செல்போன் டவரில் ஏறி சமூக ஆர்வலர் போராட்டம்

314 0

திருவண்ணாமலை அருகே செல்போன் டவரில் ஏறி சமூக ஆர்வலர் போராட்டம் செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.திருவண்ணாமலை அடுத்த பவித்ரம் கிராமத்தை சேர்ந்தவர் வைத்தியலிங்கம் (வயது 38). சமூக ஆர்வலர். இவர், தனது கிராமத்தை பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுத்தம் செய்ய வேண்டும். ஏரி உள்பட அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.

அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 9-ந் தேதி முதல் கலெக்டர் அலுவலகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு அளித்து வந்ததாக கூறப்படுகிறது.

சமூக ஆர்வலரின் மனு தொடர்பாக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சமூக ஆர்வலர் வைத்தியலிங்கம், பவித்ரம் கிராமத்தில் சுமார் 145 அடி உயரமுள்ள செல்போன் டவர் உச்சிக்கு இன்று காலை ஏறினார்.

செல்போன் டவரில் நின்றுக் கொண்டு வைத்தியலிங்கம் போராட்டத்தில் ஈடுபட்டார். முன்னதாகவே அவர், சிறிய மைக் ஸ்பீக்கரை தயாராக எடுத்துச் சென்று உள்ளார். மைக் மூலமாக, தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

பொதுமக்கள், வெறையூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ பகுதிக்கு விரைந்து வந்தனர். போலீசாரும் மைக் ஸ்பீக்கர் மூலம் சமூக ஆர்வலரிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர்.

எனது கோரிக்கைகளை முழுமையாக ஏற்று நிறை வேற்றும் வரை செல்போன் டவரில் இருந்து இறங்க மாட்டேன். போராட்டத்தை கைவிட மாட்டேன் என சமூக ஆர்வலர் எச்சரித்தார்.

இதையடுத்து, ஜே.சி.பி. எந்திரம் வரவழைக்கப்பட்டு அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுடன் சேர்ந்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர். ஆனாலும், சமூக ஆர்வலர் டவரில் இருந்து கீழே இறங்கவில்லை.

மாவட்ட கலெக்டர் சம்பவ பகுதிக்கு வர வேண்டும். அப்போது தான், செல்போன் டவரில் இருந்து கீழே இறங்குவேன் என மிரட்டல் விடுத்து சமூக ஆர்வலர் வைத்தியலிங்கம் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டு சமூக ஆர்வலரை மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டது. டவர் மீது ஏறிய தீயணைப்பு துறை வீரர்களிடம் ‘‘என்னை மீட்க முயன்று மேலே ஏறினால், டவர் உச்சியில் இருந்து கீழே குதித்து விடுவேன்’’ எனக் கூறினார்.

இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் டவரில் இருந்து கீழே இறங்கி விட்டனர். மீட்கும் முயற்சி கைவிடப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.