சீன கப்பல் வந்தாலும் சிக்கல் வராவிட்டாலும் பிரச்சினை : ஜனாதிபதி எவ்வாறு சமாளிக்கிறார் என்பதே முக்கியம் – ரங்க கலன்சூரிய

218 0

சீன கப்பலை வர இலங்கை அனுமதிக்காவிடின் நிச்சயமாக சீனா பிரதிபலிப்புகளை செய்யும். அதேநேரம் இந்தியாவின் கரிசனையையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும். கப்பல் வந்தாலும் பிரச்சினை. வராவிட்டாலும் பிரச்சினை. நாம் இரண்டு பக்கம் சிக்கிய சென்விச் ஆகவே இருக்கின்றோம். இதனை சமநிலைப்படுத்துவது ஜனாதிபதிக்கு இருக்கின்ற பெரிய போராட்டமாகும். இந்த சமநிலையை சரியாக செய்யாதன் காரணமாகவே கடந்த காலங்களில் தலைவர்களுக்கு வீடு செல்ல ஏற்பட்டது  என்று  சர்வதேச அரசியல் ஆய்வாளர் கலாநிதி ரங்க கலன்சூரிய தெரிவித்தார். 

வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் அதனை குறிப்பிட்டார். செவ்வியின் விபரம் வருமாறு

கேள்வி இலங்கையில் இடம் பெற்ற இந்தப் போராட்டம் ஒரு புதிய அனுபவமாக இருந்தது. இதனை எப்படி பார்க்கிறீர்கள் ?

பதில் இந்த போராட்டம் என்பது ஒரு புதிய அனுபவமாகவே இருந்தது. முழு தெற்காசியாவுக்கும் அது ஒரு அனுபவமாக இருந்தது.  முதல் நூறு நாட்கள் அது அன்பின் போராட்டமாகவே இருந்தது. வன்முறைகள் இன்றி கலைத்துவமான முறையில் அது தொடர்ந்தது.   எனினும் பின்னர் அது அரசியலாகியது.    அரசியல் இல்லாத ஒரு போராட்டமாகவே இது ஆரம்பித்தது.  ஆனால் பின்னர் அது அரசியலாக மாறியது.  இலங்கையில் அரசியல்மயம் இல்லாமல் எதையும் செய்யமுடியாது.

கேள்வி இதற்கு முன்னர் இதுபோன்ற அனுபவம் இந்த பிராந்தியத்தில் இருந்ததா? 

பதில் இந்தப் பிராந்தியத்திலேயே இவ்வாறான போராட்டம் இருக்கவில்லை.

கேள்வி எனினும்  தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போராட்டத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில் அதை ஒரு சிறந்த நகர்வாக குறிப்பிடலாம். ஆனால் ஜனாதிபதி ஒருவரை வெளியேற்றும் வகையில் ஒரு போராட்டம் இதற்கு முன்னர் இந்த பிராந்தியத்தில் இடம்பெறவில்லை.

கேள்வி இரண்டாவது உலக யுத்தத்துக்கு முன்னரான மற்றும்  பின்னரான என காலப்பகுதிகளில் ரஷ்யா சீனா போன்ற நாடுகளில் போராட்டங்கள் இருந்தனவே? 

பதில் அவை மிகப்பெரிய போராட்டங்களாக காணப்பட்டன.  அண்மையில் கூட லிபியா  எகிப்து போன்ற  நாடுகளில் போராட்டங்கள் காணப்பட்டன. ஆனால்  ஜனாதிபதி ஒருவரை வெளியேற்றும் வகையில் ஒரு போராட்டம் தெற்காசியாவில் இது தான் முதல் தடவையாகும்.

கேள்வி இலங்கை ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில்   இருக்கிறது.  எனவே இந்தியா, சீனா, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளின் பார்வை இலங்கை மீது இருப்பது  இயல்பானது இந்த பின்னணியில் எமது வெளிவிவகார  அணுகுமுறை எவ்வாறு இருக்கின்றது?  நாம் ஒரு இடத்தில் நிலையாக இல்லை என்ற கருதுகிறீர்களா?

