு கிடைத்திருக்கும் அதிகாரப்பதவி வாய்ப்பை சாத்தியமானளவுக்கு பயன்படுத்துவார் என்பதில் என்ன சந்தேகம்.அதனால் சர்வகட்சி அரசாங்கம் என்பது தங்களுக்கு ஒரு பொறியாகப் போய்விடுமோ என்று கட்சிகளின் தலைவர்கள் சந்தேகிக்கிறார்கள் என்று தெரிகிறது.

தற்போதைய நிலைவரங்களின் அடிப்படையில் நோக்கும்போது சர்வகட்சி அரசாங்கம் ஒன்று அமைவதற்கான வாய்ப்பு குறித்து வலுவான சந்தேகம் எழுகிறது. அத்தகைய அரசாங்கம் ஒன்று அமைவதாயின் பிரதான எதிர்க்கட்சி நிச்சயம் பங்கேற்கவேண்டும் .குறைந்த பட்சம் பல கட்சிகளை உள்ளடக்கிய அரசாங்கம் ஒன்றையாவது அமைக்க ஜனாதிபதியினால் இயலுமாக இருக்குமா என்பது தெரியவில்லை.

அது சாத்தியமாகாமல் போகும் பட்சத்தில் தற்போதைய அரசாங்கத்தில் வேறு கட்சிகளின் எம்.பி.க்களை கவர்ந்திழுத்து  அமைச்சுப் பதவிகளை வழங்கி ஆட்சியைத் தொடருவதைத் தவிர ஜனாதிபதிக்கு வேறு வழியில்லை.தங்கள் கட்சி எம்.பி. க்களின் விசுவாசத்தின் இலட்சணத்தை நன்கு தெரிந்தவர்களான  தலைவர்கள் அதன் காரணத்தினால்தான் நாட்டை மீட்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு என்று வாய்ப்பாட்டை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

வீரகத்தி தனபாலசிங்கம்