பாராளுமன்ற தெரிவுக்குழு 9ஆம் திகதி நியமிக்க நடவடிக்கை – செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க

138 0

பாராளுமன்ற கூட்டத்தொடர் முடிவுறுத்தப்பட்டதனால் செயலிழக்கப்பட்ட அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு(கோப்) மற்றும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழு(கோபா) உட்பட அனைத்து குழுக்களையும் நியமிக்கும் நடவடிக்கை இந்த வாரம் ஆரம்பிக்கப்படும்.  அதன் பிரகாரம் பாராளுமன்றத்தில் குழுக்களை நிறுவும் பிரதான குழுவான பாராளுமன்ற தெரிவுக்குழு  நாளைமறுதினம் 9ஆம் திகதி பாராளுமன்றம் கூடிய பின்னர் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.

அதேவேளை,பாராளுமன்ற குழுக்களுக்கு அந்ததந்த கட்சிகள் மூலம் முன்னிலைப்படுத்தப்படும் உறுப்பினர்கள் தொடர்பில் வேட்புமனு கோரப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்ற கூட்டத்தொடர் ஜனாதிபதியினால் முடிவுறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஒருசில குழுக்கள் தவிர்ந்த 50க்கும் மேற்பட்ட பாராளுமன்ற குழுக்கள் செயலிழக்கப்பட்டன.என்றாலும் பாராளுமன்ற உயர் பதவிகள் தொடர்பான குழு, துறைசார் மேற்பார்வைக் குழு மற்றும் பாராளுமன்ற விசேட குழு ஆகியவை தொடர்ந்து அவ்வாறே செயற்படும்.

அத்துடன் செயற்குழுக்கள் செயலிழந்தாலும் அவைகளினால் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மற்றும் வேறு நடவடிக்கைகளை அதில் இருந்து தொடர்ந்து முன்னெடுக்க முடியும் என்றே பாராளுமன்ற அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டி இருந்தார்.

அத்துடன் பாராளுமன்ற கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் கடந்த மாதம் 28ஆம் திகதி விசேட வர்த்தமானி மூலம் முடிவுறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.