2022 இல் இலங்கையின் பொருளாதாரம் ஆறுவீதத்தினால் வீழ்ச்சியடையும்என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க வோல்ஸ்ரீட் ஜேர்னலிற்கு தெரிவித்துள்ளார்.
எனினும் அரசியல் ஸ்திரமின்மை சர்வதேச நாணயநிதியத்துடனான பேச்சுவார்த்தைகளை பாதித்துள்ளதால் பொருளாதார வீழ்ச்சி ஆறு வீதத்திற்கும் அதிகமாகயிருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
முக்கிய கட்டமைப்பு மாற்றங்கள் குறித்து சர்வதேச நாணயநிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு நாட்டிற்கு ஸ்திரமான அரசியல் நிர்வாகம் அவசியம் என குறிப்பிட்டுள்ள மத்திய வங்கி ஆளுநர் அத்தியாவசிய இறக்குமதிகளான மருந்துகள் எரிபொருட்கள் போன்றவற்றை பெறுவதற்காக ஏனைய நாடுகளில் இருந்தும் சர்வதேச அமைப்புகளிடமிருந்தும் நிதி உதவியை பெறுவதற்கும் ஸ்திரமான அரசியல் நிர்வாகம் அவசியம் என குறிப்பிட்டு;ள்ளார் .
கடந்த மாதம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட 500 மில்லியன் டொலர் நீடிப்பு கிடைக்காதது எரிபொருள் நெருக்கடியை தீவிரப்படுத்தியுள்ளது.
அதேபோன்று இந்தியாவின் ரிசேர்வ் வங்கியுடன் எதிர்பார்க்கப்பட்ட ஒரு மில்லியன் டொலர் நாணயஇடமாற்றத்திலும் முன்னேற்றம் ஏற்படவில்லை அதேபோன்று தனது 1.5பில்லியன் டொலர் நாணயஇடமாற்ற விடயத்தில் சீனா தனது தனது நிபந்தனைகளை தளர்த்தவில்லை என மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
ஒரு வருடகாலத்திற்கு முன்னதாகவே இலங்கை சர்வதேச நாணயநிதியத்தை நாடியிருந்தால் கையில் நான்கு பில்லியன் டொலர்கள் இருந்தவேளை கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தால் அது இலங்கை இன்றும் அத்தியாவசிய பொருட்களை தடையின்றி இறக்குமதி செய்யக்கூடிய நிலையை ஏற்படுத்தியிருக்கும் எனவும் மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இதனால் நாடு அமைதியாக இயங்கிக்கொண்டிருக்கும் நிலையையும் பொதுமக்கள் மீது நிதி அழுத்தங்கள் பிரயோகிக்கப்படும் நிலையும் ஏற்பட்டிருக்காது ஆனால் அரசாங்கம் பொறுத்திருந்து பார்க்க தீர்மானித்தது என அவர் தெரிவித்துள்ளார்.