சபை முதல்வராக சுசில் : ஆளும் கட்சியின் பிரதம கொறடாவாக பிரசன்ன ரணதுங்க

192 0

சபை முதல்வராக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் ஆளும் கட்சியின் பிரதம கொறடாவாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன் பின்னர் முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று இடம்பெறவுள்ளது.

முன்னதாக சபை முதல்வராக செயற்பட்ட அமைச்சர் தினேஸ் குணவர்தன பிரதமராக பதவியேற்றுள்ளார். இதனால் ஏற்பட்ட சபை முதல்வர் பதவி வெற்றிடத்திற்காக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த நியமிக்கப்பட்டுள்ளார்.

பாராளுமன்றம் இன்று புதன்கிழமை காலை 10.00 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடுகின்றது. இதன்போது ஆரம்ப நிகழ்வாக வஜிர அபேவர்த்தனவின் சத்தியப்பிரமாணம் இடம்பெறும்.

பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைக்கப்பெற்ற ஒரே ஒரு தேசியப்பட்டியல் ஆசனத்தில் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்துக்கு சென்ற நிலையில் தற்போது அவர் ஜனாதிபதி பதவிக்கு தெரிவுசெய்யப்பட்டதால், குறித்த ஆசனம் வெற்றிடமாகி இருந்தது.

இதனால் பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினால் இதுதொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டிருந்து.

அதன் பிரகாரம் தேர்தல் ஆணைக்குழு ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளருக்கு அனுப்பி இருந்த கடிதத்தின் பிரகாரம், ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு மற்றும் முகாமைத்துவ சபையின் பூரண அனுமதியுடன் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தனவின் பெயரை கட்சியின் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தேர்தல் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பித்திருந்தார்.

அதனடிப்படையில் பாராளுமன்றத்தில் வெற்றிடமாகி இருந்த ஆசனத்துக்கு ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்பினராக வஜிர அபேவர்த்தனவின் பெயரை தேர்தல் ஆணைக்குழு கடந்த வாரம் வர்த்தமானி மூலம் அறிவிப்பு செய்திருந்தது.

அதனடிப்படையில் இன்று பாராளுமன்றம் கூடும்போது வஜிர அபேவர்த்தன பாராளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்வார்.

இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது, பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், பதில் ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால நிலை தொடர்பில் பிற்பகல் 4.30 வரை விவாதிக்கப்பட்டவுள்ளது.

கடந்த 17 ஆம் திகதி, 2288/30 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம், ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக செயற்பட்ட காலத்தில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது.

சட்ட விதிகளுக்கு அமைய, 14 நாட்களுக்குள் பாராளுமன்றத்தின் அனுமதி பெறப்படாவிட்டால், அவசரகால நிலைமைப் பிரகடனம் இரத்தாகிவிடும்.

மக்களின் பாதுகாப்பு, நாட்டின் அமைதியைப் பாதுகாத்தல், பொதுமக்கள் வாழ்வுக்கு அத்தியாவசியமான வழங்கல்கள் மற்றும் சேவைகள் என்பவற்றைப் பேணுவதற்கு, பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின்கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய இந்தப் பிரகடனம் செய்யப்பட்டது.