கிழக்கு மாகாண சபைக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் உட்பட அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டுமென கிழக்கு மாகாண மக்கள் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிழக்கு மாகாணத்திற்கு பயணம் மேற்கொண்ட அமெரிக்க தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க இராஜாங்க உதவிச் செயலர் நிஷா பிஸ்வாலைச் சந்தித்தபோதே இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
அதிகாரப் பரவலாக்கத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட மாகாண சபைக்குரிய அதிகாரங்கள் எவையும் கிழக்கு மாகாணத்துக்கு வழங்கப்படவில்லையெனத் தெரிவித்த மக்கள் பிரதிநிதிகள் இதன் காரணமாக கிழக்கு மாகாணத்தில் பல்வேறு அபிவிருத்திகளை மேற்கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
எனவே, மாகாண சபைக்குரிய அதிகாரங்களை மாகாணசபைக்கு வழங்குவதற்குரிய அதிகாரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும், யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்துவதற்கு ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டுமெனவும், வெள்ளம், சுனாமி மற்றும் வறட்சி காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட வாழ்வாதாரத் திட்டங்கள் வெற்றியளிக்கவில்லையெனவும் தெரிவித்துள்ளனர்.