தலைமன்னார் – பியர் கடற்கரை பகுதியில் இருந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்ற 3 மீனவர்கள் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களில் இரு மீனவர்கள் கடற்படையினரால் மீட்கப்பட்டனர். மேலும் ஒரு மீனவர் காணாமல் போயுள்ளார்.
கடந்த 14 ஆம் திகதி தலைமன்னார் பியர் மீன்பிடி துறையில் இருந்து கண்ணாடி இழைப்படகில் மூன்று மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர். இதன்போது பலத்த காற்றின் காரணமாக கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்துள்ளது.
இதன்போது, குறித்த மீனவர்கள் மூவரும் கடலில் வீழ்ந்து தத்தளித்துக் கொண்டு இருந்த போது, நீரில் மூழ்கிய படகைப் பிடித்தவாறு நீண்ட நேரம் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் நேற்று மாலை மீன்பிடி தொழிலுக்காக வந்திருந்த இந்திய இழுவைப் படகின் உதவியுடன் இரண்டு மீனவர்கள் காப்பாற்றப்பட்டு கச்சதீவு கடற்கரையினை அண்மித்த தூரத்தில் இறக்கி விடப்பட்ட நிலையில் குறித்த மீனவர்கள் கச்சதீவு கடற்படை தளத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
குறித்த இரு மீனவர்களையும் மீட்ட கடற்படையினர் சிகிச்சை வழங்கிய நிலையில், சக மீனவர்களிடம் ஒப்படைத்தனர்.
தலைமன்னார் கிழக்கு கேபிள் ஹவுஸ் பகுதியை சேர்ந்த ராஜி ஜெனாத் (வயது 27) மற்றும் ராஜ மூர்தி மோகன்ராஜ் (வயது 50).ஆகியோர் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.
மேலும் அதே பகுதியை வதிவிடமாக கொண்ட (ராசதுரை ராஜசேகர் வயது 52.)என்ற மீனவர் காணாமல் போயுள்ளார்.
மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்