ஜனாதிபதி தெரிவிற்கான வாக்களிப்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொலை மிரட்டல்

167 0

தேர்தலின் போது சுதந்திரமாக தமது வாக்குகளைப் பயன்படுத்துவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு காணப்படும் உரிமைக்கு இடையூறு விளைவித்து , சமூக வலைத்தளங்கள் ஊடாக அழுத்தம் பிரயோகிக்கும் நபர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாதுகாப்பு துறையினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு காணப்படும் அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பான சட்டம் உட்பட , அதனுடன் தொடர்புடைய குற்றவியல் சட்டத்தின் அடிப்படையிலும் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறும் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்கியுள்ள ஆலோசனையில் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகள் சட்டத்தின் கீழ் , அவர்கள் பாராளுமன்றத்திற்கு வருவதற்கும் , திரும்பிச் செல்வதற்கும் சுதந்திரம் காணப்படுவதாகவும் , பாராளுமன்றத்திற்குள்ளும் சுதந்திரமாக செயற்படுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கு எதிராக செயற்படுவதானது பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமையை மீறுவதுடன் அச்சுறுத்தலாகவும் அமையும் என பதில் ஜனாதிபதி வழங்கிய ஆலோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வன்முறையைப் பரப்பும் கலகக்காரர்களால் சமூக வலைத்தளங்கள் ஊடாக குறிப்பிட்ட வேட்பாளர்களுக்கு வாக்களித்து விட்டு கிராமத்திற்கு வர வேண்டாம் என்று பதிவிட்டு , அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக பதில் ஜனாதிபதிக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இதற்கு முன்னரும் பாராளுமன்ற உறுப்பினர்களின் இல்லங்களுக்கு தீ வைத்து அவற்றை அழித்துள்ளதோடு , பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார்.

இவற்றை சுட்டிக்காட்டி கலகக்காரர்களால் மறைமுகமாக கொலைமிரட்டல் விடுக்கப்படுவதாகவும் பதில் ஜனாதிபதிக்கு பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இவ்வாறு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதால் தமக்கு பாராளுமன்றத்தில் சுதந்திரமாக வாக்களிக்க முடியாத சூழல் காணப்படுவதாகவும் பதில் ஜனாதிபதியிடம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய இவை தொடர்பில் துரித விசாரணைகளை முன்னெடுக்குமாறு பதில் ஜனாதிபதி பாதுகாப்பு தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக வாக்களிக்கும் போது , ஒரு பாராளுமன்ற உறுப்பினரால் பிரிதொருவருக்கு அச்சுறுத்தல் மற்றும் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டால் , நாட்டில் நடைமுறையிலுள்ள சட்டத்தின் பிரகாரம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முதலாவது அமைச்சரவை கூட்டத்திலும் தெரிவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.