எரிபொருள் நெருக்கடி காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டிருப்பது எதிர்கால சமுதாயத்தின் கல்விமான்களை உருவாக்குவதில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தக்கூடுமென சங்கானை பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் கேசவதாசன் தெரிவித்துள்ளார்.
சங்கானை பலநோக்கு கூட்டுறவு சங்க அலுவலகத்தில் இன்று (26) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
”யுத்த காலத்தில் நான் தொண்டராசிரியராக வன்னி பெருநிலப்பரப்பின் முல்லைத்தீவு மாவட்டத்தில் கடமையாற்றி கொண்டிருந்தேன். விமான குண்டு வீச்சுக்களின் மத்தியிலும் மாணவர்கள் கல்வி கற்றார்கள்.
எனினும், எமது மாணவ செல்வங்கள் பாடசாலைகளில் பொது இளைஞர்களால் அமைக்கப்பட்ட பதுங்கு குழியினுள் இருந்து பாடங்களை கற்றுக்கொண்டார்கள்.
இவ்வாறான யுத்த கால சூழ்நிலையிலும் பாடசாலை 5 நாட்களும் இடம்பெற்றது. மேலும், சிறந்த பெறுபேறுகளையும் மாணவர்கள் பெற்றிருந்தார்கள்.
தற்காலத்தில் ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் மாணவர்கள் மோட்டார் வாகனங்களில் பாடசாலைக்கு சென்று கல்வியை தொடர்கின்றார்கள்.
தூரப்பிரதேசங்களிலிலிருந்து ஆசிரியர்கள், அதிபர்கள், கோட்டக்கல்வி படைப்பாளர்கள் மற்றும் வலய கல்வி பணிப்பாளர்கள் இணைந்து ஒரு உறுதிப்படுத்தலை மேற்கொள்கின்ற தருணத்தில், அவர்களுக்குரிய எரிபொருளை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இதன் மூலம் ஐந்து நாட்களும் பாடசாலைகளை நடாத்த முடியும்.
தென்மாகாணத்தை சேர்ந்த மாணவர்களுடைய கல்வி நிலையை கருத்தில் கொண்டு பாடசாலைகள் ஐந்து நாட்களும் இயக்கப்படுகின்றது.
எனவே, எங்களுடைய தமிழ் மாணவர்களுடைய எதிர்கால நிலைமை கருத்தில் கொண்டு, எங்களுடைய பிரதேசத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கடமையாற்றுகின்ற ஆசிரியர்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேவேளை, பலநோக்கு கூட்டுறவு சங்கங்கள் என்பன கொள்ளையர்கள் அல்ல, மாறாக எந்த ஒரு இடர் பொதுமக்களுக்கு ஏற்பட்டாலும் நிறைவான சேவையை குறைந்த விலையில் வழங்குபவர்களே.
சங்கானை பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் சித்தன்கேணி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று (25) சீராக QR குறியீடு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
QR குறியீடு முறைக்கு மேலாக பங்கீட்டு அட்டைகளையும் நாங்கள் நேற்று பரிசோதனை செய்தே மக்களுக்கான எரிபொருள் விநியோகத்தை மேற்கொண்டோம்.
மேலும், எரிபொருளை பெறாத எமது பிரதேச மக்கள் எரிபொருளை பெற வேண்டும் என்பதே எமது நோக்கம்.
அண்மைக்காலமாக சங்கானை பிரதேச செயலகத்திற்கும் எமது சங்கானை பல்நோக்கு கூட்டுறவு சங்கத்திற்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் காணப்படுவதாக தகவல்கள் பரவி வருகின்றன. இது குறித்து தெளிவுபடுத்த வேண்டிய கடமை எனக்குள்ளது” என தெரிவித்துள்ளார்.