ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது உச்சகட்ட தாக்குதல்

409 0

201607151113532053_Kerry-meets-with-Putin-about-cooperating-against-Islamic_SECVPFசிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் தலைமையிலான அரசை பதவியில் இருந்து இறக்கும் நோக்கத்தில் அவரது அதிருப்தியாளர்கள் தொடங்கிய போராட்டம், உள்நாட்டுப் போராக உருவெடுத்தது. கடந்த நான்காண்டுகளாக நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரில் இதுவரை சுமார் 12 ஆயிரம் குழந்தைகள் உள்பட இரண்டரை லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பலியாகியுள்ளனர்.சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் புரட்சிப்படையினர் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி அங்குள்ள மக்களை கொடுமைப்படுத்திவரும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக விமானப்படை மூலம் தாக்குதல் நடத்த கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ம் தேதி ரஷியா முடிவு செய்தது.

அதிபரின் படைகளுக்கு ஆதரவாக ரஷியாவில் இருந்து போர்க்கப்பல்களில் ஏராளமான ஆயுதங்களும், ரஷ்ய ராணுவ வீரர்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தீவிரவாதத்தை ஒழிக்கும் நோக்கத்தில்தான் சிரியா அரசுக்கு ரஷியா ஆயுதங்களை அளித்து, ஆதரித்து வருவதாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கூறியிருந்தார்.

சொந்தநாட்டு மக்களை மிககொடூரமாக நடத்திய அதிபர் ஆசாத்தின் அணுகுமுறைதான், சிரியாவில் உள்நாட்டுப் போரையும், ஐ.எஸ். தீவிரவாதிகள் என்ற இயக்கத்தையும் உருவாக்கி விட்டது என அமெரிக்கா குற்றம்சாட்டிவரும் நிலையில் புதின் இவ்வாறு பேட்டியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, சிரியாவில் அதிபரின் படைகளுக்கு ஆதரவாகவும், ஐ.எஸ். தீவிரவாதிகளின் முகாம்களை அழிக்கும் நோக்கத்திலும் கடந்த மூன்று மாதங்களாக பல்வேறு பகுதிகளின்மீது ரஷிய விமானப்படைகள் குண்டுமழை பொழிந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், சிரியாவில் ஆதிக்கம் செலுத்திவரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது ரஷியாவுடன் அமெரிக்காவும் இணைந்து தாக்குதல் நடத்துவது தொடர்பாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் ஆலோசனை நடத்துவதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஜான் கெர்ரி நேற்று மாலை மாஸ்கோ நகருக்கு விரைந்தார்.

ரஷிய அதிபரின் கிரெம்ளின் மாளிகையில் சுமார் 3 மணிநேரம் விளாடிமிர் புதினும், ஜான் கெர்ரியும் இதுதொடர்பாக முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர்.

சிரியாவில் ஐ.எஸ். மற்றும் அல்கொய்தா தீவிரவாதிகளை ஒழித்து, அங்கு நிரந்தரமாக அமைதியை நிலைநாட்டும் வகையில் அமெரிக்காவும், ரஷியாவும் அங்கு தனித்தனியாக தலைமை செயலகங்களை நிறுவவும், உளவு தகவல்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதன் வாயிலாக தீவிரவாதிகள் மீதான உச்சகட்ட தாக்குதலை திட்டமிட்டு செயல்படுத்துவதில் இருநாடுகளும் ஒருமித்த கருத்துடன் இணைந்திருப்பது என்றும் இந்த ஆலோசனை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.