வரலாற்று சிறப்புமிக்க உலகத்தமிழர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று நடைபெறுகிறது.
மதுரை மாவட்டத்தில் கடந்த 5-ந்தேதி அவனியாபுரத்திலும், 8-ந்தேதி தொட்டப்பநாயக்கனூரிலும், 9-ந்தேதி (நேற்று) பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் களைகட்டின.
இதன் தொடர்ச்சியாக, வரலாற்று சிறப்புமிக்க உலகத்தமிழர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.
ஜல்லிக்கட்டு குறித்து விழாக்குழு தலைவர் சுந்தர்ராஜன் கூறியதாவது;-
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு தமிழகம் முழுவதும் இருந்து காளைகள் வரத்தொடங்கி விட்டன. மாடுபிடிவீரர்களும் வந்து குவிகிறார்கள். 1000 ஜல்லிக்கட்டு காளைகளை அவற்றின் உரிமையாளர்கள் பதிவு செய்துள்ளனர். 1,500 மாடுபிடிவீரர்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சிறந்த காளைக்கும், மாடுகளை பிடிக்கும் இளம் காளையர்களுக்கும் சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள பலவிதமான பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளன. உடனுக்குடன் அந்த பரிசுப்பொருட்கள் வழங்கப்படும். மாடுபிடி வீரர்களுக்கு நன்கொடையாளர்கள் மூலம் தங்கக்காசுகள், ஒரு கார், 5 புல்லட் மோட்டார் சைக்கிள்கள், 2 மோட்டார் சைக்கிள்கள், ஒரு மொபட், சைக்கிள்கள், 2 பசுமாடுகள், 500 செல்போன்கள், பீரோ, கட்டில்கள், மின்விசிறி போன்ற பரிசுகள் வழங்க தயாராக உள்ளன. 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.