கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் நாடாளுமன்றில் உரையாற்றும் போது கிழக்கு மாகாண சபை மற்றும் வடமாகாண சபை பற்றி வாக்குவாதம் இடம்பெற்றது.
இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் உரையாற்றுகையில், கிழக்கு மாகாணசபையில் இருக்கும் குறைகளைப்பற்றி கூறிக்கொண்டிருந்தார்.
இதன்போது மறு பக்கத்திலிருந்த சில உறுப்பினர்கள் இவருடைய பேச்சுக்கு எதிர்பேச்சு பேசியதுடன் வடமாகாணம், கிழக்கு மாகாணம் பற்றிய ஒப்பீட்டு கதைகள் எழுந்தன.
இதற்கு ஞா.ஸ்ரீநேசன் பதிலளித்துக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில், கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே சில கூற்றுக்களை முன்வைத்தார்.
“நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களே, தற்போது மாகாண சபை அதிகாரம் உங்களுக்கு இருக்கின்றது. நீங்கள் மாகாண சபையை பிரதிநிதித்துவப்படுத்துகின்றீர்கள். வடக்கு உங்களிடம் தான் இருக்கின்றது. வடமாகாண சபையின் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இருக்கின்றார், அவரிடம் அதிகாரங்கள் உள்ளது தானே” என தெரிவித்தார்.
இதன்போது குறுக்கிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், “நான் வடக்கை பற்றி பேசவில்லை. நான் கிழக்கை பற்றி பேசுகின்றேன். நான் கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர். இது தெரியாமல் நாடாளுமன்ற உறுப்பினர் உரையாற்றுகின்றார்” என பதிலளித்துவிட்டு தமது உரையை தொடர்ந்தார்.
இதன்போது நாடாளுமன்றில் சிரிப்பு சத்தங்கள் எழுந்ததுடன், சில வாக்குவாதங்களும் எழுந்தமை குறிப்பிடத்தக்கது.