தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் உள்ளக மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். சாணக்கியன் போன்ற இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை வழிநடத்த வேண்டும் என அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் கல்முனை தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் குறித்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், “தமிழ் மக்கள் கூட தமிழ் தலைமைகளை ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. காரணம் அநேகமாக மக்கள் பிரச்சினை தீர்க்கப்படாமை ஆகும்.
எதிர்கட்சி தலைவராக கடந்த காலங்களில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இருந்து கொண்டு ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக்கு ஆதரவாக செயற்பட்டுள்ளார்.
இனிவரும் காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஒற்றுமையினை ஏற்படுத்துவது என்பது சிரமம். இந்த பிரிவுகளை நீங்களாகவே ஏற்படுத்தி கொண்டுள்ளீர்கள்.
இதற்கமைய 20 வருடங்கள் நம்பி கெட்ட பின்னர் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை விமர்சிக்கின்றோம். கடந்த காலங்களில் தொழிலாளர் வர்க்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினையே நம்பி இருந்தது.
ஏனெனில் கடந்த காலங்களில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக இருந்தீர்கள். அக்காலத்தில் மக்கள் உங்களை அங்கீகரித்திருந்தார்கள்.
நாங்களும் அச்சந்தர்ப்பத்தில் உங்கள் பின்னால் வந்தோம். ஒழுங்கான வழிநடத்தல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இன்மையால் தான் கடந்த 32 வருடங்களாக இணைந்து செயற்பட்ட நாம் வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டோம்.
நாங்கள் உண்மையில் தமிழ் தேசியத்தை மதிக்கின்றவர்கள். மேலும் போராட்டங்களை மதிக்கின்றவர்கள், அண்ணன் பிரபாகரனின் (தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்) போராட்டங்களை கூட மதித்திருக்கின்றோம்.
தமிழீழ விடுதலை புலிகளோ அல்லது பிரபாகரனோ தற்போது இருந்திருந்தால் எமது தொழிற்சங்க உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திலோ அல்லது மாகாண சபையிலோ உறுப்பினர்களாக இருந்திருப்பார்கள்.
ஏனெனில் எமது பாதை சரியானது. இதனை நீங்கள் (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) புரிந்து கொள்ளவில்லை. எங்களை போன்ற தலைவர்களை வழிநடத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சிக்கவில்லை.
ஆகவே தான் உலக தமிழ் மக்களும், தொழிற்சங்கங்களும் தற்போது ஆதரவினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்குவதை குறைத்து வருகின்றார்கள் என்பதே உண்மையாகும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் உள்ளக மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை வழிநடத்த வேண்டும்.
சாணக்கியன் போன்ற இளைஞர்களுக்கு கட்சிக்குள் முன்னுரிமை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்” என தெரிவித்துள்ளார்.