முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகலை அடுத்து உருவாகியுள்ள ஜனாதிபதி பதவிக்கான வெற்றிடத்திற்காக 4 பிரதான வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். இவ்வாறு களமிறங்கியுள்ள வேட்பாளர்கள் தமது தீர்மானம் குறித்து கருத்துக்களையும் வெளியிட்டுள்ளனர்.
எதிர்வரும் புதன்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தெரிவிற்கான தேர்தலில் களமிறங்குவதாக அறிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தமது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளனர்.
எதிர்க்கட்சிகள் இணைந்து வரலாற்றில் முதன் முறையாக ஒருமித்த அரசாங்கமொன்றை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
இதே வேளை ஊழல் மற்றும் சகாக்கள் அரசியலுக்கு ஒத்துழைப்பு வழங்குவது , இனிமேலும் பிரயோசனமற்றதாகவே அமையும் என்பதை எதிர்தரப்பினருக்கு தெளிவுபடுத்துவதற்கு முயற்சிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தனது டுவிட்டர் பதிவில்,
‘பிரதான எதிர்க்கட்சி மற்றும் இதர எதிர்க்கட்சிகள் இணைந்து வரலாற்றில் முதன்முறையாக ஒருமித்த அரசாங்கமொன்றை உருவாக்கும் எதிர்பார்ப்புடனேயே ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்குவதற்கு தீர்மானித்துள்ளேன். வரலாற்றில் தொடர்ச்சியாகக் காணப்படும் ஊழல் அரசியலை கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதே இதன் பிரதான நோக்கமாகும்.’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தனது டுவிட்டர் பக்கத்தில்,
எதிர் தரப்பினரின் ஒத்துழைப்பினைப் பெற்றுக் கொள்வதற்காக மிகவும் கடினமான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஊழல் மற்றும் சகாக்கள் அரசியலுக்கு ஒத்துழைப்பு வழங்குவது , இனிமேலும் பிரயோசனமற்றதாகவே அமையும் என்பதை அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்கு முயற்சிக்கின்றோம்.’ என்று பதிவிட்டுள்ளார்.