இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் வேட்பாளர் தொடர்பில் எதிர்க்கட்சிகளுக்கிடையில் ஆரம்பத்தில் இணக்கப்பாடு எட்டப்பட்ட போதிலும் , சில தரப்பினர் தற்போது அந்த நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கியுள்ளனர். எனவே தான் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தினம் புதிய பிரதமருக்கான பெயர் சபாநாயகருக்கு அறிவிக்கவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில்15 ஆம திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அனைத்து கட்சி தலைவர்களினதும் இணக்கப்பாட்டுடன் சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பதற்கே ஐக்கிய மக்கள் சக்தி ஆரம்பத்திலிருந்து முயற்சித்து வருகிறது.
எனினும் எமக்கு பாராளுமன்றத்தில் 62 உறுப்பினர்கள் மாத்திரமே ஆதரவளிக்கவுள்ளனர். அத்தோடு அரசாங்கத்திலுள்ள இரு பிரதான பதவிகளுக்கு எதிர்க்கட்சியிலிருந்து ஒருவரும் , ஆளுங்கட்சியிலிருந்து ஒருவரும் நியமிக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாக இருந்தது.
ஆனால் தற்போதுள்ள அரசாங்கம் அதனை விரும்பவில்லை. மாறாக ஏனைய கட்சி உறுப்பினர்களை விலைக்கு வாங்கியே சர்வகட்சி அரசாங்கத்தை அமைத்தது. எவ்வாறிருப்பினும் அடுத்த வாரம் அமைக்கப்படவுள்ள அரசாங்கத்திற்கான பிரதமராக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் பெயரை முன்மொழிவதற்கு 15 ஆம் திகதி இடம்பெற்ற சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டது.
அதற்கமையவே இன்று (நேற்று) புதிய பிரதமருக்கான பெயரை சபாநாயகருக்கு அறிவிப்பதாக தெரிவித்தோம். எவ்வாறிருப்பினும் இன்று (நேற்று) மீண்டும் எதிர்க்கட்சிகளுடன் இடம்பெற்ற சந்திப்பில் சிலர் மாத்திரம் அந்த நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கியுள்ளனர். எனவே தான் புதிய பிரதமர் குறித்த தீர்மானத்தை சபாநாயகருக்கு அறிவிக்கவில்லை.
ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா நாம் அனைவரும் மதிக்கும் நபராவார். எனினும் அவரது அறிவிப்பு தொடர்பில் எமது நிலைப்பாடு எதுவும் கிடையாது. அது தொடர்பில் அவரிடமே கேட்க வேண்டும் என்றார்.