புதிய ஜனாதிபதி தெரிவிற்கான வேட்பாளராக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவும் போட்டியிடுவார். நாட்டை நெருக்கடியிலிருந்து மீட்ப்பதற்கு அனைவருடனும் இணைந்து பொது இணக்கப்பாட்டுடன் செயற்பட நாம் தயார் என்று பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
ஜே.வி.பி. தலைமையகத்தில் (16) சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
பாராளுமன்றத்தினுள் ஜனாதிபதியை தெரிவு செய்யும் போட்டியில் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க போட்டியிடவுள்ளார்.
தற்போது எதிர்கொண்டுள்ள பாரிய பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்காகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய எமது தலைமைத்துவத்தின் கீழ் , ஏனைய கட்சிகளின் இணக்கப்பாட்டுடன் இடைக்கால அரசாங்கத்தை அமைத்து பொது மக்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் முன்வைத்துள்ள பரிந்துரைகளைக் கவனத்திற் கொண்டு குறித்த இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படும். இந்த பொறுப்பினை ஏற்று நாட்டை நிர்வகிப்பதற்கு நாம் தயார்.
பொது இணக்கப்பாட்டுடன் பொது வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு நாம் தயாராக உள்ளோம். இதற்காக எமக்கு ஒத்துழைக்குமாறு சகல பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் கேட்டுக் கொள்கின்றோம். நாட்டை நெருக்கடியிலிருந்து மீட்பதற்கு அநுரகுமார திஸாநாயக்க தலைமை வகிப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க தயார் எனில் , அனைவருடனும் கைகோர்த்து பயணிப்பதற்கு நாம் தயார் என்றார்.