பதில் வெளிவிவகார விடயத்தில்  நாம் கடந்த பத்து வருடங்களில் பல தவறுகளை செய்திருக்கிறோம். நண்பர்களை உருவாக்குவதற்கு பதிலாக நண்பர்களை இழக்கும் வகையில் நாம் செயல்பட்டு இருக்கிறோம். விரோதிகளை நாம் உருவாக்கிக் கொண்டோம். ஒரு நாடு இன்னொரு நாட்டுடன் செயல்படும்போது ஒரு வாக்குறுதி அளித்தால் அதனை செய்ய வேண்டும்.  செய்ய முடியாவிடின் வாக்குறுதி அளிக்கக்கூடாது.  இந்த இரண்டையும் நாங்கள் செய்யவில்லை. இந்தியாவிடம் சில விடயங்களை நாங்கள் செய்வதாக வாக்குறுதி அளித்தோம். ஆனால் செய்யவில்லை. உள்நாட்டில் அழுத்தங்கள் ஏற்பட்டதனால் அவை கைவிடப்பட்டன. ஆனால் அது தொடர்பான உரிய விளக்கத்தை அளிக்கவில்லை. ஜப்பானுடன் இலகு ரயில் திட்டமொன்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. உடன்படிக்கை எட்டப்பட்டது.  பொருட்களும் கொண்டுவரப்பட்டன. ஒரு சில வினாடிகளில் இந்த முடிவு மாற்றப்பட்டது. அது தொடர்பாக ஜப்பானுக்கு உரிய முறையில் கூறப்படவும்  இல்லை. ஜப்பானுடன் எமக்கு ஒரு சிறந்த உறவு காணப்பட்டது. நாம் எதனை கேட்டாலும் ஜப்பான் அதனை   தரும் நிலையிலேயே இருந்தது. ஆனால் அந்த நிலைமையும் மாறியது.  அவ்வாறு முழு உலகமட்டத்திலும்  எமக்கு  பிரச்சினைகள் காணப்பட்டன.  கடந்த பத்து பதினைந்து வருடங்களில் நாம் தவறாக வெளிவிவகார  கொள்கையை இயக்கி நண்பர்களை இழந்து விரோதிகளை உருவாக்கிக் கொண்டோம்.

கேள்வி ஆனால் இப்போது நாம் ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இருக்கும்போது பல்வேறு தரப்பினரும் அதில் அக்கறை காட்டுவதால் எமக்கும் ஒரு அழுத்தம் இருக்கும் அல்லவா? அதனால் அதனை முகாமைத்துவம் செய்வதும் நெருக்கடி மிக்கது தானே?

பதில் இந்த அழுத்தமும் நெருக்கடியும் முன்னரும் இருந்தன.  சிறிமா பண்டாரநாயக்க காலத்தில் இந்த அழுத்தம் இருந்தது.  முன்னர் வெளிவிவகார துறைக்கு தனி அமைச்சு இருக்கவில்லை.  பிரதமர் தான் அதனை கையாண்டுவந்தார்.  1978 ஆம் ஆண்டு ஜே. ஆர். ஜயவர்த்தன  ஆட்சிக்கு வந்ததன் பின்னரே முதலாவது வெளிவிவகார அமைச்சராக அசிஸ் நியமிக்கப்பட்டார்.  அதுவரை பிரதமரே அதனை கையாண்டு வந்தனர்.

சிறிமா பண்டாநாயக்க இதனை மிகச் சிறப்பாக கையாண்டார்.  அவர் அமெரிக்கா செல் நிறுவனத்துக்கு இலங்கையில் இருந்து வெளியேறுமாறு கூறினார். அதற்காக அமெரிக்காவுடன் கோபிக்கவில்லை.  அதனை சிறப்பாக சமநிலைப்படுத்தினார்.  இலங்கை  ரஷ்ய முகாமிலும் இருக்கவில்லை.  ஆனால் ரஷ்யாவுக்கும் சிறிமா சென்று வந்தார்.  சீனா இந்தியா போன்ற நாடுகளுடனும் சிறந்த உறவைப் பேணினார்.

