வற் என்று அறியப்பட்டுள்ள பெறுமதி சேர்க்கை வரி முறைமைக்கு எதிராக தலைநகரில் இன்று வர்த்தக சமூகம் முன்னெடுக்கும் எதிர்ப்பு நடவடிக்கைகள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அரசாங்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளாக திசை திருப்பப்பட்டு விடக்கூடாது என்பதில் நீங்கள் கவனமாக இருங்கள்.எனவே அரசாங்கத்துக்கு எதிராக போராட்டம் நடத்தவேண்டாம்.
வர்த்தக நிலையங்களையும் மூடவேண்டாம் என்று கோருகின்றேன் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்பில் இன்று ( நேற்று) மாலை தன்னை சந்தித்த கொழும்பு வர்த்தக சமூக பிரதிநிதிகளுடன் உரையாடிய அமைச்சா் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
எமது அரசாங்கத்தை கவிழ்த்துவிட காத்திருக்கும் இனவாத அணிக்கு நாம் ஒருபோதும் துணைபோய் விடக்கூடாது. அதேவேளை இந்த வற் வரிவிதிப்பு தொடர்பில் வர்த்தக சமூகத்தின் மனவுணர்வுகளையும், நிலைப்பாடுகளையும் நான் நன்கு புரிந்துக்கொண்டுள்ளேன். கொழும்பு மாவட்ட எம்பி என்ற முறையிலும், அமைச்சர் என்ற முறையிலும், உங்கள் கருத்துகளை உரிய இடங்களுக்கு கொண்டு சென்றுள்ளேன்.
புதிய பெறுமதி சேர்க்கை வரி முறைமை தொடர்பில் நாம் தற்சமயம் அரசாங்கத்துக்குள் முன்னெடுக்கும் உள்ளக மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு, உங்கள் கருத்துகள் மேலும் வலு சேர்க்கும்கடந்த காலங்களில் இருக்காத, கடைகளை மூடி தெருவில் ஆர்ப்பாட்டங்களை நடத்தும் சுதந்திரத்தை வர்த்தக சமூகத்துக்கு எமது அரசு இன்று பெற்றுக்கொடுத்துள்ளது. கடந்த அரசை வீழ்த்தி, இந்த அரசை அமைக்க நீண்டகாலம் பெரும் பாடுபட்டவன் என்ற முறையில் இதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
இன்று ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல் கடந்த அரசில் இருந்து நாம் பெற்றுக்கொண்ட சீதனம் ஆகும். இதில் இருந்து நாம் வெகு விரைவில் மீள்வோம். புதிய வரிவிதிப்பு முறைமையில் மறுசீரமைப்பு கொண்டு வருவது தொடர்பில் நாம் இப்போது கவனம் செலுத்தி வருகிறோம். விரைவில் நல்ல செய்தி வரும்.
எனவே அரசாங்கத்துக்கு எதிராக போராட்டம் நடத்தவேண்டாம். வர்த்தக நிலையங்களையும் மூடவேண்டாம் என்று கோரிக்கை விடுக்கின்றேன். விரைவில் நல்லது நடக்கும்.