700 ஏக்கர் இராணுவத்தின் ஆக்கிரமிப்பில்!

263 0

கடந்த கால யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்கள் இன்னமும் 30 தற்காலிக முகாம்களில் பல்வேறு இன்னல்களின் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். வலி.வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த இரண்டாயிரம் ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகிறது.

ஆனால், இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ள இரண்டாயிரம் ஏக்கர் நிலப்பகுதியில் 700 வரையான ஏக்கர் இன்னமும் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது.

குறிப்பாக வலி.வடக்கின் கரையோரம் முழுவதும் இன்னமும் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயுள்ளதாகத் தெரிய வருகிறது.

வலி. வடக்கின் காங்கேசன் துறை நடேஸ்வராக் கல்லூரியின் சுற்றாடல் விடுவிக்கப்பட்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரால்

அறிவிக்கப்பட்டிருந்த போதும் இன்னமும் அந்தச் சுற்றாடலை அண்டிய பகுதிகள் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது.

குறிப்பாக நடேஸ்வராக் கல்லூரியின் கிழக்குப் பக்கத்தில் இராணுவம் தங்களுக்கென வெதுப்பகம், சுத்தீகரிப்பு நிலையம் எனப் பலவற்றை அங்குள்ள வீடுகளில் அமைத்திருப்பதுடன், பொதுமக்களின் காணிகளைப் பலவந்தமாகப் பிடித்து வைத்திருக்கிறது.

பாதுகாப்புச் செயலாளர் குறித்த காணிகள் விடுவிக்கப்படும் என அண்மையில் கூறியிருந்தாலும் இன்னமும் இந்தப் பகுதிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை.

ஊறணி கரையோரப் பகுதிகள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் விடுவிக்கப்பட்டதாகக் கூறினாலும் பருத்தித் துறைக்கு வடக்காலுள்ள காங்கேசன்துறை நோக்கிய வீதியில் 100 மீற்றர் அகலத்திற்கு இரண்டு தடுப்பு வேலிகள் அமைத்துவிட்டுச் சில மீற்றர் அகலத்தில் நிலத்தை விடுவித்து விட்டு மீன்பிடித் தொழிலைச் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகத் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன.

ஊறணிப் பகுதியில் சுமார் 100 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஒரு தேவாலயம் அத்திவாரத்துடன் பெயர்க்கப்பட்டுள்ளது. அதன் ஒருபகுதி மாத்திரம் தான் விடுவிக்கப்பட்டுள்ளது.

அதனுடன் இணைந்திருந்த ஊறணிக் கனிஷ்ட வித்தியாலயத்தின் ஒரு பெரிய கட்டடம் முற்றுமுழுதாக அழிக்கப்பட்டுள்ளது. இன்னொரு கட்டடத்தில் பெண் இராணுவத்தினர் குடி கொண்டுள்ளனர்.

கடந்த இரு வாரத்திற்கு முன்னதாக வலி. வடக்கு மீள்குடியேற்றச் சங்கத்தினர் உள்ளிட்ட குழுவினர் யாழ்.மாவட்ட இராணுவத் தளபதியைச் சந்தித்த போது அந்தப் பாடசாலையையும் விடுவிப்பதாகக் கூறியிருந்த போதும் இன்னமும் குறித்த பாடசாலை விடுவிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்து இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையில் தமிழ்மக்கள் காணி விடுவிப்பு, காணாமற் போனோர் பிரச்சினை, அரசியற் கைதிகள் விடுதலை உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என நம்பியிருந்த போதும் இதுவரை குறித்த பிரச்சினைகளில் எவற்றுக்கும் முழுமையான தீர்வு காண முடியவில்லை.

இந்த நிலையில் வலி.வடக்கிலுள்ள தமிழ்மக்களின் பூர்வீகச் சொத்துக்களான பல நூற்றுக் கணக்கான ஏக்கர் நிலங்கள் இன்னமும் விடுவிக்கப்படாமல் இராணுவக் கட்டுப்பாட்டிலேயுள்ளமை துரதிஷ்ட வசமானது.

குறிக்கப்பட்ட சில பகுதிகளை மாத்திரம் விடுவித்து விட்டு தமிழ்மக்களையும், சர்வதேசத்தையும் ஏமாற்றும் தற்போதைய அரசின் கபட நாடகம் எனவே எண்ணத் தோன்றுகிறது.

அதுமாத்திரமன்றி யாழ்.குடாநாட்டில் முப்படையினர்களுக்கும் மேலும் 1500 ஏக்கர் காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி வலி.வடக்கில் எஞ்சியுள்ள பகுதி நிலங்கள் விடுவிக்கப்படுமா என்ற சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.