அமெரிக்காவுடன் கோபிக்கவும் இல்லை.  சிறிமாவின் சிறந்த நண்பனாக இந்தியா விளங்கியது.  ஆனால் அதேநேரம் அவர் பாகிஸ்தான் தலைவர்களுடனும் சிறந்த உறவைப் பேணினார்.  இந்தியாவின் காந்தி குடும்பம் பாகிஸ்தானின் பூட்டோ குடும்பத்துடன் அவர் சமநிலையான உறவைப் பேணினார்.

பாகிஸ்தான் இந்திய யுத்தத்தின் போது சிறிமா பண்டநாயக்க நடுநிலை வகித்தார்.  ஆனால் பாகிஸ்தானின் விமானங்கள் இலங்கையில் தரையிறங்க அனுமதி கொடுத்தார். அதற்காக இந்தியா கோபிக்கவில்லை. அதாவது  நீங்கள் கூறுகின்ற அழுத்தம் அப்போதும் இருந்தது.  ஆனால் எவ்வாறு அதனை முகாமைத்துவம் செய்கின்றோம் என்பதே முக்கியமாகும்.  எல்லாவற்றுக்கும் சரி என்று தலை ஆட்டுவது பொருத்தமாகாது.  முடியாவிடின் முடியாது என்று கூற வேண்டும்.

எமது சர்வதேச கடனில் சீன கடன்கள் 20 வீதம் காணப்படுகின்றன.  ஆனால் கடன் பெறும்போது அதனை  மீள் செலுத்த முடியுமா என்பது குறித்து நாம்தான் சிந்திக்க வேண்டும்.  அதிக வட்டியில் கடன் எடுத்தால் எம்மால் செலுத்த முடியுமா என்பது குறித்து நாம் சிந்திக்க வேண்டும்.  சீனாவின் கடன் பொறியில் நாம் சிக்கி இருப்பதாக கூறப்படுவதில் சீனாவை குற்றம் சொல்வதில் அர்த்தம் இல்லை. அது எமது நிர்வாக குறைபாடாகும்.

கேள்வி  சீனா கடன் மறுசீரமைப்பையும் விரும்பவில்லையே?

பதில் ஆனால் அவர்கள் சர்வதேச நாணயத்துடன் இணைந்து செயல்படுவதாக தற்போது அறிவித்திருக்கின்றனரே. ஆனால் அவ்வாறு செய்வதற்கு   அவர்களுடன் நல்ல உறவு இருக்கவேண்டும்.

கேள்வி தற்போது  சீனாவில் இருந்து வரவுள்ளதாக கூறப்படும் ஆய்வு கப்பல் பல சர்ச்சைகளை தோற்றுவித்திருக்கிறதே.  அந்த கப்பல் வருமா ? வந்தால் எவ்வாறான  தாக்கங்கள் ஏற்படும் ?

பதில் இது உண்மையில் ஒரு பிரச்சினையாகவே காணப்படுகிறது.   ஜனாதிபதி கடந்த வாரம் சீன தூதுவரை சந்தித்தபோது ஒரு சீனா என்ற கொள்கைக்கு இலங்கை முழு ஆதரவை வழங்குவதாக அறிவித்திருந்தார்.

கேள்வி ஒரு சீனா எனும் போது தாய்வானும்  உள்ளடங்க வேண்டுமா ?

பதில் தாய்வான் மற்றும் திபெத் இரண்டு நாடுகளும் அதில் உள்ளடங்குகின்றன.  அதன்படி ஜனாதிபதி சீன தூதுவரிடம் ஒரு சீன கொள்கைக்கு ஆதரவாக இருப்பதாக தெரிவிப்பதன் மூலம் தான் சீனாவின் பக்கம் இருப்பதாக அறிவித்திருக்கிறார்.  இந்த பிரச்சினைகளுக்கு  மத்தியிலேயே இந்த கப்பல் தற்போது வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய  ராஜபக்ஷவே  இந்த கப்பலுக்கான அனுமதியை வழங்கி இருக்கிறார்.  தற்போது கப்பல்   வந்து கொண்டிருக்கிறது.  11 ஆம் திகதி இந்த கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்தை வருவதற்கு  ஏற்பாடாகி இருக்கிறது.

