சீனாவில் கொரோனா பெருந்தொற்றால் அந்நாட்டின் பல பகுதிகள் சமீபத்தில் பெரும் பாதிப்புகளை சந்தித்தன. இந்நிலையில், சீனா முழுவதும் ஜூன் 13ந்தேதியில் இருந்து கடுமையான வெப்ப அலைகள் பாதிப்புகளை ஏற்படுத்த தொடங்கின.
இந்த வெப்ப அலைகள் தொடர்ந்து, ஆகஸ்டு மாதம் 2வது வாரம் வரை நீடித்திருக்கும் என்று குளோபல் டைம்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது. 2022ம் ஆண்டுக்கான வெப்ப அலை முன்பே வந்து விட்டது என அந்நாட்டு வானிலை ஆய்வு மையத்துடன் தொடர்புடைய தேசிய வானிலை மையத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் சன் ஷாவோ கூறியுள்ளார். இதனால், வடமேற்கு சீனாவின் ஷாங்சி மாகாணத்தின் தென்கிழக்கு உள்ளிட்ட பகுதிகள் கிழக்கு சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தின் வடகிழக்கு பகுதிகளில் 40 டிகிரி செல்சியசுக்கும் கூடுதலான வெப்ப அலைகள் பாதிப்புகளை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சீனா, கடந்த ஜூனில் இருந்து கடுமையான வெப்பநிலை பதிவாகி வருகிறது.
வடக்கு சீனாவின் ஹெபய் மாகாணத்தில் மொத்தம் 71 தேசிய வானிலை ஆய்வு மையங்களில் வெப்பநிலை சாதனை பதிவை கடந்து உள்ளது. அவற்றில் லிங்ஷூ நகரில் 44.2 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. சீனாவின் தெற்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் வருகிற 26ந்தேதி வரை கடுமையான வெப்பம் நிலவும். நாட்டின் பல பகுதிகளில் வருகிற 31ந்தேதி முதல் ஆகஸ்டு 15ந்தேதி வரை முந்தின ஆண்டுகளில் இல்லாத வகையில் மிக அதிக வெப்பம் பதிவாகும் என குளோபல் டைம்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது. சீனாவின் சில நகரங்களில் வெப்ப அலைகள் மற்றும் கொரோனா தொற்றுகள் என இருவகையான சவால்களை சந்திக்க வேண்டிய சூழலில் மக்கள் உள்ளனர். சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அந்நாட்டின் முக்கிய நகரங்களான பீஜிங், ஷாங்காய், ஜிலின் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று தீவிரமுடன் பரவி வருகிறது. உருமாறிய கொரோனா காரணமாக இந்த தொற்று பரவல் அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சீனாவின் உள்ளூர் நகரங்களில் 580 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஷாங்காய் நகரில்தான் அதிக அளவிலான கொரோனா பாதிப்புகள் பதிவாகி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அங்கு கொரோனா தடுப்பு பணிகள் தற்போது மிக தீவிரமுடன் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதுபோக, ஷாங்காய் நகரில் கடந்த புதன்கிழமை 40.9 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இது கடந்த 1973ம் ஆண்டுக்கு பின்பு பதிவான அதிக வெப்பநிலையாகும். கிழக்கு சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் ஹாங்ஷூ நகரில் தீவிர வெப்பம் பற்றிய 54 சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இது ஒரு நாளில் விடப்பட்ட வெப்பநிலைக்கான எச்சரிக்கை எண்ணிக்கையில் மிக அதிகம் ஆகும். சீனாவின் நடப்பு ஆண்டின் முதல் பாதியில் கடுமையான ஊரடங்குகள் மற்றும் பரிசோதனை நடைமுறைகள் மக்களின் வாழ்க்கை முறை வெகுவாக பாதிக்கப்பட்டது.
இந்த சூழலில், சீனாவில் அடுத்த 12 நாட்களுக்கு கடும் வெப்பம் அலைகளுக்கான எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இதனால், 90 கோடி பேர் பாதிக்கப்பட கூடும். ஒரு வாரத்தில் சீனாவின் பாதி நிலப்பகுதி பாதிப்பிற்குள்ளாகும். இந்த நீடித்த வெப்ப அலைகளால் மக்களின் வாழ்வு மற்றும் பயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளன. சீனாவில் மின்சார பயன்பாடும் சாதனை அளவை கடந்து இருக்கும் என குளோபல் டைம்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது. சீனாவில் கொரோனா பெருந்தொற்றில் இருந்தே மக்கள் இன்னும் முழுமையாக மீளவில்லை. இந்த சூழலில், அவர்களுக்கு சவால் விடும் வகையில் வெப்ப அலையும் சேர்ந்து இயல்பு வாழ்க்கையை புரட்டி போட உள்ளது என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இதனால், சீன மக்களை காக்க அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய சூழலில் உள்ளது.