ஜனாதிபதி தலைமையிலாள சர்வகட்சி அரசாங்கம் அமைத்தால் அதன் பொருளதாரா கொள்கையின் அடிப்படையிலேயே அதில் இணைவதா இல்லையா என தீர்மானிப்போம். மக்கள் பலத்துடன் ரணில் விக்ரமசிங்கை அந்த பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டிலே நாங்கள் இருக்கின்றோம் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
சோசலிச மக்கள் முன்னணி நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
புதிய லிபரல்வாதத்துக்கு எதிராக புதிய சோசலிச பொருளாதார கொள்கையை கொண்டுவரவே கோத்தாபய ராஜபக்ஷ்வை நாங்கள் ஜனாதிபதி பதவிக்கு கொண்டுவந்தோம். ஆனால் 20ஆவது திருத்தம் மூலம், அமெரிக்க பிரஜையான பசில் ராஜபக்ஷ்வை பாராளுமன்றத்துக்குகொண்டுவந்து, நிதி அமைச்சு வழங்கப்பட்டது,
இதன் மூலம் எமது சோலசலி பொருளாதார கொள்கையை முன்னெடுப்பது சாத்தியமில்லை என எமக்கு தோன்றியது. லிபரல்வாத கொள்கையின் பிரகாரம் தீர்மானங்களை மேற்கொள்ள பசில் ராஜபக்ஷ் முன்வைத்த பிரேரணைகளை நாங்கள் அமைச்சரவையில் தொடர்ந்து நிராகரித்து வந்தோம்.
பின்னர் அமைச்சரவையில் இருந்து பசில் ராஜபக்ஷ்வை நீக்குவதற்கு 10கட்சிகள் இணைந்த கூட்டணி நடவடிக்கை எடுத்தபோதும் மார்ச் 2 ஆம் திகதி பசில் ராஜபக்ஷ் எங்களை அமைச்சரவையில் இருந்து வெளியில் போட நடவடிக்கை எடுத்தார். என்றாலும் நாங்கள் மக்கள் மத்தியில் மேற்கொண்ட பிரசாரத்தின் பயனாகவும் மக்களுக்கு ஏற்பட்ட பொருளாதார கஷ்டம் காரணமாகவும் மக்கள் போராட்டம் தலைதூக்கியது. இதன் காரணமாக பசில் ராஜபக்ஷ் பதவி விலகினார். அதனைத்தொடர்ந்து பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷ் பதவி விலகினார்.
அத்துடன் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண கோத்தாபய ராஜபக்ஷ்வுடன் நாங்கள் ஏற்படுத்திக்கொண்ட சர்வகட்சி அரசாங்கம் என்ற எமது உடன்படிக்கையை மீறி அவர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமாக நியமித்தார். என்றாலும் போராட்டக்கார்கள் ஜனாதிபதி, பிரதமர் இரண்டு பேரும் பதவி விலகவேண்டும் என தொடர்ந்து போராட்டம் செய்த காரணமாக ஜனாதிபதி பதவி விலகினார்.
ஆனால் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க மக்கள் ஆணைக்கு மாறாக ஜனாதிபதியாக பதவி வகிக்கின்றார். அதனால் ரணில் விக்ரமசிங்கவை மக்கள் பலத்துடன் நீக்கவேண்டும் அந்த நிலைப்பாட்டிலேயே நாங்கள் இருக்கின்றோம்.
மேலும் நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு சர்வகட்சி அரசாங்கம் அமைத்து, அதற்கு எவ்வாறு தீர்வுகாண்பது தொடர்பில் தேசிய சபை அமைக்கவேண்டும் என்றே நாங்கள் ஆரம்பத்தில் இருந்து தெரிவித்து வருகின்றோம்.
தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. யார் தலைமையில் சர்வகட்சி அரசாங்கம் அமைத்தாலும் அந்த அரசாங்கத்தின் பொருளாதார கொள்கை புதிய லிபரல்வாத கொள்கையாக இருந்தால் அந்த அரசாங்கத்தில் நாங்கள் இணைந்துகொள்ளப்போவதில்லை. அதனால் சோசலிச பொருளாதார கொள்கைக்கே நாங்கள் ஆதரவளிப்போம்.
அத்துடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது நாட்டை கட்டியெழுப்புவதை விட ஐக்கிய தேசிய கட்சியை பலப்படுத்தவே செயற்பட்டு வருகின்றார். அதற்காக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை தனது பக்கம் இழுக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்தே எம்.பிக்களை எடுத்துக்கொள்ள முயற்சிக்கின்றார்.ஏற்கனவே 2 பேர் அவருடன் இணைந்துகொண்டுள்ளனர் என்றார்.