தமிழக அரசியல் நெருக்கடிக்கு தீர்வுகாணும் வரை கவர்னர் சென்னையில் இருக்க வேண்டும் என்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பிணைக் கைதிகளாக இருக்கும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களால் சுதந்திரமாக முடிவு எடுக்க முடியாது என்றும், தமிழக அரசியல் நெருக்கடிக்கு தீர்வுகாணும் வரை கவர்னர் சென்னையில் இருக்க வேண்டும் என்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க. அரசு பதவி விலகிவிட்ட நிலையில் புதிய அரசு இன்னும் பதவியேற்கவில்லை. பன்னீர்செல்வம் தலைமையிலான அணியும், சசிகலா தலைமையிலான அணியும் தங்களுக்குத் தான் பெரும்பான்மை இருப்பதாக கூறி வரும் நிலையில் 120-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் சசிகலா அணியினரால் கடத்திச் செல்லப்பட்டு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விடுதிகளிலும், புதுச்சேரியிலும் கட்டாய சிறை வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றன.
சட்டப்பேரவையில் சசிகலா பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை இவர்கள் பிணைக் கைதிகளாகவே வைத்திருக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. இது ஜனநாயகத்திற்கும், அரசியலமைப்புச் சட்டத்திற்கும் எதிரான செயல் ஆகும்.
தமிழகத்தின் முதல்-அமைச்சர் பதவியில் இருப்பவருக்கே கடுமையான அழுத்தம் தரப்பட்டு, பதவி விலகல் கடிதம் பெறப்பட்டதுடன், புதிய முதல்-அமைச்சராக சசிகலாவை முன்மொழிய வைப்பது சாத்தியமாகியுள்ள நிலையில், சாதாரண சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அழுத்தம் கொடுத்து அவர்களின் ஆதரவை பெற்றிருப்பதாக கணக்கு காட்டுவது கடினமான ஒன்றல்ல.
அதிலும் குறிப்பாக அனைத்து உறுப்பினர்களும் பிணைக் கைதிகள் போல சிறைவைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களால் சுதந்திரமாக முடிவெடுக்க முடியாது. எனவே கடத்தி சிறைவைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரையும் உடனடியாக மீட்க கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்பின் அனைத்து உறுப்பினர்களையும் கவர்னர் தனித்தனியே அழைத்துப் பேசி விருப்பத்தை அறியவேண்டும். இந்த நடைமுறைகள் அனைத்தும் நிறைவு பெற்ற பிறகே தமிழகத்தில் ஆட்சி அமைக்க யாரை அழைப்பது என்பது குறித்து தமிழக கவர்னர் முடிவெடுக்க வேண்டும்.
இவையெல்லாம் ஒருபுறமிருக்க, தமிழகத்தில் மிகவும் குழப்பமான அரசியல் சூழலும், குதிரை பேரமும் நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்திற்கென நிரந்தர கவர்னர் நியமிக்கப்படாதது கண்டிக்கத்தக்கது. இந்தியாவின் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமான தமிழகத்தில் கவர்னர், முதல்-அமைச்சர் ஆகிய அரசியல் சட்ட பதவிகள் அனைத்தும் காலியாக இருப்பது சரியல்ல. தமிழகத்தில் இப்போதுள்ள சூழலை சமாளிக்க கவர்னர் தமிழகத்தில் இருந்திருக்க வேண்டும். ஆனால் அவரோ 2 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறார். இது தமிழக அரசியல் சூழலை மேலும் மோசமாக்கிவிடும்.
எனவே, தமிழக அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணப்படும் வரை கவர்னர் சென்னையில் முகாமிட வேண்டும். வெகு விரைவில் தமிழகத்திற்கு நிரந்தர கவர்னர் நியமிக்கப்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.