ஆனால் தற்போது இந்தியா இந்த கப்பலை வரவிட வேண்டாம் என கோரிக்கை விடுக்கிறது. இந்தியா இது குறித்து கரிசனை கொண்டிருக்கிறது. அந்தக் கரிசனையையும் எம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.    ஆனால் இலங்கைக்கு ஒரு கப்பல் வருகின்றது என்றால் அதற்கு அனுமதி வழங்குவதா  இல்லையா என்பது தொடர்பாக இலங்கையே  தீர்மானிக்க வேண்டும்.  அதனை சுற்றியுள்ள வெளிநாடுகளிடம் கேட்க வேண்டிய அவசியமில்லை.  இந்தியா தமக்கு இது தொடர்பாக கூறவில்லை என்று கூறுகிறது.  ஆனால் அப்படி கூற வேண்டிய அவசியமும் இல்லை.

1965 ஆம் ஆண்டு அணிசேர மாநாடு நடைபெற்றது. அப்போது சீனாவை அந்த அமைப்புக்குள் உள்ளீர்க்க வேண்டும் என்று இந்தியா விரும்பியது. ஆனால் மேற்குலக நாடுகள் அதன் விரும்பவில்லை.  இந்த மாநாட்டுக்கு இந்தியாவின் சார்பில் ஜவஹர்லால் நேரு கலந்து கொண்டார்.  இலங்கை சார்பில் சேர் ஜோன் கொத்தலாவல பங்கேற்றார்.  மாநாட்டில்     உரையாற்றிய இந்திய பிரதமர் நேரு சீனாவை உள்ளீக்க வேண்டியது அவசியம் குறித்து பேசினார்.   அவ்வாறு  அவசியமில்லை என்ற வகையில் கொத்தலாவல மேற்குலகத்திற்கு சார்பாக உரையாற்றினார்.

பின்னர்  தேநீர் அருந்தும் வேளையில் இந்திய பிரதமர் ஜோன் கொத்தலாவலவிடம் ஏன் இவ்வாறு நீங்கள் கூறினீர்கள். ஏன் உரையாற்றுவதற்கு முன் எனக்கு அது தொடர்பாக நீங்கள் கூறவில்லை ? ஏன் உரையின்  பிரதியை எனக்கு காட்டவில்லை என்று கேட்டாராம்.  அதற்கு பதிலளித்த  கொத்தாலவல நான் ஏன் உங்களுக்கு எனது உரையை காட்ட வேண்டும். உங்கள் உரையை நீங்கள் எனக்கு காட்டினீர்களா என்று கேட்டாராம்.

தற்போது சீனா இந்த கப்பல் தொடர்பாக கரிசனை கொள்வதை எம்மால் புரிந்து கொள்ளமுடிகிறது. அதனால் தான் ஜனாதிபதி சீனாவிடம் இந்த கப்பல் வருகையை மீள் பரிசீலனை செய்யுமாறு கோரி இருக்கிறார்.  இது ஒரு தேவையற்ற பிரச்சனையாகவே இருக்கிறது. ரஷ்யாவின் விமானம் இலங்கைக்கு வந்தது போன்ற ஒரு சிக்கல் தான் இதுவாகும்.

கேள்வி அப்படியானால் கப்பலை வர வேண்டாம் என்று முதலிலேயே கூறி இருக்கலாமா?

பதில் இராஜதந்திர செயல்பாடுகளின் ஊடாக இதனை  தாமதப்படுத்தி இருக்கலாம்.  இந்தியா இந்தியா இது தொடர்பாக கவலை அடையும் என்பது எமக்கு தெரிந்த விடயம் அல்லவா? அதனை சமநிலைப்படுத்தி இருக்கலாம்.

