ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன சபாநாயகர் முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.
ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன் பின்னர் முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று இடம்பெறுகின்றது.
பாராளுமன்றம் இன்று புதன்கிழமை காலை 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது. இதன்போது ஆரம்ப நிகழ்வாக வஜிர அபேவர்த்தனவின் சத்தியப்பிரமாணம் இடம்பெற்றது.
பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைக்கப்பெற்ற ஒரே ஒரு தேசியப்பட்டியல் ஆசனத்தில் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்துக்கு சென்ற நிலையில் தற்போது அவர் ஜனாதிபதி பதவிக்கு தெரிவுசெய்யப்பட்டதால், குறித்த ஆசனம் வெற்றிடமாகி இருந்தது.
இதனால் பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினால் இதுதொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டிருந்து.
அதன் பிரகாரம் தேர்தல் ஆணைக்குழு ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளருக்கு அனுப்பி இருந்த கடிதத்தின் பிரகாரம், ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு மற்றும் முகாமைத்துவ சபையின் பூரண அனுமதியுடன் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தனவின் பெயரை கட்சியின் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தேர்தல் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பித்திருந்தார் .
அதனடிப்படையில் பாராளுமன்றத்தில் வெற்றிடமாகி இருந்த ஆசனத்துக்கு ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்பினராக வஜிர அபேவர்த்தனவின் பெயரை தேர்தல் ஆணைக்குழு கடந்த வாரம் வர்த்தமானி மூலம் அறிவிப்பு செய்திருந்தது.
அதனடிப்படையில் இன்று பாராளுமன்றம் கூடியபோது வஜிர அபேவர்த்தன ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.