ஜனாதிபதி ரணில் மேற்குலக நாடுகளின் ஆதரவை இழந்துவிட்டார் – ராஜித சேனாரத்ன

127 0

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஆதரவளித்து வந்த மேற்குலக நாடுகள் , கடந்த வாரம் அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களால் அவர் மீது அதிருப்தியடைந்துள்ளன.

இதனால் இலங்கைக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்த சர்வதேச உதவிகள் கேள்விக்குள்ளாகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் செவ்வாய்கிழமை (26) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

முழு நாடும் பொதுஜன பெரமுனவிற்கு எதிரான நிலைப்பாட்டிலேயே உள்ளது. மக்களின் அந்த நிலைப்பாட்டை வெற்றி பெறச் செய்வதற்காகவே நாம் பாராளுமன்றத்தில் முயன்றோம்.

எனினும் பொது ஜன பெரமுனவிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் தத்துமது சுகபோகங்களுக்காக ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளித்தனர்.

இவ்வாறு வெற்றி பெற்ற ஒரு ரணில் விக்ரமசிங்கவின் முதலாவது நடவடிக்கை அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல்கள் ஆகும்.

இதன் காரணமாக எந்த சந்தர்ப்பத்திலும் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்த மேற்குலக நாடுகள் கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்தின. அத்தோடு சர்வதேச நாணய நிதியமும் இலங்கையுடனான ஒப்பந்தத்தை ஒத்தி வைத்துள்ளது.

உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளிடமிருந்து எதிர்பார்க்கும் உதவிகளும் கைநழுவி போகும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. பிரிதொரு நபரின் மூலம் ராஜபக்ச யுகம் மீண்டும் இலங்கையில் ஆரம்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. இன்று மேற்குலக நாடுகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இல்லை.

நாட்டில் தற்போது உள்ள நிலைமையில் சர்வ கட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பது அத்தியாவசியமானதாகும.; ஆனால் அது மக்களின் நிலைப்பாட்டிற்கு ஏற்றதாக அமைய வேண்டும்.

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டம் கலைக்கப்பட்ட போதிலும் நாடளாவிய ரீதியில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் இன்னும் நிறைவிற்கு வரவில்லை. இந்த அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை ஏற்பதற்கான அழைப்புகள் எமக்கும் வருகின்றன ஆனால் எம்மில் எவரும் அதனை பொறுப்பேற்க தயாராக இல்லை என்றார் .