சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்புத் தொடர்பாக தீர்மானிக்கவேண்டியது சிறீலங்கா அரசே!

364 0

Tom-Malinowskiபோர்க்குற்ற விசாரணைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணைசெய்வதற்கான நீதிக்கட்டமைப்பை உருவாக்குவது சிறீலங்கா அரசாங்கமே என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள், மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி தெரிவித்துள்ளார்.

மூன்று நாள் பயணம் மேற்கொண்டு சிறீலங்கா வந்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச்செயலர் நிஷா பிஸ்வாலுடன் இணைந்து நேற்று இரவு செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோது போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்புக் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே உதவிச் செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், ஜெனீவாத் தீர்மானம் சிறீலங்காவின் இறைமையை முழுமையாக மதிக்கின்றது. சிறப்பு நீதிமன்றத்தின் உட்கட்டமைப்பை அமைப்பது சிறீலங்காவைப் பொறுத்த விடயம்.தமது இறைமைக்குட்பட்ட வரையறைக்குள் இருந்துகொண்டே, பல்வேறு மட்டங்களின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்ளமுடியும் என சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

சிறீலங்கா நீதிமன்றங்களின் அவநம்பிக்கையால் தான் இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. மீண்டும் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவது என்பதை இலக்காகக் கொண்டு தான், ஒட்டுமொத்த பொறுப்புக்கூறல் செயல்முறைகள் தொடர்பாகவும், இந்த வாக்குறுதி புரிந்துணர்வு அடிப்படையில் கொடுக்கப்பட்டது.

அனைத்துலகப் பங்களிப்பு குறிப்பிடத்தக்க ஒரு விடயமாக இருக்கவில்லையெனவும் தெரிவித்ததுடன், சீறீலங்காவானது பல நாடுகளுக்கு தனது நீதித்துறைப் பங்களிப்பை வழங்கியுள்ளது. அதேபோல் சிறீலங்காவும் அவ்வாறு பயன்பெறலாம் எனவும் தெரிவித்துள்ளார்.