கேள்வி கப்பல் வருமா? வராதா?

பதில் கப்பல் வருகை ஒத்திவைக்கப்படும் என்று நான் கருதுகிறேன்?

கேள்வி கப்பல் வராவிடின் சீனா இது தொடர்பான விடயங்களை எதிர்காலத்தில் பிரதிபலிக்குமா?

பதில் சீன கப்பலை வர இலங்கை அனுமதிக்காவிடின் நிச்சயமாக சீனா   பிரதிபலிப்புகளை  செய்யும். அதேநேரம் இந்தியாவின் கரிசனையையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும். கப்பல் வந்தாலும் பிரச்சினை. வராவிட்டாலும் பிரச்சினை.    நாம் இரண்டு பக்கம் சிக்கிய சென்விச் ஆகவே இருக்கின்றோம். இதனை  சமநிலைப்படுத்துவது ஜனாதிபதிக்கு இருக்கின்ற பெரிய போராட்டமாகும்.  இந்த சமநிலையை சரியாக செய்யாதன் காரணமாகவே கடந்த காலங்களில் தலைவர்களுக்கு வீடு செல்ல ஏற்பட்டது.  வெறுமனே மக்கள் போராட்டம் காரணமாக மட்டும் இந்த வெளியேற்றங்கள் இடம்பெற்றதாக நாம் கருத முடியாது.  அதிகாரம் மிக்க நாடு நீங்கள் போய்விடுங்கள் என்று கூறும் நிலைமை ஏற்பட்டிருக்கலாம்.  இவ்வாறான நெருக்கடிகளை சிறிமா பண்டார்நாயக்க ஜெயவர்தனை போன்றோர் சிறப்பாக கையாண்டனர்.  அவர்கள் சிறந்த தலைவர்கள்.  பிரேமதாசவுக்கு பின்னர் அவ்வாறான ஒரு வலுவான ஜனாதிபதியை நான் காணவில்லை.

கேள்வி தற்போது ரணில் விக்ரம்சிங்க நாட்டின் ஜனாதிபதியாக இருக்கின்றார்.  நீங்கள் அவருடன் பணியாற்றி இருக்கின்றீர்கள். தற்போது இந்த நெருக்கடியை மீட்டெடுப்பதற்கு அவர் பொருத்தமானவரா அவர் எவ்வாறான ஒரு தலைமைத்துவத்தை வெளிப்படுத்துவார் என்று கருதுகிறீர்கள்?

பதில் ரணில் விக்கிரமசிங்க 1977 ஆம் ஆண்டு ஜே .ஆர். ஜயவர்த்தனவின் அரசாங்கத்தில் பிரதி வெளிவிவகார  அமைச்சராக செயல்பட்டார்.  அப்படியானால் அவர் கடந்த 45 வருடங்களாக வெளிவிவகார அனுபவத்தை கொண்டிருக்கிறார்.  தெற்காசிய நாடுகளின் எந்த பாராளுமன்றத்திலும் இதுபோன்ற அனுபவத்துடன்  அவ்வாறு  ஒரு அரசியல்வாதி இருப்பாரா என்று எனக்கு தெரியவில்லை.  ஜே.ஆர். சந்திரிகா, டி.பி,விஜயதுங்க போன்ற தலைவர்கள் எவ்வாறு இந்த விடயங்களை கையாண்டனர் என்ற அனுபவம் ரணிலுக்கு இருக்கின்றது.  அனுபவத்தின் அடிப்படையில் இவரை முந்துவதற்கு யாரும் இல்லை. அதேபோன்று சிறந்ததொரு புத்திஜீவியாகவும் ரணில் காணப்படுகிறார். நாடு தற்போது இருக்கின்ற இந்த நெருக்கடியில் இருந்து மீட்டெடுப்பதற்கு ரணிலே பொருத்தமானவர்.  அதில் விவாதத்திற்கு இடமில்லை.  ஆனால் அவருக்கு அதை தனியாக செய்ய முடியாது. அவருக்கு ஒரு அணி இருக்க வேண்டும். இங்குதான் பிரச்சனை ஏற்படுகிறது. அந்த அணியை உருவாக்குவதில் அவருக்கு ஒரு பிரச்சனை இருப்பதாகவே நான் காண்கிறேன். அவர் தற்போது பொதுஜன பெரமுமனவின் ஆதரவுடன் இருக்கின்றார்.  எனவே அந்த கட்சிக்கு அவர் கடமைப்பட்டவராக இருக்கிறார். அப்படி இருக்கும்போது நான் கூறிய அந்த அணியை பெற்றுக் கொள்வது இவருக்கு நெருக்கடியாக இருக்கும்.  ஆனால்  அவர் தனது அணியை உருவாக்கும் போது நாட்டை பற்றியே சிந்திக்க வேண்டும்.

