அரசியலமைப்பின் பிரகாரமே ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கு யாரும் குழப்படைவதில் எந்த பிரச்சினையும் இல்லை. ரணில் விக்ரமசிங்க அரசியலமைப்புக்கு முரணாக ஒருபோதும் செயற்படமாட்டார் என ஐக்கிய தேசிய கட்சி செயலாளர் ரங்கே பண்டார தெரிவித்தார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங் பதில் ஜனாதிபதியாக கடமையை ஏற்றுள்ள நிலையில் அதுதொடர்பில் தெரிவிக்கப்படும் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
அரசியலமைப்பின் பிரகாரமே பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்பட வேண்டும். அதில் ரணில் விக்ரமசிங்க உறுதியாக இருக்கின்றார்.
நாட்டில் ஜனாதிபதி இல்லாத நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக செயற்படுவது அரசியலமைப்பின் பிரகாரமாகும்.
அதனால் ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதற்கு மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய மக்கள் சக்தி அல்லது வேறு எந்த தரப்பினரும் குழப்பமடைவதில் எந்த பிரச்சினையும் இல்லை.
அத்துடன் பிரதமர் பதிவியை ஏற்றுக்கொள்வதற்கு யாரும் இல்லாத நிலையிலேயே ரணில் விக்ரமசிங்கவை அழைத்து பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ் கோரி இருந்தார். அதன் பிரகாரமே அவர் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டார். ஏனெனில் அரசியல் அனுபவம், வெளிநாடுகளுடனான தொடர்பு என அனைத்து தகுதிகளும் அவருக்கு இருக்கின்றன.
அத்துடன் தற்போது நாட்டில் ஜனாதிபதி ஒருவர் இல்லை. இந்நிலையில் பாராளுமன்றம் ஊடாக ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப்படும்வரை பிரதமர் பதில் ஜனாதிபதியாக செயற்படுவார்.
பாராளுமன்றத்தில் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட யாரும் முன்வராவிட்டால் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக செயற்படுவார்.
அடுத்த படியாக பிரதமர் ஒருவரை பாராளுமன்றம் தெரிவுசெய்ய வேண்டும். ரணில் விக்ரசிங்கவும் ஜனாதிபதி பதிவியை ; ஏற்றுக்கொள்ளாவிட்டால் சபாநாயகர் ஜனாதிபதியாக செயற்படுவார்.
மேலும் அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இல்லாமலாக்கப்படவேண்டும் என்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆரம்பத்தில் இருந்து தெரிவித்து வருகின்றது.அந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. எனவே தற்போது நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கே முன்னுரிமை வழங்கி செயற்படுவதற்கே ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுப்பார். குறிப்பாக எரிபொருள் பிரச்சினை தீர்க்கப்படவேண்டி இருக்கின்றது. சமையல் எரிவாயு பிரச்சினை தற்போது தீர்க்கப்பட்டு வருகின்றது என்றார்.