ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இருவார காலத்திற்குள் சர்வக்கட்சி அரசாங்கம் ஸ்தாபிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், இதுவரை பிரதான அரசியல் கட்சிகளிடம் எவ்வித பேச்சவார்த்தைகளும் முன்னெடுக்கப்படவில்லை என கட்சிகள் குறிப்பிடுகின்றன.
பிரதான அரசியல் கட்சிகள் சர்வக்கட்சி அரசாங்கத்தில் இணைய நிபந்தனையின் அடிப்படையில் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில் கட்சிகளின் உறுப்பினர்கள் எவ்வழியிலாவது அரசாங்கத்தில் ஒன்றிணைந்து அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்வார்கள் என மக்கள் விடுதலை முன்னணி தவிர ஏனைய அரசியல் கட்சிகளின் முக்கிய தரப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி
சர்வக்கட்சி அரசாங்கம் தொடர்பில் கட்சி மட்டத்தில் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படுகிறது. முன்வைக்கப்படும் யோசனைகளுக்கமைய சர்வக்கட்சி அரசாங்கத்தின் கட்டமைப்பு காணப்பட்டால் ஆதரவு வழங்க தயார். 06 மாத காலத்திற்கு பின்னர் தேர்தலுக்கு நிச்சயம் செல்ல வேண்டும் என்பது எமது பிரதான யோசனையாக அமையும் என ஐக்கிய மக்க்ள சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன
சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றினைத்து சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்க முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம். சர்வக்கட்சி அரசாங்கத்தில் அரசியல் கட்சிகள் ஒன்றிணையாவிடின் பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கமே ஸ்தாபிக்கப்படும்.
பொருளாதார,சமூக மற்றும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் என்பதற்காக கட்சி என்ற ரீதியில் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியுள்ளோம்.பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டதன் பின்னர் தேர்தலுக்கு செல்ல வேண்டும் என்பதே எமது பிரதான கோரிக்கையாக உள்ளது என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணி
பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளை ஒன்றினைத்து ஸ்தாபிக்கப்படும் சர்வக்கட்சி அரசாங்கத்தின் பதவி காலம் 06 மாத காலத்தி;ற்கு வரையறுக்கப்பட்டதாக காணப்பட வேண்டும். அரசாங்கத்தின் பதவி காலம் தொடர்பிலும், பதவி காலத்திற்குள் முன்னெடுக்கப்படும் செயற்பதிட்டம் தொடர்பிலும் அரசாங்கம் தெளிவாக குறிப்பிட வேண்டும்.
06 மாத காலத்திற்கு பின்னர் அரசாங்கம் தேர்தலுக்கு செல்லும் என ஒருபோதும் நம்பிக்கை கொள்ள முடியாது. பாராளுமன்றின் பதவிகாலம் நிறைவடைவதற்கு முன்னர் பொதுத்தேர்தலுக்கு செல்ல வேண்டுமாயின் பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டும். தற்போதைய நிலையில் நாட்டு மக்களின் எதிர்பார்ப்பிற்கு முக்கியத்துவமளித்து பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் பாராளுமன்றத்தை கலைக்க ஒத்துழைப்பு வழங்கபோவதில்லை. இடைப்பட்ட காலத்தில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் பலருக்கு ஓய்வூதியம் இரத்தாகும் என பலர் தற்போதே யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் பாராளுமன்றத்தை கலைக்கமாட்டார் அதற்கு பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களும் இடமளிக்கமாட்டர்கள். மக்களின் கோரிக்கைக்கமைய ஜனாதிபதி செயற்பட போவதில்லை ஏனெனில் அவர் மக்கள் பிரதிநிதியல்ல,பொதுஜன பெரமுனவின் பிரதிநிதி என மக்கள் விடுதலை முன்னண்pயின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி
சர்வக்கட்சி என்பதொன்று ஸ்தாபிக்கப்படுமாயின் அமைச்சுக்களின் எண்ணிக்கை 15 ஆக வரையறுக்கபட வேண்டும். அரசியல்வாதிகளை திருப்திப்படுத்தும் வகையில் இராஜாங்க அமைச்சு,பிரதி அமைச்சு ஆகியவற்றை வழங்குவதை தற்காலிகமாக தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
நிதி நெருக்கடி தீவிரமடைந்து நாட்டு மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்க்கொண்டுள்ள நிலையில் அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுக்களை 70 வரை நீடிப்பது வீண் செலவாக அமைவதுடன்,அரசியல் கட்டமைப்பு மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்பை மேலும் தீவிரப்படுத்தும்.
சுர்வக்கட சர்வக்கட்சி அரசாங்கம் தொடர்பில் அரசாங்கம் இதுவரை பேச்சுவார்த்தையை முன்னெடுக்கவில்லை. பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தால்,அமைச்சரவையின் எண்ணிக்கை 15ஆக வரையறுக்கப்படல் வேண்டும்.
பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சுக்கள் அவசியமற்றது அத்துடன் வெகுவிரைவில் தேர்தலுக்கு செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்துவோம் என சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் ரோஹன லக்ஷ்மன் பியதாஷ தெரிவித்தார்.
பொதுத்தேர்தல் ஊடாக மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஒருவர் அரசியல் டீல் ஊடாக நாட்டின் முதல் குடிமகனாக பதவி வகிப்பது முற்றிலும் மக்களாணைக்கு விரோதமானது ஆகவே வெகுவிரைவில் தேர்தலுக்கு செல்ல வேண்டும் எனவும் தெரிவித்தார்.
சுயாதீன தரப்பினர்
அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்வதற்காக சர்வக்கட்சி அரசாங்கத்தில் இணைந்துக்கொள்ள வேண்டிய தேவையில்லை. சர்வக்கட்சி அரசாங்கத்தின் கட்டமைப்பு,பதவி காலம் தொடர்பில் இதுவரை அரசாங்கம் எவ்வித பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுக்கவில்லை. நாட்டு மக்கள் தேர்தலை கோரி நிற்கின்ற நிலையில் அரசியல்வாதிகளை திருப்திப்படுத்தும் வகையில் சர்வக்கட்சி அரசாங்கம் என்ற பெயரில் அமைச்சு பதவிகளை வழங்குவது முற்றிலும் தவறானது.
தேர்தல் ஒன்று இடம்பெறும் வரை இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டாலும் அது ஆறு மாதம் அல்லது ஒரு வருடத்தை வரையறுத்ததாக காணப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளோம். சர்வக்கட்சி அரசாங்கம் தொடர்பில் அரசாங்கம் எம்முடன் எவ்வித பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுக்கவில்லை என பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் 10 அரசியல் கட்சிகளின் உறுப்பினர் வீரசிங்க வீரசுமன தெரிவித்தார்.