கேள்வி நல்லாட்சியில் நீங்கள்   அரசாங்க தகவல் திணைக்களத்தின்  பணிப்பாளராக இருந்தபோது ரணில் விக்ரம்சிங்க  பிரதமாக இருந்தார். நீங்கள் தகவல் அறியும் சட்டமூலத்தைகொண்டு வந்தீர்கள். அப்போது அவருடன் செயல்பட்ட அனுபவம் எவ்வாறு அமைந்தது?

பதில் எனக்கு ரணில் விக்கிரமசிங்கவுடன் மிக நெருங்கிய தொடர்பு இருக்கவில்லை. எனினும் பணி ரீதியாக ஒரு தொடர்பு காணப்பட்டது.  அவரது அறிவுக்கு நான் மதிப்பளிக்கிறேன். இரண்டு விடயங்களை செய்வதற்காக அவர் என்னை அரசாங்க தகவல் திணைகளத்துக்கு 2015 ஆம் ஆண்டு அழைத்தார்.  முதலாவது தகவல் அறியும் சட்டமூலத்தை கொண்டு வர  வேண்டும் என்பதாகும். அப்போது தகவல் அறியும் சட்டமூலம் உருவாக்கப்பட்டுதான் இருந்தது.  ஆனால் அதனை அமுல்படுத்தும் செயற்பாடு தொடர்பில் ஒரு பிரச்சினை காணப்பட்டது.  அதற்கு என்னுடைய பங்களிப்பு தேவைப்பட்டது. அடுத்ததாக சுயாதீன ஊடக ஆணைக்குழு ஒன்றை உருவாக்குமாறு எனக்கு ரணில் கூறினார்.  அந்த இரண்டு விடயங்களில் தகவல் அறியும் சட்டமூலத்தை நாங்கள் கொண்டுவந்து அதனை அமுல்படுத்தினோம்.  ஆனால் ஊடக ஆணைக்குழுவை என்னால் செய்ய முடியாமல்போனது.  அந்தவிடயத்தில் ரணிலிடம் எனக்கு ஒரு அழுத்தம் காணப்பட்டது. அதாவது இதனை விரைவாக செய்து செய்து முடிக்க வேண்டும் என்ற அழுத்தமாகும்.  ஆனால் ஊடக  ஆணைக்குழுவை  புதிதாக பல்வேறு கலந்துரையாடல்கள் ஆலோசனைகளுக்கு மத்தியில் கொண்டு வர வேண்டி இருந்தது.  அதனை உடனடியாக செய்ய முடியவில்லை.  இது போன்ற பிரபலம் இல்லாத சட்டமூலங்களை அரசாங்கத்தின் முதல் பாதியிலேயே செய்து முடிக்க வேண்டும் என்று ரணில் எனக்கு அடிக்கடி கூறியிருந்தார். ஆனால் அதனை கொண்டுவர முடியவில்லை. பின்னர்  நானும் அந்த பதவியில் இருந்து விலகி விட்டேன்.

நேர்கண்டவர் – ரொபட் அன்டனி