புகையிரத திணைக்களம் தற்போது நாளொன்றுக்கு 10 கோடி ரூபா நஷ்டத்தை எதிர்கொள்கிறது. அந்த நஷ்டத்தை ஈடுசெய்வதற்காகவே புகையிரத கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
தற்போதுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் இவ்வாறு தொடர்ந்தும் புகையிரத திணைக்களத்தில் நஷ்டத்தில் இயங்க இடமளிக்க முடியாது என்று அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கடந்த 2012 ஆம் ஆண்டு புகையிரத திணைக்களத்தின் மாதாந்த வருமானம் 4.8 பில்லியன் ரூபாவாகும். ஆனால் 34 பில்லியன் ரூபா நஷ்டமாகும். அதே போன்று 2021 இல் வருமானம் 4.5 பில்லியன் ரூபாவாகக் காணப்பட , நஷ்டம் 44 பில்லியன் ரூபாவாக உயர்வடைந்தது.
இவ்வாறு தொடர்ந்தும் பாரிய நஷ்டத்தை எதிர்கொள்வதால் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குதல் மற்றும் எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கான கொடுப்பனவை வழங்குதல் உள்ளிட்டவற்றில் கடும் நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
தற்போது புகையிரத திணைக்களம் நாளொன்றுக்கு 10 கோடி ரூபா நஷ்டத்தை எதிர்கொள்கிறது. இவ்வாண்டு இதுவரையான காலப்பகுதியில் மேலதிக வேலை நேர கொடுப்பனவு மாத்திரம் 2.3 பில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறான நெருக்கடிகளை எதிர்கொள்வதற்காகவும், நஷ்டத்தினை ஈடுசெய்வதற்காகவுமே புகையிரத கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
தற்போது எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் பஸ் போக்குவரத்தில் காணப்படுகின்ற சிக்கலால் பெரும்பாலான பொது மக்கள் புகையிரத சேவையில் பயணிக்கத் தொடங்கியுள்ளனர். கடந்த சில மாதங்களுடன் ஒப்பிடும் போது புகையிரத பாவனையாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது.
எவ்வாறிருப்பினும் இதனைக் கருத்திற் கொண்டு புகையிரத பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பிலோ அல்லது புகையிரதங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பிலோ அவதானம் செலுத்தப்படவில்லை.
காரணம் ஏற்கனவே இறக்குமதி செய்யப்படுள்ள புகையிரத பெட்டிகளுக்கான கொடுப்பனவுகளை செலுத்தாமலிருப்பதால் , அதற்கான தண்டப்பணத்தையும் செலுத்த வேண்டியுள்ளது.
இவ்வாறான நிலைமைக்கு மத்தியில் புகையிரத பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பில் அவதானம் செலுத்த முடியாது என்றார்