அனைத்து அரசியல் கட்சித்தலைவர்களிடமும் சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள வேண்டுகோள்

134 0

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகலைத் தொடர்ந்து புதிய ஜனாதிபதியைத் தெரிவுசெய்யும் நடவடிக்கைகள் தாமதமின்றி நடைபெறவேண்டும் என்றும், அதற்கு அவசியமான முழுமையான ஒத்துழைப்பை அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் வழங்கவேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக இடம்பெறவிருக்கும் முக்கியமான அதிகாரப் பரிமாற்றத்தினைப் பாதிக்கும் எந்தவொரு செயற்பாட்டிலிருந்தும் விலகியிருக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டிருக்கின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகலைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்களும் நாட்டுமக்களும் செயற்படவேண்டிய விதம் தொடர்பில் தெளிவுபடுத்தி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே சட்டத்தரணிகள் சங்கம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகலைத் தொடர்ந்து இப்போது ஜனாதிபதி அலுவலகம் வெற்றிடமாகவுள்ளது.

அரசியலமைப்பிற்கு அமைவாகவும், 1981 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல்கள் சட்டத்தின் பிரகாரமும் அடுத்த ஜனாதிபதியைத் தாமதமின்றித் தெரிவுசெய்யவேண்டிய பொறுப்பு பாராளுமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கடந்த 9 ஆம் திகதி நடைபெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களுக்கு மதிப்பளிக்கும் அதேவேளை, இலங்கையின் முக்கிய கட்டமைப்புக்கள், சட்ட மற்றும் அரசியலமைப்புப் பொறிமுறைகளின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை மீளக்கட்டியெழுப்பும் வகையில் விரைந்து செயற்படுமாறு அனைத்துக் கட்சிகளினதும் தலைவர்களிடம் நாம் கேட்டுக்கொள்கின்றோம்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முறையான பதவி விலகலில் தாமதங்கள் ஏற்பட்டிருப்பினும் பாராளுமன்றம் 16 ஆம் திகதி சனிக்கிழமை கூடவிருப்பதால், புதிய ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பை நடாத்துவதற்காக திகதியாக தீர்மானிக்கப்பட்ட ஜுலை 20 ஐ மாற்றமின்றி பேணமுடியும்.

>ஜனாதிபதியின் பதவி விலகல், அரசியலமைப்பிற்கான 37(1) ஆம் சரத்திற்கு அமைவாக இடம்பெற்ற பதில் ஜனாதிபதி நியமனம் உள்ளடங்கலாக கடந்த 9 ஆம் திகதியிலிருந்து நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலைகள் தொடர்பில் நாம் அவதானம் செலுத்திவருவதுடன் அரசியல், பொருளாதார மற்றும் சமூக ஸ்திரமின்மைகளால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்தும் கவனம் செலுத்தியுள்ளோம்.

மக்களின் இறையாண்மைக்கும் அபிலாஷைகளுக்கும் மதிப்பளித்து, ஜனநாயகக்கோட்பாடுகளை நிலைநாட்டுவதற்கான தமது கடமையை உரியவாறு நிறைவேற்றவேண்டிய பொறுப்பு நாட்டின் சகல தொகுதிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் உள்ளது. தனிநபரின் அல்லது ஏதேனுமொரு அரசியல் கட்சியின் தனிப்பட்ட நலன்களைவிடுத்து, நாட்டின் நலனை முன்னிறுத்தி உரியவாறான தீர்மானங்களை மேற்கொள்வதே காலத்தின் தேவையாக இருக்கின்றது. இலங்கை மேலும் குழப்பத்திற்குள் மூழ்குவதைத் தடுப்பதற்கும் அரசியல், சமூக மற்றும் பொருளாதார உறுதிப்பாட்டினை ஏற்படுத்துவதற்கும் தமது அதிகாரங்களைப் பயன்படுத்தவேண்டிய பொறுப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கின்றது.

;ஜனாதிபதியின் பதவி விலகலை எதிர்பார்த்து போராட்டக்காரர்கள் முக்கிய அரச கட்டமைப்புக்களிலிருந்து வெளியேறியுள்ளமையை நாம் வரவேற்கின்றோம். அதேவேளை இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக இடம்பெறவிருக்கும் முக்கியமான அதிகாரப் பரிமாற்றத்தினைப் பாதிக்கும் எந்தவொரு செயற்பாட்டிலிருந்தும் விலகியிருக்குமாறு நாம் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம் என்று அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.