புதிய ஜனாதிபதி தேர்வில் சஜித்தும் போட்டி

274 0

பாராளுமன்றத்தில் அடுத்த வாரம் இடம்பெறவுள்ள புதிய ஜனாதிபதி தெரிவிற்கான வாக்கெடுப்பின் போது எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் வேட்பாளராக போட்டியிடவுள்ளார்.

இதன் போது ஏனைய கட்சிகளின் ஆதரவைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் விசேட கலந்துரையாடலொன்றும் முன்னெடுக்கப்பட்டது.

இதன் போதே இந்த தீர்மானம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இந்தக் கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர மற்றும் அதன் உறுப்பினர்களான துமிந்த திஸாநாயக்க, லசந்த அழகியவண்ண, ரஞ்சித் சியம்பலாபிட்டிய உள்ளிட்டோரும் , தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவர்களான வேலுசாமி இராதாகிருஷ்ணன் மற்றும் பழனி திகாம்பரம், இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார, லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண, இலங்கை தொழிலாளர் காங்ரஸ் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்கினேஷ்வரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

பொது உடன்பாட்டின் பிரகாரம் நாட்டைக் கட்டியெழுப்பும் நோக்கில் சர்வகட்சி வேலைத்திட்டத்தை உருவாக்குவது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையிலான இந்த சந்திப்பு அமைந்திருந்ததாகவும் , நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான பொதுவான வேலைத்திட்டத்தின் ஊடாக ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு ஒரு வேலைத்திட்டத்தை உருவாக்குவதற்காகவும் இந்த சந்திப்பு இடம்பெற்றதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது

இது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் கேசரிக்கு தெரிவிக்கையில் ,

‘புதிய ஜனாதிபதி தெரிவிற்காக அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ள வாக்கெடுப்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் போட்டியிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே இது தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவினை தற்போது அவ்வாறே நடைமுறைப்படுத்துகின்றனர். இது தொடர்பில் ஏனைய உறுப்பினர்களின் அபிலாஷைகளையும் ஆதரவையும் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பிலேயே இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.’ என்று குறிப்பிட்டார்.