பாகிஸ்தானில் இருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் ஒன்று, பாதுகாப்பு அச்சம் காரணமாக போர் விமானங்களின் பாதுகாப்புடன் ஸ்டான்ஸ்டட் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
பாகிஸ்தானில் இருந்து கடந்த இரு தினங்களுக்கு முன் லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்திற்கு பயணிகள் விமானம் புறப்பட்டது. இந்த விமானம் எஸ்செக்ஸ் வான்பகுதியில் பறந்தபோது விமானத்திற்குள் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் விமானி, விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். உள்ளே என்ன நடக்கிறது என்பது தெரியாததால், தீவிரவாதியால் அந்த விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டது. எனவே, அதிரடிப்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக லிங்கான்ஷைரில் உள்ள அதிரடிப்படையின் போர் விமானங்கள், பாகிஸ்தான் பயணிகள் விமானத்தை இடைமறித்து தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தன. பின்னர் ஸ்டான்ஸ்டட் விமான நிலையம் நோக்கி விரட்டிச் சென்றன.
ஸ்டான்ஸ்டட் விமான நிலையத்தில் விமானம் பத்திரமாக தரையிறங்கியதும், உரிய பாதுகாப்பு நடைமுறைகளுக்குப் பிறகு, பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த விமானத்தில் பயணித்த பயணிகளிடையே ஏற்பட்ட பிரச்சினைதான், இதற்கு காரணம் என தெரியவந்தது. அதன்பிறகே அதிகாரிகள் நிம்மதி அடைந்தனர்.
விமான கடத்தல் மற்றும் மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் காலங்களில், விமானங்களை ஸ்டான்ஸ்டட் விமான நிலையத்தில் தரையிறக்குவது வழக்கம்.