கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் பிரையண்ட் பூங்கா, ரோஜா தோட்டம், மோயர் பாய்ண்ட், குணாகுகை, தூண்பாறை, பைன் மரக்காடுகள், கோக்கர்ஸ் வாக், படகு குழாம், குறிஞ்சி ஆண்டவர் கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களை கண்டு ரசித்து செல்கின்றனர்.
பெரும்பாலான சுற்றுலா தலங்கள் வனத்துறை கட்டுப்பாட்டில் இருப்பதால் அதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் பில்லர் ராக் எனப்படும் தூண்பாறைக்கு செல்லும் வழியில் வனத்துறை சார்பில் பிரம்மாண்டமான சுவர் கட்டப்பட்டு வந்தது.
இதனால் பூங்காவுக்கு வெளியில் இருந்தபடி தூண்பாறைகளை கண்டு ரசிக்க முடியாத நிலை ஏற்பட்டது. எதற்காக இந்த சுவர் கட்டப்படுகிறது என்ற கேள்வி சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களிடம் எழுந்தது.
இந்நிலையில் இந்த சுவற்றில் விலங்குகளை தத்துரூபமாக ஓவியமாக வரைந்து செல்பி பாயிண்ட் அமைக்கப்பட்டுள்ளது. 3 டி பரிமானத்தில் வனப்பகுதியில் யானைகள் கூட்டமாக வருவதை போன்று இந்த செல்பி பாயிண்ட் அமைக்கப்பட்டுள்ளது.
வன விலங்குகளை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வுடன் கொடைக்கானல் லோகோவும் சுவரில் இடம்பெற உள்ளது. இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து வன அலுவலர் திலிப் கூறுகையில், தூண்பாறையை மறைக்க வேண்டும் என்பதற்காக சுவர் கட்டப்பட வில்லை. செல்பி பாயிண்ட்டுக்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கொடைக்கானலில் ஒரு செல்பி பாயிண்ட் இருந்தாலும் இது சுற்றுலா பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்களை வெகுவாக கவரும் என்றார்.