மலையக தோட்டப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள முதலாவது கிராமத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
நுவரெலியா மாவட்டத்தில் அக்கரபத்தனை ஊட்டுவில் தோட்டத்தில் 150 தனித்தனி வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.
அவற்றில் முதற்கட்டமாக 71 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு அதனை இன்று ஜனாதிபதி திறந்து வைத்து பயனாளிகளிடம் கையளித்தார்.
மலையக புதிய கிராம உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தின் எண்ணக்கருவிற்கு அமைய, லயன் வீடுகளுக்கு மாற்றாக இந்த புதிய பெருந்தோட்ட கிராமம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தனி வீடுகள் 7 பேர்ச்சஸ் காணியில் 550 சதுர அடியில் இரண்டு அறைகள், சமையலறை, வரவேற்பறையுடன் அமைக்கப்பட்டுள்ளன.
அத்துடன் வீட்டிற்கான மின்னிணைப்பு மற்றும் குடிநீர் வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளனவீட்டு உரிமையாளர்கள் அனைவருக்கும் பசுமை பூமி திட்டத்தின் கீழ் காணி உறுதிப் பத்திரம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதன்போது காணி உறுதி பத்திரம் வழங்குவதன் ஞாபகார்த்தமாக முத்திரை வெளியிடும் நிகழ்வும் இடம்பெற்றதுடன் பயனாளிகளுக்கு மரக்கன்று மற்றும் வீட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.